கொரோனா வைரஸ் முதியவர்களைத்தான் அதிகம் தாக்கும், குழந்தைகளுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், கோவையில்10 மாதக் குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈரோடு ரயில்வே மருத்துவமனையிலிருந்து, கோவை போத்தனூர் ரயில்வே மருத்துவமனைக்கு மாறுதலான பெண் மருத்துவருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

கூடவே, அவரின் 10 மாதக் குழந்தை, மருத்துவரின் கணவர், தாய், பணிப்பெண் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.
இவர்கள் அனைவரும் கோவை இ.எஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். தமிழகத்தில் தினம் தினம் ஏராளமானோருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டு வந்தாலும், அந்தக் குழந்தையின் உடல்நிலை எப்படி இருக்கிறதோ என்ற கவலை எல்லோரிடமும் இருந்தது. அப்படிக் கவலையில் இருந்தவர்கள் நிம்மதியடையும் வகையில், பெண் மருத்துவர் மற்றும் அந்தக் குழந்தை கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், அவர்களின் பணிப்பெண், ஸ்பெயினிலிருந்து திரும்பிய மாணவி, உடுமலைப்பேட்டை தொழிலதிபர் ஆகியோரும் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
இந்த ஐந்து பேரும் கடந்த 14 நாள்களாக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், அவர்கள் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பலமுறை கொரோனா சோதனை செய்ததில் நெகட்டிவ் என்று ரிப்போர்ட் வந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் பலத்த பாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வீடு திரும்பிய அனைவரும், தங்களை 28 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கோவையில் 300 பேருக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவற்றில், 228 பேருக்குத் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. 64 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, “கோவையில் 13,000 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யும் அளவுக்குக் கட்டடங்களும், வளாகங்களும் தயார் நிலையில் உள்ளன. மேலும் கோவை அரசு மருத்துவமனையில் மட்டும் 140 வென்டிலேட்டர் தயார் நிலையில் இருக்கின்றன. இன்னும் இரண்டு நாள்களில் கூடுதலாக வென்டிலேட்டர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வந்து சேரும். ஏப்ரல் 10-ம் தேதிக்குப் பிறகு முதல்வர் அறிவித்த ரேப்பிட் டெஸ்ட் பரிசோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

கொரோனா அறிகுறிகள் மற்றும் கொரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகளைச் சுற்றி இரண்டு கிலோ மீட்டருக்குக் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அந்தப் பகுதிகளில் மருத்துவர்கள் மூலம் பரிசோதிக்கும் பணியும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்றார்.