நாடு முழுதும் ஊரடங்கு தொடரும் நிலையில் தாங்கள் வேலை பார்த்த டாஸ்மாக் கடையிலிருந்து மது பாட்டில்களை திருடி விற்பனை செய்ய முயன்ற ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருமங்கலம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே அத்திப்பட்டி டாஸ்மாக் கடையில் அக்கினி, தர்மர் மற்றும் கந்தவேல் ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். கொரானா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் இயங்க அரசு அனுமதித்துள்ளது.
இந்த நிலையில் பல ஊர்களில் கள்ளத்தனமாக மூன்று மடங்கு கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனையாகி வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் மதுரையில் கள்ளத்தனமாக மது விற்க அனுமதித்து, தானும் மது வாங்கி சென்ற போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும், மது விற்பனை கள்ள சந்தையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் பேரையூர் அருகே உள்ள அத்திப்பட்டியில் டாஸ்மாக் கடை ஊழியர்களாகப் பணிபுரியும் அக்கினி, கந்தவேல் மற்றும் தர்மர் ஆகியோர் இன்று டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்களைத் திருடி கள்ளத்தனமாக விற்பனை செய்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து பேரையூர் டி.எஸ்.பி. தலைமையில் போலீஸார் அவர்களை வளைத்துப் பிடித்தனர். அவர்களிடமிருந்து டாஸ்மாக்கில் திருடிய 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.