அறந்தாங்கி அருகே மது கிடைக்காததால் சேவிங் லோசன் அருந்தி 2 மீனவர்கள் உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்தவர் அன்வர்ராஜா (33). இவர் பைக் வாங்கி, விற்கும் தொழில் செய்து வந்தார். ராமநாதபுரம் மாவட்டம் பேய்க்கரும்பு பகுதியைச் சேர்ந்தவர் அருண்பாண்டி (27). இவர் கோட்டைப்பட்டினத்தில் தங்கி மீன்பிடிக்கும் தொழில் செய்த வந்துள்ளார். அவரது நண்பர் அசன்மைதீன்(35) இவரும் கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்துள்ளார்.
நண்பர்களான இவர்கள் 3 பேரும் இரவு நேரத்தில் ஒன்றாக சந்தித்து மது அருந்துவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுபானம் கிடைக்காமல் அவதிப்பட்ட நண்பர்கள் சேவிங் செய்த பின்பு முகத்தில் தடவும் லோசனை வாங்கிச் சென்று சோடாவுடன் கலந்து அருந்தியுள்ளனர்.
லோசனை அருந்திய 3 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் 3 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் சிகிச்சை பலனின்றி அருண்பாண்டி, அசன்மைதீன் ஆகியோர் உயிரிழந்தனர். அன்வர்ராஜா உயிருக்கு ஆபத்தான நிலையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து கோட்டைப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM