இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்கும் மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் நோயாளிகளின் அருகில் செல்கையில் தற்காப்பு கவசங்கள் அவசியம். அவற்றிற்கு இந்தியாவில் தட்டுப்பாடு நிலவுவதாக பலதரப்பிலும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ள நிலையில், சைபீரிய நாட்டிற்கு 90 டன் மருத்துவ தற்காப்பு கவசங்கள் கொச்சி துறைமுகத்தில் இருந்து அனுப்பப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவி செய்யும் UNDP அமைப்பு தங்கள் ட்விட்டர் பக்கத்தில், `இந்தியாவிலிருந்து பெல்கிரேடுக்கு 90 டன் மருத்துவ தற்காப்பு உபகரணங்கள் விமானம் மூலம் வந்திறங்கி உள்ளன’ என்று பதிவிட்ட பின்னரே இந்நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதுகுறித்து கொச்சி விமான நிலையம் தரப்பில், “மார்ச் 29 ல் சைபீரியாவுக்கு 90 டன் மருத்துவ தற்காப்பு உபகரணங்கள் அனுப்பப்பட்டது. அதில், 50 டன் அறுவைச் சிகிச்சை கையுறைகள் மற்றவை முகக் கவசங்கள், உடல் கவச உடைகள் போன்ற மருத்துவப் பணியாளர்களுக்கு தேவையானவை’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

35 லட்சம் ஜோடி அறுவைச் சிகிச்சை கையுறைகள் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் வெளியில் தெரிந்தவுடன் பல்வேறு தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
The 2nd cargo Boeing 747 with 90t of medical protective equipment landed from India to Belgrade today. The transportation of valuable supplies purchased by @SerbianGov has been fully funded by the #EU while @UNDPSerbia organized the flight & ensured the fastest possible delivery. pic.twitter.com/pMZqV7dwTg
— UNDP in Serbia (@UNDPSerbia) March 29, 2020
காங்கிரஸ் கட்சியின் மனீஷ் திவாரி, “இந்தியாவில் மருத்துவ பணியாளர்கள் மருத்துவ தற்காப்புக் கவசம் கிடைக்காமல் திண்டாடி வரும் நிலையில், 90 டன் சைபீரியாவிற்கு அனுப்புவதா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வாலிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், அப்படி ஒரு நிகழ்வு நடந்தது குறித்து தனக்குத் தெரியாது என்றும் ஆராய்ந்துவிட்டு கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

“ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ள பொருள்கள் எதையும் நாங்கள் ஏற்றுமதி செய்யவில்லை. அந்த பொருள்களுக்கு தேவை ஏற்பட்டால், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசாங்கத்தின் முடிவுப்படி இறக்குமதி செய்யப்படும்” என்று அதிகாரிகள் தரப்பில் கூறியதாகத் தெரிகிறது.
முகக் கவசங்கள், சுவாசத்தைச் சீர்படுத்தும் கருவிகள், முகக் கவசம் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய முடியாது. கையுறைகளை ஏற்றுமதி செய்து இருப்பது ஏழை ரப்பர் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்றாலும் தற்பொழுது கையுறைகளுக்கு இந்தியாவில் தட்டுப்பாடு என்றும் கூறுகின்றனர். உள்நாட்டில் தேவை அதிகம் இருக்கும்போது சைபீரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.