கோவையில் கொரோனா அறிகுறியுடன் இருப்பவர்கள் தொடர்பாக கணக்கெடுப்பு எடுக்கச் சென்ற அங்கன்வாடி ஊழியரிடம் தகராறில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
டெல்லி சென்று வந்தவர்களுக்கு கொரோனா தொற்று அதிகளவில் உறுதி செய்யப்பட்டு வருவதால், அந்த மாநாட்டில் பங்கேற்று வருபவர்கள் தொடர்பாக அரசு கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. கோவையிலிருந்து டெல்லி சென்று வந்தவர்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணிக்காக சுகாதாரத் துறையினருடன், அங்கன்வாடி ஊழியர்கள் கோவை நகரப்பகுதிகளான போத்தனூர், கரும்புக்கடை, சாரமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கணக்கெடுப்பு பணியை செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியதுடன், பணியில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர் ஜெயந்தியை தரக்குறைவாக ஒருவர் பேசியதாக தெரிகிறது. இதுதொடர்பாக, அங்கன்வாடி ஊழியர் ஜெயந்தி அளித்த புகாரின்பேரில், கோவை சாரமேடு பகுதியை சேர்ந்த இஸ்மாயில் என்பவரை போத்தனூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் துன்புறுத்தல் தடுப்பு சட்டம், நோயை பரப்பும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ள 34 பேரில், 27 பேர் டெல்லி சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 50 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். கைது செய்யப்பட்ட இஸ்மாயில் திமுக மாநகர மாவட்ட வர்த்தக அணி செயலாளராக உள்ளார்.
புதுக்கோட்டையில் கொள்ளைபோன மதுபாட்டில்கள்: கருப்பசாமி கோயிலில் படையலிட்டு வழிபாடு!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM