தெலங்கானாவில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு இடையூறு கொடுத்ததாக கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 3,000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் டெல்லியில் நடந்த மாநாடு ஒன்றில் பங்கேற்றுத் திரும்பியவர்களில் பலருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால், அந்த மாநாட்டில் பங்கேற்றவர்களிடம் வசிப்பிடம் மற்றும் அவர்களின் சுற்றத்தார்களை பரிசோதிக்கும் பணியை பல்வேறு மாநிலங்களும் தீவிரப்படுத்தியுள்ளன.
அந்த வகையில் தெலங்கானாவில் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களின் வீடுகளைச் சுற்றி வசிக்கும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தெலங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்ய வந்த சுகாதாரப் பணியாளர்களுக்கு கவுன்சிலர் சையத் சாகீர் என்பவர் இடையூறு கொடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அந்தக் கவுன்சிலர் மீது வழக்குகள் பதிவு செய்துள்ள தெலங்கானா போலீஸார், அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கவுன்சிலர் தெலங்கானாவின் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM