நடிகை கனிகா தனது ஊரடங்கு உத்தரவு அனுபவத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் அத்தியாவசிய பொருட்களை வாங்கிவிட்டுத் திரும்பி வரும்போது, வெறிச்சோடிப் போய் இருந்த சாலைகள் தன்னை அழவைத்ததாக குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவில், “கடந்த 10 நாட்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தேன். இன்று நான் முதன்முறையாக அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வெளியே சென்றேன். அப்போது, யதார்த்தம் நிலை என்னைத் தாக்கியது. உலகெங்கிலும் நிலவும் யதார்த்தத்தை ஜீரணிக்க முடியவில்லை. வயிற்றைப் புரட்டுவதைப்போன்ற ஒரு உணர்வு. ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் வெறிச்சோடிய சாலையைக் கடந்தபோது அழுதுவிட்டேன்.

எங்களது இயந்திர வாழ்க்கை அனைத்தும் ஒரு நிலைக்கு வந்துவிட்டது. நம்மில் பலருக்கு இந்த நேரத்தில் வருமானம் இல்லை, நாங்கள் சேமித்ததை வைத்து நிர்வகித்துக் கொள்கிறோம். இது எவ்வளவு காலம் தொடரப் போகிறது என்பது எங்களுக்குத் தெரியாது. எங்களுக்கு எஞ்சியிருப்பது நம்பிக்கை மட்டுமே” என வருத்தமாக எழுதியுள்ளார்.
ஊரடங்கு ஆரம்ப நாட்களில் கனிகா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அவர் கவலைப்படுவதைப் போன்ற ஒரு பதிவைப் பகிர்வது இதுவே முதல்முறை. அவரைப் பின்தொடர்பவர்கள் மற்றும் நண்பர்கள் பலர் இதற்குப் பதிலளித்துள்ளனர். அதில் ஒருவர் நம்பிக்கையை இழக்கக்கூடாது. இந்தக் கட்டமும் கடந்து போகும் என நம்பிக்கை தரும்படி எழுதியுள்ளார்.

கனிகா விக்ரம் நடித்துள்ள கோப்ராவில் நடித்துள்ளார். இந்தப் படம் தயாரிப்பு பணிகளில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM