தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்தவர் வின்சென்ட். தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜான்சி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் தூத்துக்குடியிலும் புதுச்சேரியிலும் வசித்து வருகின்றனர். வின்சென்ட்டும் ஜான்சியும் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர். ஜான்சி ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். தற்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் இருவரும் வீட்டிலேயே முடங்கி இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் தங்கள் அறையில் உள்பக்கம் பூட்டிவிட்டுத் தூங்கினர்.

போலீஸ் விசாரணையில் ஜான்சி

அதிகாலையில் எழுந்த வின்சென்ட், வீட்டின் முன் அறைக்குச் செல்வதற்காகக் கதவைத் திறக்க முயன்றுள்ளார். ஆனால், கதவு வெளிப்புறமாகத் தாழிடப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர், அந்தக்கதவை உடைத்து முன்அறைக்கு வந்தார். அந்த அறையின் பக்கத்து அறைக்குள் இருந்த பீரோ திறக்கப்பட்டும், துணிகள் கலைக்கப்பட்ட நிலையிலும், பீரோவின் உள்அறைகளில் வைக்கப்பட்டிருந்த 100 சவரன் தங்க நகைகளும் ரூ.20 ஆயிரம் ரொக்கப் பணமும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனால் பதறிப்போன வின்சென்ட் தாளமுத்துநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தூத்துக்குடி நகரக் காவல்துணைக் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். வயதான காலத்தில் வங்கியில் வைக்காமல் 100 சவரன் நகைகளை வீட்டில் வைத்தது ஏன்? என்ற கோணத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் மனைவியே நகைகளைப் பதுக்கி வைத்துவிட்டு நகைகள் திருடு போனதாக நாடகமாடியது தெரியவந்தது.

போலீஸாரின் விசாரணையில் பேசிய ஜான்சி, “ என் கணவர் வின்சென்ட், ரொம்பச் சிக்கனமானவர். சேமிக்கும் பணத்தை வைத்துக்கொண்டு நகைகளாக வாங்கிக் குவித்தார். நான் ஏலச்சீட்டு நடத்திட்டு வர்றேன். எனக்கு ஏலத்தொகை கட்டாமல் நிறைய பேர் ஏமாத்திட்டாங்க. இதனால, ரூ.10 லட்சம் வரைக்கும் கடன் இருக்கு.

வின்சென்ட் வீடு

இதுக்கு மாசம் வட்டி மட்டும் 35 ஆயிரம் ரூபாய் கட்டிட்டு வர்றேன். இந்தப் பிரச்னை என் கணவருக்குத் தெரிஞ்சும் வட்டிக்காக 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்தார். ஒவ்வொரு மாசமும் வட்டியைக் கட்ட கணவருக்குத் தெரியாம கூடுதலா பணத்தை வாங்கிக் கட்டிட்டு வந்தேன். கடன் கொடுத்தவங்களும் கடன் தொகையைக் கேட்டாங்க. இதனால, ரொம்பக் கடன் நெருக்கடியில இருந்தேன். இந்த ஊரடங்கு உத்தரவைப் பயன்படுத்தி வெளில போயி வேற ஒரு நம்பர்ல இருந்து கணவருக்குப் போன் செஞ்சு, “பேங்க்ல பாதுகாப்பு குறைபாடாக இருப்பதால், லாக்கரில் உள்ள உங்களோட நகைகளுக்குப் பாதுகாப்பில்லை.

அதனால, நகைகளை எடுத்துச் செல்லுங்கள்” எனக் குரலை மாத்திப் பேசினேன். அதை நம்பிய கணவரும், மறுநாளே லாக்கரில் உள்ள 93 சவரன் நகைகளை மீட்டு வந்தார். ஏற்கெனவே பீரோவில் 7 சவரன் நகைகள் இருந்த நிலையில் மொத்தம் 100 சவரன் நகைகள் சேர்ந்தது. இதை எப்படியாவது திருடி விற்று கடனை அடைச்சுடலாம்னு முடிவெடுத்தேன். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்ப கபசுர கஷாயம் குடிக்க வேண்டும் எனச் சொல்லி அதுல தூக்கமாத்திரையைக் கலந்து கொடுத்தேன்.

தடயவியல் சோதனை

அதைக் குடித்த பின்னர் நன்றாகத் தூங்கிவிட்டார். அவர் ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்றதும், அவரது இடுப்பிலிருந்து சாவிக்கொத்தை எடுத்து பீரோவைத் திறந்து 100 சவரன் நகையை எடுத்துச்சென்று வீட்டுக்கு வெளியே உள்ள காலி இடத்தில் புதைத்து வைத்தேன். பிறகு, வீட்டுக்குள் வந்து அறையை உள்பக்கமாகப் பூட்டிவிட்டு, பீரோவில் இருந்த துணிகளைக் கலைத்துப் போட்டுவிட்டு வீட்டுச் சாவியை பீரோவுக்குப் பின்பக்கம் தூக்கி வீசினேன்” எனக் கூறியுள்ளார்.

ஜான்சியின் மாஸ்டர் பிளானைக் கண்டுபிடித்தது எப்படி என போலீஸாரிடம் கேட்டோம். “ முதலில் அவரது வீட்டை சோதனை செய்த போது நகைகள் கொள்ளை போனது போலவே தெரிந்தது. மோப்பநாயை வைத்து சோதனை செய்ததில் சுற்றியுள்ள நான்கு தெருக்களில் சென்றது. ஆனால், யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. அந்த வீட்டிற்கும், அத்தெருவின் தொடக்கத்திலும் என இரண்டு சி.சி.டி.வி கேமராக்கள் இருந்தன. அதில் திருடர்களின் உருவம் ஏதும் பதிவாகியுள்ளதா எனச் சோதனை செய்தோம். ஆனால், அப்படிச் சந்தேகப்படும்படியான காட்சிகள் ஏதும் பதிவாகவில்லை. விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் சொன்னதும் எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

93 சவரன் நகைகள்

லாக்கரிலிருந்து நகைகளை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியதாக வின்சென்ட் கூறியதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வங்கியில் விசாரித்தபோது அப்படி எந்த வாடிக்கையாளருக்கும் போன் செய்யவில்லை எனக் கூறினார். ஜான்சி பதுக்கியது 93 சவரன்தான். ஆனா, ரவுண்ட்டாக இருக்கட்டுமே என 100 சவரன் எனச் சொல்லி எங்களையே நம்ப வைத்ததுதான் உச்சக்கட்ட ட்விஸ்ட். இதன் தொடர்ச்சியாக ஜான்சி கைது செய்யப்பட்டார்” என்றனர்.

கொரோனா வைரஸ் பீதியில் ஊரடங்கில் மக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையிலும் இப்படி ஒரு நகைத் திருட்டு நாடகத்தை நடத்திய சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.