மனித முயற்சிகள் எல்லாம் தோற்றுப்போகும்போது மனம் ஆறுதல் தேடி அடைக்கலமாவது இறைவனின் சந்நிதானமே. துன்பக்கடலில் நீந்துகிறவர்களுக்குத்தான் அருள் என்னும் மிதவை தேவை. இப்போது உலகமே கொரோனா சுழலில் சிக்கித் தவிக்கிறது. மனிதர்கள், இருளுக்கு அஞ்சிக் கூடடையும் பறவைகளைப்போல தங்கள் வீடுகளிலேயே முடங்கியிருக்கிறார்கள். வீட்டினுள் இருக்கிறோம், மகிழ்வாகக் கழிக்கிறோம் என்பதைத் தாண்டி ஒவ்வொருவர் மனதிலும் எங்கே நம்மை அந்த நோய் தாக்கிவிடுமோ என்கிற அச்சம் உள்ளூர இருக்கிறது. இத்தகைய அச்சங்களை விடுத்து நேர்மறையான அதிர்வுகளை நமக்குள் உருவாக்க வேண்டியது அவசியம். அதுவே, எதிர்காலம் குறித்த நம்பிக்கையை நமக்குள் உருவாக்கும். அப்படி நாம் பயனுறுவதற்காகவே நம் முன்னோர்கள் புண்ணிய தினங்களை வகுத்திருக்கிறார்கள். புண்ணிய தினங்களில் இறைவழிபாடு செய்யும்போது நம் மனம் புத்துணர்ச்சி அடைந்து அனைத்தையும் வெல்லும் ஆற்றலைப் பெறுகிறது. அப்படி சகல பாவங்களையும் நீக்கி நம்பிக்கை ஒளியை ஏற்ற வல்ல அற்புத தினமே ஏகாதசி விரதம்.

விஷ்ணு

ஏன் ஏகாதசி சிறப்பு வாய்ந்தது?

பொதுவாக, திதிகள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டவை. அமாவாசையிலிருந்து 11-ம் நாள் மற்றும் பௌர்ணமியிலிருந்து 11-ம் நாள் ஏகாதசி திதி. மனிதன் இந்திரியங்களால் இயக்கப்படுபவன். இந்த உடல் யந்திரத்தை கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் என்னும் 10 இந்திரியங்கள் இயக்குகின்றன. உடல் இயக்கமான கை, கால், உள்ளுறுப்புகள் போன்றவை கர்மேந்திரியங்கள். ஒரு பொருளின் தன்மையை நமக்கு விளக்கும் கண், காது, மூக்கு போன்றவை ஞானேந்திரியங்கள். இவற்றோடு மனம் என்னும் கண்ணுக்குத் தெரியாத இந்திரியம் நம்மை வழிநடத்துகிறது. இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு இயந்திரத்துக்கு ஓய்வு கொடுப்பதுபோல 11 என்கிற எண்ணிக்கை அடிப்படையில் அமையும் இந்தத் திதி ஓய்வுக்கான நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

உணவுதான் உடலின் இயக்கத்தை உறுதி செய்கிறது. உணவில்லாதபோது அவை ஓய்வுகொண்டு தம்மைத் தாமே புதுப்பித்துக்கொள்ளும். இதற்காகவே ஏகாதசி அன்று உபவாசம் இருக்க நம் முன்னோர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். உடல் பேசாமல் இருந்து மனம் கண்டபடி நினைவுகளால் அலைக்கழிக்கப் படக்கூடாது என்பதற்காக அன்றைய நாளை இறைவழிபாட்டில் ஈடுபடுத்த அறிவுறுத்தினார்கள். எனவேதான் ஏகாதசி அன்று நாம் புண்ணிய நாளாகக் கடைப்பிடிக்கிறோம்.

பெருமாள்

காமதா ஏகாதசி சிறப்புகள்

ஓர் ஆண்டில் மொத்தம் 24 ஏகாதசிகள் வரும். சில ஆண்டுகளில் 25- ம் வருவதுண்டு. ஒவ்வோர் ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர். பெயர் மட்டுமல்ல ஒவ்வோர் ஏகாதசியும் தனிச் சிறப்பும் பலன்களும் வாய்ந்தவை. ஏகாதசி புராணம் என்னும் நூல் ஒவ்வோர் ஏகாதசியின் சிறப்பையும் பட்டியலிடுகிறது. அவ்வாறு சைத்ர மாத (சித்திரை அல்ல) சுக்ல பட்ச ஏகாதசி காமதா ஏகாதசி என்று போற்றப்படுகிறது.

இந்த ஏகாதசி அன்று விரதத்தைக் கடைப்பிடித்தால் அது ஏழு ஜன்மப் பாவங்களையும் போக்கிவிடும் என்று கூறுகிறது புராணம். முன்னொருகாலத்தில் போகீபூர் என்னும் நகரத்தை பரம உத்தமமான மன்னன் புண்டரீகன் ஆண்டுவந்தான். அவன் அவையில் தேவர்களும் முனிவர்களும் கூடியிருப்பார்கள். அவன் அவைப் பாடகனான லலித் என்பவன் அரசவையில் பாடும்போது சிற்றின்ப சிந்தனையோடு பாடினான். இதைக் கேட்ட மன்னன் வெகுண்டு அவனை அரக்கனாகப் போகும்படி சபித்தான். லலித் அரக்கனாகிக் காடுகளில் திரிந்தான். அவன் மனைவியான லலிதா அரக்கனான தன் கணவனைப் பின் தொடர்ந்தாள். தங்களின் சாபம் எப்போது நீங்கும் என்று தவித்திருந்தவர்களுக்கு சிருங்கி முனிவரின் தரிசனம் கிடைத்தது. அவர், இவர்களின் துயரை அறிந்து, காமதா ஏகாதசி விரதத்தை எடுத்துரைத்தார். இதைக் கேட்ட லலித், லலிதா ஆகிய இருவரும் மகிழ்ந்து அடுத்துவரும் காமதா ஏகாதசி விரதத்தைப் பின்பற்றினர். அந்த நாளில் விரதமிருந்து பகவான் விஷ்ணுவை வழிபட்டனர். இதன் பலனாக அவன் தன் அரக்க ரூபம் நீங்கி, மீண்டும் தன் சுய உருவைப் பெற்றான். இருவரும் நீண்ட காலம் மகிழ்வோடு வாழ்ந்தனர்

ஏகாதசி விரதம் : கட்டாயம் செய்ய வேண்டியவை/ செய்யக் கூடாதவை

இத்தகைய சிறப்புகளை உடைய காமதா ஏகாதசியைக் கடைப்பிடிக்க கிடைக்கும் நன்மைகளைப் புராணம் பட்டியலிடுகிறது.

1. ஏழு ஜன்மப் பாவம் தீரும்

2. ஆன்மா சுத்தமாகும்

3. சாபங்கள் தீரும்

4. மூவுலகிலும் இதைப் போன்ற சுப முகூர்த்த நாள் இல்லை

5. எதிர்மறை உணர்வுகளை நீக்கி நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும்

6. தீமைகள் இல்லாத வாழ்வை அருளும்.

7. தீர்க்க ஆயுளையும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அருளும்.

கடைப்பிடிப்பது எப்படி?

பொதுவாக ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி நாராயணனை வணங்க வேண்டும். தற்போது ஆலயங்கள் எல்லாம் மூடியிருக்கிற காரணத்தால் வீட்டிலேயே இருக்கும் சுவாமிக்கு நமஸ்காரம் செய்து வழிபடலாம். சுவாமிக்கு துளசி சாத்தி பழங்கள் முதலியன நிவேதனம் செய்ய வேண்டும். அன்றைய நாள் முழுவதும் நாராயணனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். சாஸ்திரப்படி அன்று பகல் இரவு இருவேளையும் தூங்கக் கூடாது. கண்டிப்பாகப் பகலில் தூங்கவே கூடாது. அப்படி விரதமிருந்து மறுநாள் துவாதசி திதி அன்று பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

அனந்த பதம்நாபாச்சார்யர்

மேலும் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பது குறித்து அனந்த பத்மநாபாச்சார்யரிடம் கேட்டோம்.

“ஏகாதசி விரத பலன் என்பது எல்லோருக்கும் பெய்யும் பெருமழையைப் போன்றது. உலகம் முழுமைக்கும் மழை பெய்கிறபோது ஒவ்வொருவரும் அதனால் பயனடைகிறோம் அல்லவா, அதுபோன்று ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்கும் நோக்கமே லோக க்ஷேமம்தான். ஆனால், அதன் உட்பலனாக ஒவ்வொருவருக்கும் பலன் உண்டு.

மனிதர்கள் இந்த உலகில் அடையக்கூடிய மிகவும் உயர்ந்தவை எது என்று ஒரு ஸ்லோகம் சொல்கிறது. அது ஸ்வாமி புஸ்கரணி ஸ்நாநம்… ஏழுமலையில் இருக்கக்கூடிய புஷ்கரணி தீரத்தில் நீராடுவது, சத்குருகோ பாத சேவனம்… தன் குருவுக்கு பாத சேவை செய்யும் பாக்கியம், ஏகாதசி உபவாசம்… ஏகாதசி அன்று விரதமிருந்து வழிபடுவது. இவை மூன்றும் மனித வாழ்வில் மிகவும் சிறப்புகளைக் கொடுக்கக் கூடியது என்கிறது அந்த ஸ்லோகம்.

இந்தக் காலகட்டத்தில் எல்லோரும் பிரச்னையில் மூழ்கியிருக்கிறோம். எனவே, பகவானை வழிபட இந்த ஏகாதசி மிகவும் உகந்தது. அதிலும் பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை வருகிறது. எனவே, முடிந்த அளவு அவரவர் வீட்டிலேயே இருந்து பயபக்தியோடு இந்த விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பெருமாள்

தற்போது இருக்கும் சூழலைப் போன்றே ஒரு காலகட்டம் வேதாந்த தேசிகர் காலத்திலும் ஏற்பட்டது. அப்போது தேசிகர் ஸ்வாமிகள் சுதர்ஸன அஷ்டகம் பாடி மக்களின் இன்னல்களைத் தீர்த்தார். சுதர்ஸனம் என்பது பெருமாளின் ஆயுதம். பெருமாளின் பக்தர்களுக்குத் துன்பம் நேர்ந்தால் சுதர்ஸனர் ஓடிவந்து காப்பார். எனவே, எல்லோரும் தவறாமல் நாளைய தினம், “ஜய ஜய ஸ்ரீ சுதர்ஸனா… ஜய ஜய ஸ்ரீ சுதர்ஸனா’ என்று 108 முறை உச்சரிப்பது நல்லது. இதன் மூலம் தீமைகள் தீர்ந்து நன்மைகள் அதிகரிக்கும்” என்றார்.

துவாதசி (5/4/2020) பாரணை நேரம் : காலை 5.30 முதல் 7.30 மணிக்குள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.