கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. மார்ச் மாதம் 30-ம் தேதி வரை 67 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்து வந்த நான்கு நாள்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிவேகத்தில் உயரத் தொடங்கியது. நேற்று (4.4.2020) மட்டும் 74 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது.

corona virus | கொரோனா

அதேபோல, விழுப்புரம் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்புவரை, மூன்றாக இருந்த கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நேற்றைய பரிசோதனை முடிவில் 13 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா அறிகுறியுடன் 67 நபர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு (COVID-19) சோதனைகள் நடத்தப்பட்டன. பரிசோதனை முடிவில் மொத்தமாக 13 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிலரின் ஆய்வு முடிவுகள் இன்னும் வரவில்லை. ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் இருக்கும் பகுதியில் சமூகப் பரவல் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக, விழுப்புரம் நகராட்சியில் உள்ள 6, 7, 8 வார்டுகளுக்கு சீல் வைத்து மக்கள் நடமாட்டத்துக்குத் தடை விதித்திருந்தது மாவட்ட நிர்வாகம். தற்போது எண்ணிக்கை அதிகரித்து, ஓர் உயிரிழப்பும் நிகழ்ந்துவிட்டதால், ஏப்ரல் 3-ம் தேதி முதல் 21 நாள்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் அண்ணாத்துரை உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் நகராட்சியில் உள்ள முத்தோப்பு, கமலா நகர், வாசுநகர், சிங்காரதோப்பு, இந்திராநகர், வண்டிமேடு, கீழ்பெரும்பாக்கம், பாபா நகர், பாப்பான்குளம், கந்தசாமி லே-அவுட், கே.கே ரோடு, என்.ஜி.ஓ காலனி, சாலாமேடு சென்னை ரோடு, மணிநகர் தாமரைக்குளம், வள்ளலார் நகர், விராட்டி குப்பம் ரோடு, தேர் பிள்ளையார் கோயில் தெரு ஆகிய பகுதிகளும், கோலியனூர் ஊராட்சியில் உள்ள வளவனூர், அரசு ஊழியர் நகர், கண்டமானடி ஆகிய பகுதிகளும் விக்கிரவாண்டி பேருராட்சியில் உள்ள விக்கிரவாண்டி, ஒரத்தூர் பகுதிகளும் மற்றும் திண்டிவனம் நகராட்சியில் உள்ள ராஜம்பேட்டை, மீனாட்சி அம்மன் கோயில்தெரு, உமருல்லர் தெரு, முகையூர் ஒன்றியம் கோதண்டபாணிபுரம் பகுதிகளுக்கு நேற்று முன்தினம் (3.4.2020) முதல் ஏப்ரல் 24 வரை மொத்தமாக 21 தினங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறவும், அனைத்து விதமான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இ‌ந்தப் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை உள்ளூர் நிர்வாகத்தார் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்கை மீறி மக்கள் பயணம்

Also Read: மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கோவிட்-19… இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகிறதா சீனா..?

இது ஒருபுறமிருக்க, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 51 வயது நபர் 4.4.2020 அன்று காலை 8 மணி அளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, மாவ‌ட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் மற்றும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் வழிகாட்டுதலோடு மத சம்பிரதாய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது. (தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உள்ளது.)

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டத்தில்தான் கொரோனா ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை மீறியதாக அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 289-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், தேவையில்லாமல் வெளியே வருபவர்களுக்கு மாவட்ட போலீஸார் தமது பாணியில் கவனித்தும், நூதன முறையிலும் த‌ண்டனை அளித்தும் வருகின்றனர். பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றவும் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கவும் விழுப்புரத்தில் உள்ள காய்கறி சந்தைகள் நகராட்சி மைதானத்துக்கும், புதிய பேருந்து நிலையத்துக்கும் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளன. எனினும் இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. அதனால் சமூக இடைவெளியைப் பின்பற்ற முடியாத நிலை ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் நோய்த் தோற்று பரவும் அபாயமும் நிலவியது.

வாகன ஓட்டியை எச்சரிக்கும் காவல்துறை

Also Read: `சிரமத்தைக் கடந்து உதவி செய்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது!” – கொரோனா பாதிப்பில் மிளிர்ந்த உள்ளங்கள்

இந்த நிலையில், விழுப்புரம் நகரில் உள்ள இறைச்சிக் கடைகளை புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு வியாபாரிகள் ஆட்சேபனை தெரிவித்து வந்தனர். ஆகவே, இது தொடர்பாக விழுப்புரம் நகராட்சி இறைச்சிக் கடை அருகே நேற்று வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அப்போது, ஏப்ரல் 14-ம் தேதி வரை இறைச்சிக் கடை மூடப்படுவதாக முடிவெடுத்துள்ளனர். இதனால் ஏப்ரல் 14-ம் தேதிவரை விழுப்புரம் பகுதியில் இறைச்சிக் கடைகள் திறக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.