கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. அதனால் மது பிரியர்களுக்குக் கடந்த சில தினங்களாக மது கிடைப்பதில்லை. மதுவுக்கு அடிமையானவர்கள், தினமும் துயரங்களை அனுபவித்துவருகின்றனர். கேரளாவில் மது கிடைக்காததால் மது பிரியர்கள் சிலர் தற்கொலை செய்துகொண்டனர்.

மதுபானம்

Also Read: மது கிடைக்காததால், ஒருவர் தற்கொலை… கேரளா துயரம்!

அதனால் அந்த மாநில அரசு, டாக்டர்கள் அனுமதித்தால் மதுபானம் வழங்கப்படும் என்று அறிவித்தது. சென்னை திருவொற்றியூரில், மதுபானம் கிடைக்காத விரக்தியில் வீரபத்திரன் என்பவர் கழுத்தை அறுத்துக்கொண்டு மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். எண்ணூரில், மனைவியிடம் மதுபானம் வாங்க பணம் கேட்ட லாரி டிரைவர் நாகராஜ், தன்னுடைய மகனால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். புதுக்கோட்டையில், மதுபானம் கிடைக்காததால் குளிர்பானத்தில் போதை தரக்கூடிய பொருளை கலந்து குடித்த இளைஞர்கள் மரணமடைந்தனர். மதுபானங்களை சிலர் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்றுவருகின்றனர். திருவொற்றியூர் பகுதியில், கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற மெடிக்கல் பிரதிநிதியை போலீஸார் கைதுசெய்தனர்.

இந்தச் சூழலில், 144 தடை உத்தரவு காரணமாக திருவள்ளூர் டிஎஸ்பி கங்காதரன், தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். திருவள்ளூரை அடுத்த காக்களூர், ஆவடி புறவழிச்சாலையில் உள்ள டாஸ்மாக் கடை வழியாக போலீஸார் ரோந்து சென்றபோது, காக்களூர் வீட்டு வசதி வாரியப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் லைட் எரிந்துகொண்டிருப்பதை போலீஸார் பார்த்தனர். உடனே அங்கு சென்றபோது, கடைக்குள் ஆள் நடமாட்டம் இருப்பதை போலீஸார் உறுதிப்படுத்தினர்.

Also Read: `கபசுர குடிநீர் #Corona-வைக் கட்டுப்படுத்துமா?!’ -தேசிய சித்த மருத்துவமனை இயக்குநர் மீனாகுமாரி பதில்

டாஸ்மாக் கடை

Also Read: `குவாட்டர் ரூ.400-தான்; போன் செய்தால் டோர் டெலிவரி’ – சென்னையில் சிக்கிய மெடிக்கல் பிரதிநிதி

கடைக்குள் திருடர்கள் நுழைந்திருக்கலாம் என சந்தேகம் அடைந்த போலீஸார், கடையைச் சுற்றி நின்றனர். பின்னர், போலீஸார் கடைக்குள் நுழைந்தனர். உள்ளே 4 பேர் நின்றுகொண்டிருந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரிடமும் போலீஸார் விசாரித்தனர்.

விசாரணையில், அவர்களில் 2 பேர் டாஸ்மாக் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் எனத் தெரிந்தது. இன்னொருவர், பார் உரிமையாளர். மற்றொருவர் பார் உரிமையாளரின் கார் டிரைவர் என்பதை போலீஸார் உறுதிப்படுத்தினர். அவர்கள் 4 பேரையும் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.

இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீஸார் கூறுகையில், “ஊரடங்கையொட்டி போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடையில் திடீரென லைட் எரிந்ததும் உள்ளே சென்று பார்த்தோம். அப்போது அந்தக் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் செந்தில்குமார் (40), ராமகிருஷ்ணன் (35), பார் உரிமையாளர் தாணு (45), அவரின் கார் டிரைவர் கேசவ பெருமாள் ஆகியோர் மதுபானங்களை எடுத்துக்கொண்டிருந்தனர். மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், கூடுதல் விலைக்கு அவற்றை விற்கத் திட்டமிட்டுள்ளனர்.

மதுபானம்

Also Read: `கடை திறந்துகிடக்கு..!’ – திருச்சி டாஸ்மாக் மேற்பார்வையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த கொள்ளையர்கள்

போலீஸாரைப் பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். ஆனால் அவர்கள் 4 பேரையும் மடக்கிப் பிடித்தோம். அவர்களிடமிருந்து 3 லட்சம் ரூபாய், 240 பீர் பாட்டில்கள், 350 குவாட்டர் பாட்டில்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் ஆகியவற்றைப் பறிமுதல்செய்துள்ளோம். மதுபானங்களைத் திருடியதாக 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருட்டில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் குறித்து டாஸ்மாக் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம்” என்றனர்.

டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகளில் திருட்டுச் சம்பவங்கள் நடந்தன. அதனால், டாஸ்மாக் கடைகளில் பூட்டுகள் உடைக்கப்படாமலிருக்க, கதவுகள் திறக்கப்படாத வகையில் வெல்டிங் வைக்கப்பட்டுள்ளது. காக்களூர் கடையின் வெல்டிங்கை உடைத்த டாஸ்மாக் ஊழியர்கள், பார் உரிமையாளர் உள்பட 4 பேர், லட்சக்கணக்கான மதிப்பிலான மதுபானங்களைத் திருடியுள்ளனர். அப்போது, லைட் எரிந்ததால் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர். செந்தில்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் இதற்கு முன்பு பணியாற்றிய டாஸ்மாக் கடையில் திருட்டு சம்பவம் நடந்தது. அந்தத் திருட்டிலும் இவர்கள் மீது சந்தேகம் உள்ளது. அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட உள்ளது” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.