இந்தியா கொரோனா தாக்கத்தால் 21 நாள்கள் ஊரடங்கில் இருந்துவரும் நிலையில், மக்களில் பலர் தங்களின் வாழ்வாதாரத்தைத் தொலைத்து முடங்கியிருக்கின்றனர். அதிலும், தினக் கூலிக்கு வேலை செய்பவர்களின் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இந்நிலையில், அமைப்புசாரா துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்குமாறு தமிழக அரசு மாநிலத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, State Civil Supplies Corporation மூலம் சுமார் 93 கோடி செலவில், 14.57 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு பொட்டலத்திலும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் எண்ணெய் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்திருக்கும் உறுப்பினர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் இந்தப் பொருள்கள் விநியோகிக்கப்படும். இதில், 24,000 பேர் பதிவு செய்யப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், 40,000 பேர் பதிவு செய்யப்படாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் 92,000 பேர் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் ஓய்வூதியம் பெறுபவர்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.
நெசவாளர்கள், காலணி தைப்பவர்கள், தோல் பொருள் உற்பத்தித் தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், தெருக்களில் விற்பனை செய்யும் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட மற்ற வாரியங்களில் பதிவு செய்த 12.5 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கும் இதே போன்ற சலுகைகளை வழங்க வேண்டும் என மாநிலத் தொழிலாளர் துறை, தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

Also Read: 1000 ரூபாய்க்கு கொரோனா விநியோகம்… சென்னை ரேஷன் கடைகளிலிருந்து ஒரு ரிப்போர்ட்!
இதற்கிடையில், பதிவு செய்யப்படாத தொழிலாளர்களை அமைப்பு சாரா துறை உறுப்பினர்களாக உடனடியாகச் சேர்க்குமாறு மத்திய அரசு, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு தொழிலாளர் துறை உயரதிகாரிகளிடம் பேசினோம். “முதல்வர் அறிவித்துள்ளபடி, தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், பிற மாநில கட்டுமானத் தொழிலாளர்கள், வாரியத்தில் பதிவு பெற்ற அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என 14,57,000 பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன. இந்த உணவுப் பொருட்கள் அடங்கிய பை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிவில் சப்ளைஸ் குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்த பை வழங்கப்படும் முறை, நாள், இடம், தேதி ஆகியவற்றை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே தீர்மானித்து அறிவிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மூலம் அறிவிக்கப்படும்” என்றார்.
21 நாள்கள் ஊரடங்கு உத்தரவுக்குப் பின்னர், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த நகரங்கள் மற்றும் கிராமங்களுக்குத் திரும்பும் முயற்சியில் இறங்கினர். பலர் போக்குவரத்து வசதிகள், உணவு, தண்ணீர் மற்றும் தங்குமிடம் இல்லாமல் தவித்தனர். மேலும் சிலரோ நடை பயணமாகவே தங்களின் சொந்த ஊருக்குச் சென்றனர். ஒரு சில மாநில அரசுகள், அந்தப் புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல சிறப்புப் பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தன. பல மாநில அரசுகள், அந்தத் தொழிலாளர்களுக்குத் தங்கும் இடம், உணவு, நீர் மற்றும் தினசரி மருத்துவப் பரிசோதனைகளுக்கு ஏற்பாடு செய்தன.
Also Read: இறைச்சியால் கொரோனா பரவுமா?
தமிழ்நாட்டில், “இதுபோன்ற அவசர நெருக்கடி நேரங்களில் நிறுவனங்கள், தங்களிடம் பணிபுரியும் விளிம்புநிலை ஊழியர்களின் நலனைக் கவனிக்கத் தவறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆடை ஆபரணங்கள் முதல் மோட்டார் வாகனங்கள்வரை சிறு, குறு, பெரும் தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், தினக்கூலிகள் முதல் தொழிலதிபர்கள்வரை பொருளாதார வீழ்ச்சியில் சிக்கிக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. மக்களிடத்தில் குறைந்துவரும் தேவை, உற்பத்தி, விநியோகத் தடைகள் போன்றவை புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும், மேலும், தற்போது பணிபுரிபவர்களின் வேலை நிரந்தரமற்றதாக மாறும் நிலை ஏற்படும் என்றும் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Also Read: லாக்-டவுண் துயரம்; லாரி மறைவில் பிரசவம்! – மரத்தடியில் தவிக்கும் ஆந்திரக் குடும்பங்கள் #MyVikatan
ஒட்டுமொத்தமாக சுமார் 13.6 கோடி விவசாயம் சாரா பணிகள் ஆபத்தில் இருக்கின்றன என்று தேசிய மாதிரி கணக்கெடுப்பு (National Sample Survey – NSS) மற்றும் Periodic Labour Force Surveys தரவுகள் தெரிவிக்கின்றன. இதில், எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் இல்லாத பணியாளர்கள், பதிவு செய்யப்படாத சிறிய வணிகங்களில் பணிபுரிபவர்கள், சுயதொழில் செய்பவர்கள் ஆகியவர்களோடு பதிவுசெய்யப்பட்ட சிறு நிறுவனங்களும் அடங்கும்.
எந்தப் பேரிடரும் வலியோரைவிட எளியோரைத்தான் அதிகம் வாட்டும் என்பதால், பசித்த வயிறுகளுக்கான அரசின் திட்டங்கள் விரியட்டும்.