கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.
புன்னைநல்லூர் மாரியம்மன் தரிசனம்… #worshipathome
நன்றி : செல்வராஜ் (சக்தி விகடன் வாசகர்)
– சி.வெற்றிவேல்
Posted by Sakthi Vikatan on Saturday, April 4, 2020
அவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, புன்னை நல்லூர் மாரியம்மன் ஆலயம்.
புற்று வடிவமாகவே தோன்றி சுயம்பு வடிவம் கொண்டவள், தஞ்சைக்கு அருகே அருள்பாலிக்கும் புன்னைநல்லூர் மாரியம்மன்.
அம்மன் புற்று வடிவத்தினள் என்பதால் இங்கு அபிஷேகங்கள் நடைபெறுவதில்லை. அதற்குப் பதிலாக தைலக்காப்பு செய்யப்படுகிறது. அம்மை கண்டு அவதிப்படும் பக்தர்கள், கண் நோய் கொண்டவர்கள் இங்கு வந்து தங்கி குணம் அடைந்து செல்கிறார்கள்.

சோழ மன்னர்கள் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த போது நகரைச் சுற்றிலும் எட்டுத் திக்குகளிலும் எட்டுவித தேவியரை காவல் தெய்வமாக வைத்தார்கள். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்ப்புறத்தில் உருவாக்கப்பட்ட தேவியே புன்னைநல்லூர் மாரியம்மன் என்று ‘சோழசம்பு’ நூல் கூறுகிறது. சதாசிவ பிரம்மேந்திரர் உருவாக்கிய அம்மன்தான் இன்று வழிபாடு செய்யும் தெய்வசிலையாக உருவாகி உள்ளது என்கிறார்கள்.
கோடைப்பருவங்களில் புன்னை நல்லூர் மாரியம்மனின் முகம் வியர்ப்பதை இன்றும் காணலாம். அன்னைக்கு முத்து மாரியம்மன் என்றும் போற்றப்படுகிறாள்.
ஆடி மாதப் பல்லக்குத் திருவிழா இங்கு சிறப்பானது. ஆடி மாத கடைசி ஞாயிறு அன்று இந்தத் திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பிரமாண்ட முத்துப்பல்லக்கில் பவனி வருவாள் அம்மன்.
தஞ்சை சமஸ்தானத்துக்கு உரிய இந்த ஆலயத்தில் விநாயகர், முருகர், காத்தவராயர், அய்யனார், பேச்சியம்மன், லாட சன்னாசி, மதுரை வீரன் உள்ளிட்ட சந்நிதிகளும் சுற்றுப்பிரகாரத்தில் உள்ளன.
தோல் நோய், சொறி, சிரங்கு வந்தவர்கள், வயிற்று வலி, கட்டிகள் வந்து அவதிப்படுபவர் என சகலரும் இங்கு வந்து விரதம் இருந்து புற்று மண்ணைப் பிரசாதமாகக் கொண்டு நோய் தீர்க்கிறார்கள்.
வேப்பமரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட இந்தப் புன்னை நல்லூர் மாரியம்மன் பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் மகா வரப்பிரசாதியாக அருள்புரிகிறாள்.