டெல்லியில் நடைபெற்ற தப்லிக் மாநாட்டில் கலந்துகொண்டு அவரவர் சொந்த ஊர் திரும்பியவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை அடையாளம் கண்டு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தொற்று ஏற்பட்டது உறுதியானால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், சில ஊர்களில் மருத்துவக்குழுவினரை ஊருக்குள் நுழைய விடாமல் ஊர்மக்கள் தடுத்தும், அவர்கள் மீது தாக்குதலும் நடத்துகின்றனர்.

தூத்துக்குடியிலும், பரிசோதனை மேற்கொள்ளச் சென்ற மருத்துவக் குழுவினர் மீது ஊர் மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகிலுள்ள அய்யனார்வூத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் டெல்லியில் நடைபெற்ற தப்லிக் மாநாட்டில் கலந்துகொண்டு ஊர் திரும்பிய தகவல் வருவாய்த்துறை அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.
இரண்டு நாள்களுக்கு முன்பு அவரை, மருத்துவப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால், அய்யனார்வூத்து கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளது.

இந்த நிலையில், அவருடன் வீட்டிலிருந்த மகன், இரண்டு மகள்கள், மூத்த மகளின் ஒன்றரை வயதுக்குழந்தை ஆகியோருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா? என மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய மருத்துவக்குழுவினர் இரண்டு வாகனங்களில், இரண்டு குழுக்களாக சென்றனர்.
குடும்பத்தினரை மருத்துவ வாகனத்தில் ஏற்றும்போது, அப்பகுதியிலுள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, 108 ஆம்புலன்ஸ் முன்பாக அமர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென மருத்துவக் குழுவினரில் ஒருவரான வெள்ளாளன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார ஆய்வாளர் காளிராஜை தாக்கினர். இதில், அவரது சட்டையைக் கிழித்து, செல்போனையும் உடைத்து பைக்கையும் சேதப்படுத்தினர்.

தொடர்ந்து மருத்துவக் குழுவினரின் உதவியுடன் அந்தக் குடும்ப உறுப்பினர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கயத்தாறு காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து, தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் கயத்தாறு சுற்று வட்டாரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.