கொரோனா பாதிப்பு உலகமெங்கும் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பரவுவதைத் தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் நலன் கருதி 21 நாள்களுக்கு, அரசு ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியுள்ள நிலையில், கொரோனா நோய்த்தொற்றலில் இந்தியா இரண்டாம் கட்டத்தில் இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம்

தமிழகத்தில் இதுவரை 411 பேர் பாதிகப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியாளரும் தங்கள் மாவட்டத்தில் கொரோனா பரவுவதைத் தடுக்க பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்திலிருக்கும் ஒவ்வொரு கிராமத்தையும் தனிமைப்படுத்தி, மக்களைக் கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்ற பல்வேறு புதிய நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மகேஸ்வரி ரவிக்குமாரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

Also Read: `தண்ணீர், உணவு எதுவும் இல்லை!’ -கொரோனா சிகிச்சையில் உள்ளோரை, மரத்தடியில் அமர வைத்த தேனி மருத்துவமனை

“கொரோனாவை எதிர்த்து இந்தியாவே போராடிக்கொண்டிருக்கு. ஊரடங்கு உத்தரவால் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மக்களின் உயிர், விலை மதிப்பற்றது. என் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொருவரையும், என் குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கிறேன். அவர்கள் ஒவ்வொருவரையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம்

கொரோனா பரவத் தொடங்கியதிலிருந்தே பல்வேறு திட்டங்களை மாவட்டம் முழுவதும் நடைமுறைக்கு கொண்டுவந்தோம். கிராமங்களில் பரவும் வதந்திகள் மூலம் மக்கள் பயப்பட்டார்கள். கொரோனா எப்படிப் பரவும், அறிகுறி தெரிந்ததும் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக வட்டாட்சியர்கள், கிராமப்புற அலுவலர்கள் மூலம் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு மக்களின் பயத்திற்கு முதலில் முற்றுப்புள்ளி வைத்தோம்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சூழலில் மக்களை வீட்டுக்குள் கட்டுப்படுத்துவது கொஞ்சம் சிரமமாக இருந்தது. அத்தியாவசியப் பொருள்களை வாங்கவும் விற்கவும் வீட்டை விட்டு வெளியே வந்து இயல்பாக நடமாடத்தொடங்கினர். அதனால் காய்கறிகள் , மளிகைப் பொருள்களை வீட்டுக்கே டெலிவரி செய்யும் திட்டத்தைக் கொண்டு வந்தோம். கொரோனா அறிகுறி இருப்பதாக டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், கிராமங்களைத் தனிமைப்படுத்தும் முடிவுக்கு வந்தோம்” என்றவர் கிராமக் குழுக்கள் குறித்த செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம்

தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் கிராமத்தைத் தனிமைப்படுத்துதல் நடைமுறைப்படுத்தப்படாத சூழலில், முதன்முறையாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்தன. ஆனால், கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க கிராமங்களைத் தனிமைப்படுத்துதல் அவசியம் என்பதால் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு குழு அமைத்தோம். அந்தக் குழுவில் கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்கள் இருப்பார்கள். இந்தக் குழுவில் உள்ள அனைவரின் தொலைபேசி எண்களும் அந்ததந்த ஊர்மக்கள் எல்லா வீடுகளிலும் எழுதி ஒட்டப்பட்டிருக்கும். மக்கள் அந்த எண்ணைத் தொடர்புகொண்டு மருத்துவ உதவிகள் அத்தியாவசியப் பொருளுக்கான உதவிகளை நாட வேண்டும்.

கிராமங்களிலிருந்து காய்கறிகள், பால் விற்பனை, மளிகைப் பொருள்கள் வாங்கி விற்கும் குழுவில் உள்ள வியாபாரிகள் மட்டுமே நகரத்துக்குச் சென்று வாங்கிவந்து, தேவைப்படுவோரின் வீட்டுக்கு நேரில் சென்று விநியோகம் செய்ய முடியும். அதேபோல் அவசர மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால், குழுவில் உள்ளவர்களின் எண்ணைத் தொடர்பு கொண்டால் போதும். அந்தப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் மருத்துவ உதவிகள் வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கவும் வழிவகை செய்துள்ளோம். அவசரச் சூழலைச் சமாளிக்க ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்பாடு செய்துள்ளோம்.

திருவள்ளூர் மாவட்டம்

டெல்லி மாநாட்டில் பங்கேற்று ஊர் திரும்பிய ஒருவரை ஊர்மக்களின் உதவியோடுதான் கண்டறிந்தோம். அவரின் மூலம் சமூகப் பரவலைத் தடுக்க அவரோடு தொடர்புடையவர்களையும் தனிமைப்படுத்தினோம். நேற்று, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன” என்றவரிடம் மக்கள் கொடுக்கும் ஒத்துழைப்பு பற்றிக் கேட்டோம்.

“ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதால் கிராமத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் பாதுகாக்க முடிவதோடு, அவர்களின் தேவைகளையும் உணர்ந்து செயல்பட முடிகிறது. மேலும், கிராமக் குழுவின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால் யாரும் பசியுடன் இருப்பதில்லை. எல்லோருக்கும் அன்றாடம் உணவு கிடைப்பதையும் உறுதி செய்ய முடிகிறது.

திருவள்ளூர் மாவட்டம்

இது என்னுடைய முயற்சி மட்டும் இல்ல. ஒட்டு மொத்த கிராம மக்களின் ஒத்துழைப்பு. மக்கள் எல்லோரும் கிராமங்கள் தனிமைப்படுத்துவதை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். கிராமங்களின் நான்கு எல்லைகளையும் கட்டைகள் கொண்டோ, பேரிகாட் கொண்டோ ஊர் மக்களே அடைத்துள்ளனர். காவலர்கள் யாரையும் நிற்க வைக்கவில்லை. ஆனால், மக்களே தங்கள் கிராமங்களைக் காக்க முன்வந்துள்ளார்கள்.

யாரையும் தேவையில்லாமல் ஊருக்குள் அனுமதிக்கக் கூடாது என்பதில் மக்கள் எல்லோரும் கவனமாக இருக்கிறார்கள். யாரும் தேவையில்லாமல் ஊரைவிட்டு வெளியே வர அனுமதி கேட்பதில்லை. எல்லோருமே சுயதனிமைப்படுத்தலை கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளனர். இப்படி ஒரு குழு அமைக்கப்போகிறோம் என்றவுடன் தானாக முன்வந்து உதவி புரிந்து வரும் தன்னார்வர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

திருவள்ளூர் மாவட்டம்

இதுபோன்ற அவசர சூழலில் மக்களிடம் ஒத்துழைப்பும் ஒற்றுமையும் மிகவும் அவசியம். கொரோனாவை நாட்டைவிட்டு விரட்டும் பொறுப்பு எல்லோருக்கும் இருப்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுவோம். கொரோனாவிலிருந்து மீண்டு வருவோம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.