விழுப்புரம் மாவட்டத்தில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்குச் சென்று திரும்பிய 2,070 பேர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகத் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் 65 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டுக்குச் சென்று திரும்பியர்வர்கள் என்று தெரியவந்தது.

அதையடுத்து அதில் 55 பேரை அடையாளம் கண்ட சுகாதாரத்துறை அவர்களை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி அவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியது.
அதில் 9 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து விழுப்புரத்தில் கோலியனூர், விக்கிரவாண்டி, திண்டிவனம், முகையூர் உள்ளிட்ட இடங்களில் 21-க்கும் மேற்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக அறிவித்தது மாவட்ட நிர்வாகம். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 9 பேரில் ஒருவரான சிங்காரத் தோப்புப் பகுதியைச் சேர்ந்த 51 வயதான நபருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவருக்கு ஏற்கெனவே ஆஸ்துமா பிரச்னை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு நேற்று மாலை மூச்சுத் திணறல் அதிகரித்திருக்கிறது.

அதனால் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்த நிலையிலும் இன்று காலை 7.45 மணியளவில் அவர் உயிரிழந்தார். அதையடுத்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் விராட்டிக்குப்பம் பாதையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. கொரோனா தொற்றினால் தமிழகத்தில் 2-வது நபர் உயிழந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. உயிரிழந்தவர் விழுப்புரம் வா.பகண்டை அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.