சென்னப் பட்டினத்துல நாலு குதிரை பூட்டின சாரட் வண்டி சர்வசாதாரணம்னு சொன்னாலும் நாயக்கர் மாளிகை வாசல்ல நின்னுக்கிட்டிருக்கிற சாரட் வண்டி லேசுப்பட்ட வண்டியில்ல… கண்டமனூர் ஜமீன் சாரட்!

வண்டியோட தெக்கத்தி அலங்காரம், போற வார சென்னப்பட்டின சனங்களுக்கு வேடிக்கையா இருந்துச்சு.

வேடிக்கை அதுக்கு மட்டுமில்ல… சித்ரா பவுர்ணமி கோயில் திருவிழாவுக்குக் கூத்துக்கட்ட வந்து அந்த மாளிகையில தங்கியிருக்கிறது… நாடகக்காரி ஜனகம். பெரிய சிங்காரி!

வெள்ளக்கார துரைமாரும் ஜமீன்தாரும் ஜாகிர்தாரும் அங்கன வந்து ராத்திரி தங்கிட்டுப் போறத பராக்குப் பாக்கிறவங்க, ‘ஜனகத்துக்கு சுக்கிர தசை ஆரம்பிச்சிடுச்சு’ன்னு பேசுற பேச்சு வேற! அது சரி… வந்து போனவனுக்கெல்லாம் சனி பிடிக்கப் போகுதுன்னு அப்ப எவனுக்குத் தெரியும்?

ஜனகம், ஒரு காந்த சொரூப ராணி மாதிரி தெரிஞ்சதுக்கு, அவள் குறவள்ளி வேஷத்துல கனகச்சிதமா நடிச்சது மட்டும் காரணமில்ல… ஒரு நெளிவு… ஒரு சுளிவு… அண்டினவருக்குத் தகுந்தாப்ல எப்படிக்கெப்படி சம்பாஷணை செய்றதுனு ஒரு சல்லாப இங்கிதம் தெரிஞ்சவ அவ!

கண்டமனூர் ஜமீன்தார் கண்டம கெண்டம ராமகிருஷ்ண சாமியப்ப நாயக்கர், நாடக மேடையில முன்னூத்தி சொச்சம் வெள்ளிக் காசை ஜனகத்துக்குப் பரிசா கொடுத்துட்டு, காலங்கார்த்தாலமே இந்த மாளிகைக்கு வந்து காத்திருக்கா ருன்னா… சும்மாவா..?

அல்லிக்கேணி நாயக்கர் மாளிகை டாம்பீகம் இல்லாம எப்பவுமே மவுனச் சாமியார் மாதிரி இருக்கும். (அல்லிக்கேணி – இப்போதைய திருவல்லிக்கேணியின் கோயில் பகுதி.) உள்ள நொழஞ்சதும் விஸ்தாரமான மண்டபம். கரேர்னு பத்துப் பன்னண்டு தூணு.. ஆலிலை மேல குழந்த கிருஷ்ணர் தன் காலையே இழுத்துப் புடிச்சுக் கடிக்கிற மாதிரி பெரிய படம். மயில் றெக்கை, மான் கொம்பு. மத்தபடி சாம்பிராணி புகை வாசனை சன்னமா வருது.

தூண்களைத் தாண்டி ஏழெட்டு சயன அறை. அதுல ஒரு அறையில தான் தோதகத்தி கட்டில் மேல ரெட்ணக் காலு போட்டு மீனுக்குக் காத்திருக்கிற கொக்கு மாதிரி ஜனகத்தோட முகத்தைப் பார்க்க ஜமீன் ஐயா உக்கார்ந்திருக்காரு.

பலகைப் படியில காலடிச் சத்தம் கேட்டதும் பெரிய கண்ணாடியில முகம் பார்த்து தலப்பாகைய ரெண்டு திருப்புத் திருப்பி முன் நெத்திய சீர்பண்ணிக் கிட்டாரு.

“வாங்க சுவாமி… வாங்க, வாங்க! உங்கள எதிர்பார்த்துத்தான் சீக்கிரமா குளிச்சிட்டு ஓடி வாரேன்…” கையெடுத்துக் கும்பிட்டு, இடுப்பை மட்டும் ஆட்டிக்கிட்டு வந்தாள் ஜனகம். தலைய ஒரு பக்கமா சாச்சு, ஈரமா இருந்த கூந்தல விரல்லயே கோதி, “சொல்லிருந்தா நானே உங்கள வந்து பார்த்திருப்பேன். காலை நேரத்துல என்னைப் பார்க்க வந்த ஜமீன்தாரு நீங்கதான். தேத்தண்ணி கொண்டுவரச் சொல்லியிருக்கேன்”னு உரசி நின்னா.

ஜமீன்தாரு புருவத்தைத் தூக்கி, “அரிதாரத்தோட பார்த்ததைவிட நேர்ல ரொம்ப வடிவா இருக்க ஜனகா! நாடகத்துல பாட்டுக்கு ஆட்டமும் தோதா இருந்துச்சு. உனக்கு ஜோடியா முருகனா வேஷம் கட்டினவன் கிறுக்குப் பயலாட்டம் இருந்தான். உனக்கு நிகரா ஒரு ஆள மாத்திக்கப்படாதா?”னு சொல்லி பொய்க் கோபம் காட்டினாரு. “உன்னை மட்டும் பாராட்டத் தோணுச்சு. அதான் சின்னப் பரிசு!”

“நீங்க கொடுத்த வெள்ளிக் காசா பெரிசு..? உங்க ரசனையும் பாராட்டும்தான் உசத்தி!” – ஆகாயத்துக்குக் கை காட்டினா.

“பாராட்டு மட்டும் போதுமா..? சீராட்டும் இருக்கு. உனக்குப் பூட்டிப் பார்க்க என்னென்ன கொண்டு வந்திருக்கேன் பாரு!”னு சொல்லி பெரிய பைய பிரிச்சாரு. உள்ளார சின்னச் சின்னச் சுருக்குப் பை. நகைகள் தேய்மானம் ஆகிடப்படாதுனு அலாதி அலாதியா சுருக்குப் பைல போட்டு எடுத்து வந்தத ரகம் ரகமாப் பிரிச்சு எடுத்தாரு.

நெத்திச்சூடி, நெளி வளையல், தாழம்பூச்சரம், ராக்கடி, பதக்கம், குண்டலம், குண்டு மெட்டி, மோப்புச் சங்கிலி, டோலாக்கு, ஜிமிக்கி, அட்டி, வங்கி, பேசரி, வைரத்தோடு, நவரத்தின காதோலை, ரெட்ட வடம், ரெட்டக் கொலுசு, வக்கப்பிரி, வெள்ளிக் குஞ்சம், ஒட்டியாணம், சிலம்பு, ஆரம், காப்பு மணி, சந்திரப் பிறை, சூரியப் பிறை!

ஏற்கனவே ஜனகத்துக்குக் கண்ணு ரெண்டும் பெரிசு. இதையெல்லாம் பாத்ததும் வாயும் விரிஞ்சு போச்சு.

பதக்கத்தை எடுத்து ஓடிப்போய் கண்ணாடி முன்ன நின்னு மார்புச் சேலைய விலக்கிக் கழுத்துல வெச்சுப் பாத்தா.

அவளோட பின்பக்கத்தையும் கண்ணாடியில தெரிஞ்ச முன்பக்கத்தையும் ஏக காலத்துல முழுசா ஊடுருவிப் பாத்தாரு. ஜென்மத்துல பாக்காத ஏகப்பட்ட மறைவிடங்கள். மனுசன் சூடாகிப் போனாரு. திருட்டு மாம்பழத்துக்குத் திகட்டாத ருசி.

அந்த அறைக்குள்ள சங்கீதம் எதுவும் ஒலிக்கலைனாலும் கால் பெருவிரலை மட்டும் ஏதோ லயத்துக்கு ஆட்டிக்கிட்டிருந்தார் நம்ம ஜமீன் சுவாமி. நாடகத்துல கேட்ட சங்கீதம் காதுல மெதக்குது போல.

ஜமீன்தாரு மெள்ள எந்திரிச்சு அவளோட கையப் புடிச்சு, “இந்த நெளி வளையல், எங்க அம்மாவுக்கு அவங்கம்மா போட்டது. உன் கைக்கு எவ்வளவு பொருத்தம் பாரு…” கோத்து விட்டாரு.

“இந்த நகைகள் எல்லாத்தையும் கொண்டுவந்துட்டீங்களே, உங்க ராணியம்மா அனுமதி கொடுத்தாங்களா சுவாமி..?”

“அதெல்லாம் தேவையில்லை… அனுமதி வாங்கறதா இருந்தா, என்னோட மூணு பெண்டாட்டி கிட்டயும் வாங்கணும். என்னோட அதிகாரம், வேற எந்த ஜமீனுக்கும் கிடையாது ஜனகா! வெள்ளக்காரனே என்னப் பார்த்துத் தொட நடுங்குவான். பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் எங்க அப்பாவுக்குத் தாத்தா முறை. சர்க்காருக்குக் கப்பம் கட்றதோட சரி. வெள்ளக்காரப் பயலுக என்னக் கேக்காம என் ஜமீனுக்குள்ள இப்பவும் நுழைய முடியாது தெரியுமா..? அத விடு… உனக்குப் புத்தம் புதுசா நெக்லஸும் வாங்கியிருக்கேன். திரும்பு…”

ஜமீன்தாரோட கையப் புடிச்ச ஜனகம், “இதெல்லாம் ஒரு நாள் கூத்துதானே..?” தலையக் கவுத்து கண்ணை மட்டும் தூக்கிப் பார்த்தா.

“சேச்சே… உன்னைக் கூப்பிட்டுப் போறதுனு முடிவெடுத்துட்டேன். ஒரு வாரமா ரோசனை செஞ்சு, உன் நெனப்புலயே இருந்து எடுத்த முடிவு. என்கூட வந்துரு. அந்த வைகை ஆத்துல நானே உன்னைக் குளிப்பாட்டணும். மயிலாடும்பாறை மாளிகைல வெச்சு… வேணாம்… அதெல்லாம் இங்க சொல்ல மாட்டேன். என்னோட ஜமீன் அதிகாரத்துக்கு நீயும் வந்துரு. செஞ்சு காட்டறேன்”னு மெள்ள முதுகுல தடவிக் குடுத்தாரு.

“அம்மாடியோவ்… ஆவணி அவிட்டம் வரைக்கும் என்னை இங்கயே தங்கச் சொல்லி தேவ கோட்டை ஜமீன்தாரும் துரையும் சொல்லிட்டுப் போயிட்டாங்களே… லண்டன் ராணிக்குப் பொறந்த நாளாம். பிரபுக்கள் வாராங்களாம்…”

“தேவகோட்டைக்காரன் மகா கஞ்சப் பயல். உனக்கு சல்லிக் காசு தரமாட்டான். வெள்ளத்துரை… அவனே ஒரு தேவாங்குப் பய… அவன் சொல்றதைக் கேட்டு நடந்தால, உனக்கு ஈஸ்ட்டிந்தியா கம்பெனியவா எழுதி வைக்கப்போறான்..? பேசாம என்கூட வந்துரு!”னு சொல்லி அவளோட தலையைத் தடவினாரு.

வாசல் பக்கமா நடைச் சத்தம் கேட்டு விலகி உக்கார்ந்தாரு.

“அக்கா… தேத்தண்ணீ!”

“சத்தம் போடாதடா… நீயென்ன ட்ராம் வண்டிக்கா யாவாரம் பண்ணப் போற..? வெச்சிட்டுப் போ, நான் ஊத்திக்கிறேன்…” ஜனகம் அவனோட முகத்தைத் தடவி, அஞ்சு விரலைக் குவிச்சு ஒரு முத்தம் வெச்சா.

“அக்கா, ஒரு விஷயம்… நாடகத்துக்கு போட்டா படம் புடிக்க துரையோட வந்தாரே ஒருத்தர்… அவரு காப்பி கிளப்ல இருக்காரு. உன்னக் கேட்டாருக்கா!”

“உடனே வரச்சொன்னேனு சொல்லு… ஓடிப்போய் கையோட கூப்பிட்டு வாடா என் செல்லம்…” திருப்பியும் பயலோட கன்னத்தை வழிச்சு எடுத்துத் தன் அஞ்சு விரலுக்கு ஒரு முத்தம்.

இந்த ஜாடை முத்தம் எல்லாம் தனக்குத் தான்னு நெனச்சு ஐயா சொக்கிப் போனாரு. இந்தப் பொம்பளைங்களே இப்படித்தான்… மாடியில ஒரு பொண்ணு குழந்தையத் தூக்கிப் போட்டு அடிக்கடி முத்தம் வெக்கிறாள்னா என்ன அர்த்தம்..? எதிர் மாடியில ஒரு இளவட்டப் பயல் நோட்டம் விட்டுக்கிட்டிருக் கான்னு அர்த்தம்! ஜமீன்தாரு ஜனகத்தோட உதட்டையே பாத்துக்கிட்டிருந்தாரு.

“சுவாமி! இன்னிக்கு நான் சந்தோஷமா இருக்கேன். உங்ககூட இப்பமே போட்டா படம் எடுத்துக்கணும்…” – ஜமீன்தாரு கைல வெச்சிருந்த நடை வர்ணக் கோலை அவ எடுத்துத் தயிர் கடையற மாதிரி ரெண்டு கைலயும் உருட்டி உருட்டி அவரு முகத்தையே பார்த்தா.

ஜமீனுக்குப் பேச்சு வரலை. சிலேடை பேசுறதுல, விகடம் பேசுறதுல வல்லவர்னாலும் ஜனகாவோட கொஞ்சல் சம்பாஷணையைக் கேட்டு, கசாப்புக் கடை ஆடு மாதிரி விக்கி, வெறச்சு நின்னு போனாரு.

“ஜனகா… நாடகத்துல பாடுனயே… ‘நலமான பாவலர்…’ அந்தப் பாட்டைப் பாடு. கேட்டுக்கிட்டே, உன்னை அலங்காரமா சிங்காரிச்சு விடறேன்!”

கண்ணாடி முன்னால உட்கார்ந்த ஜனகா, கண்ணாடியில தெரிஞ்ச ஜமீன்தாரு பிம்பத்துக்குக் கண்ணடிச்சுட்டு பாட ஆரம்பிச்சா.

நலமான பாவலப்

பான்மையர் பாங்குளோர்

நாட்டியப் பெண்களடியார்…

சந்தன மரத்துல எறும்பு ஊர்ன மாதிரி அவ கைல, கழுத்துல, இடுப்புல நகைகளை ஒவ்வொண்ணாப் பூட்டி, கை பட்டு, விரல் பட்டு… சபலம் உருக…

…நாகரிகமான மடபதிகளும் ரிஷிகளும்,

நந்தியுடனிருக்க வேண்டி…

அவ பாட்டுக்கு அவ பாட, இவர் பாட்டுக்கு இவர் கடைசியா ஆரத்தை எடுத்து அவள் தனங்கள்ல சரியச் சரிய இழையோடவிட்டுக் கழுத்துக்குக் கீழ ஒரு முத்தம் வெச்சு அலங்காரத்தை முடிக்கவும் ஜனகாவுக்கு தன்னையே நம்ப முடியலை!

அவ மேல மினுமினுக்கிறது அம்புட்டும் வருச நாட்டு விவசாயிகளும் குடிமக்களும் ஜமீனுக்குக் கட்டின கிஸ்தி, வரி, வட்டி, திறை!

கொஞ்சநேரங் கழிச்சு போட்டாக் காரன் வந்தான். மாளிகைக்குப் பின்பக்கமா வெளிச்சமா இருக்கிற எடம் பாத்துக் கட்டிலைத் தூக்கிப் போட்டான். காரை பெயர்ந்தது தெரியாம இருக்க, சேலை மறைப்பு தொங்கவிட்டான்.

‘பளிச்’னு அவங்க உருவம் அந்தப் பொட்டிக்குள்ள போயி பதியற சமயம், நானூறு மைல் தொலைவுல வெள்ளக்காரத் துரையினால ஜமீனுக்கு ஒரு சோதனை காத்துக் கிட்டிருக்கு!

– தொடரும்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.