புதுச்சேரியில் டெல்லி சென்று திரும்பிய 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், 28 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கொரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

புதுச்சேரியைப் பொறுத்தவரை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் இருக்கும் பகுதிகள் சீல் வைக்கப்பட்டிருந்தாலும், அப்பகுதியில் வசிக்கும் அரசு ஊழியர்கள், மருத்துவ ஊழியர்கள், போலீஸார் உள்ளிட்டவர்கள் பணிக்குச் செல்வதற்காக விலக்கு அளிக்கப்படுகிறது.
அரியாங்குப்பம் மற்றும் திருவண்டார்கோவிலைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரியாங்குப்பம், திருபுவனை காவல்நிலையங்களைச் சேர்ந்த போலீஸார் பணிக்கு வரவேண்டாம் என்றதுடன், அவர்களின் வீடுகளில் தனிமையாக இருக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறார் புதுவை சீனியர் எஸ்.பி ராகுல்அல்வால்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் உத்தரவில், “கொரோனா தொற்று பரவிய மண்டலத்தில் வசிக்கும் 2 இன்ஸ்பெக்டர்கள், ஒரு எஸ்.ஐ, போலீஸார், ஐ.ஆர்.பி.என் காவலர்கள் என மொத்தம் 21 பேரை அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம். அவர்கள் அனைவரும் சுகாதாரத்துறையின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பும் தருவார்கள். ஊரடங்கு முடியும் வரை 21 பேரும் பணிக்கு வரவேண்டாம் என்றாலும் அவர்கள் பணியில் இருப்பதாகவே கருதப்படும். அதேபோல ஐ.ஆர்.பி.என் காவலர்களுக்கு எப்போதும் தரப்படும் தொகையும் தரப்படும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.