`கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்ற பொன்மொழியைக் கொஞ்ச நாளைக்கு லாக்கர்ல பூட்டிவைக்கவேண்டிய சூழ்நிலையை உருவாக்கிடுச்சு கொரோனா தொற்று நோய். பக்கத்து வீட்டுக் குழந்தையை, நம் குழந்தையோடு விளையாட விட முடியாத சூழல். ஒவ்வொரு குழந்தையும் வீட்டுக்குள்ளே விதவிதமான விளையாட்டுகள், பல வகையான படைப்புகள் என பிஸியாவே இருந்தாலும், பெரியவர்களாகிய நமக்கு, நாளாக நாளாகப் பல விஷயங்களை நினைச்சு கவலையும் சலிப்பும் வர ஆரம்பிச்சாச்சு.

இன்னும் பல நாள்கள் வீட்டுக்குள்ளேதான் இருந்தாக வேண்டும். இரண்டு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பெரிய பிரச்னை இல்லை. அவங்க தங்களுக்குள்ளே அடிச்சுப்பாங்க… அடுத்த நிமிஷம் ஒண்ணாகி விளையாட ஆரம்பிச்சுடுவாங்க. ஒற்றைப் பிள்ளை இருக்கும் வீட்டில், வெளி குழந்தைகளும் வராது. தனிமை உணர்வும் நண்பர்கள் நினைப்பும் குழந்தையின் மனசுக்குள் வராமல் பார்த்துக்கணும். நாமும் நம்முடைய கவலை மற்றும் சலிப்பை குழந்தைகள் முன்னாடி வெளிப்படுத்தாமல் கவனமா இருக்கணும். பெற்றோராகிய நாம்தான் ஒற்றைக் குழந்தையின் விளையாட்டு பார்ட்னராக மாறணும். அதனால, விளையாட்டு நேரம்னு தனியாக இல்லாமல், தினமும் இயல்பாக நடக்கிற விஷயங்களிலும் குறும்பு கலந்துவிட்டால், இறுக்கமோ, சலிப்போ இருக்காது. அதற்காக, கலகலப்பான சில யோசனைகள்…

kids

புதுப்புது பெயர்கள்

வீட்டுல இருக்கிற எல்லோரும் தினமும் ஒரு புதுப் பெயரை வெச்சுக்கங்க. அந்தப் பெயரைச் சொல்லித்தான் அந்த நாள் முழுவதும் ஒருத்தரை ஒருத்தர் கூப்பிட்டுக்கணும். ஒரு நாள், பறவைகளின் பெயர். அடுத்த நாள் விலங்குகளின் பெயர். மூன்றாம் நாள், புகழ்பெற்ற சினிமா கேரக்டர்ஸ் பெயர்… இப்படி வெச்சுக்கங்க. அதையொட்டி, ஒருத்தரை ஒருத்தர் ஏதாவது செய்யவெச்சு சந்தோஷப்படலாம்.

உதாரணமா, பறவைகளின் பெயரை வெச்சுக்கிட்டா, “கிளி… குளிச்சுட்டு சீக்கிரம் வா”, “மயில், புக்ஸை எங்கே வெச்சே?”

இப்படி குழந்தைகள், பெரியவர்கள் வித்தியாசம் இல்லாமல் பெயரைச் சொல்லி கூப்பிட்டுக்கணும். அப்படி, ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கும்போது, அந்தப் பறவை அல்லது விலங்கு மாதிரி குரல் கொடுத்துட்டு ஆரம்பிக்கணும்.

நடையை மாற்று!

இன்னிக்கு முழுக்க ஓர் இடத்துல இருந்து இன்னோர் இடத்துக்கு நகரும்போது, வழக்கமா நடக்கற மாதிரி இல்லாமல், தவளை மாதிரி லேசா ஜம்ப் பண்ணி ஜம்ப் பண்ணித்தான் நடக்கணும்.

இன்னிக்கு ஒவ்வொரு தடவை மூவ் பண்ணும்போதும், கைகளை இறக்கை மாதிரி விரிச்சு படபடத்துக்கிட்டு மூவ் பண்ணணும்.

இன்னிக்கு என்ன வேலையைச் செய்யறதா இருந்தாலும், ஒரு கண்ணை மூடிட்டு, ஒரே கண்ணால்தான் செய்யணும்.

இன்னிக்கு முழுக்க பேசும்போது, வழக்கம்போல உரையாடலா இல்லாம, பாட்டுப் பாடுற மாதிரி ராகத்துடன்தான் எல்லோரும் பேசணும்.

இப்படி, விதவிதமாக ஒரு ஸ்டைலை நாள் முழுக்கப் பின்பற்றணும். மறந்துபோய் வழக்கம்போல செய்தால், ஒவ்வொரு முறையும் அவங்களுக்கு ஜாலியான பனிஷ்மென்ட்னு வெச்சுக்கிட்டா, கலகலப்பா இருக்கும்.

kids

மாற்றிப் பேசு!

ஒருத்தருக்கு ஒருத்தர் செய்கிற விஷயங்களை எதிர்மறையாக மாற்றிச் சொல்லணும். ஆனால், அர்த்தம் புரிஞ்சு செய்யணும். அதாவது, உல்ட்டாவாகப் பேசி, அதுக்கு சரியாக நடந்துக்கிறது.

“அருண், டிபன் ரெடியாகலை. குளிச்சுட்டு சாப்பிட வராதே” என்று அழைத்தால், தயாராகிவிட்டது சாப்பிட வரலாம் என்று அர்த்தம்.

“அம்மா, எனக்கு சாம்பார் ஊற்றாதே” என்றால், ஊற்ற வேண்டும் என்று அர்த்தம்.

“அப்பா, வராதீங்க விளையாட வேணாம்” என்றால், விளையாடக் கூப்பிடுவது.

“எனக்கு வொர்க் இல்லே. இப்போ போகலாம்” என்றால், வேலை இருக்கு. முடியாது என்று அர்த்தம்.

“எனக்கு போர் அடிக்கலையே. நான் என்ன செய்யறது?”

“அரை மணி நேரம் பொறுக்காதே. அதுவரைக்கும் ஏதாவது டிராயிங், ஒரிகாமின்னு செய்யாதே.”

“இல்லே… ஆனா, சொன்னபடி அரை மணி நேரத்துல விளையாட வராதீங்க.”

kids

“கண்டிப்பா வர மாட்டேன்.”

“அம்மா, நானும் ஆட்டத்துல சேர்ந்துக்க மாட்டேன்.”

இப்படிச் செய்யப்போவதை மாற்றி மாற்றிப் பேசினால், கலகலப்புடன் இருக்கும்.

வீட்டுக்குள்ளேயே இருக்கும் இந்த நாள்களில், இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் குறும்புத்தனத்தை சேர்த்துக்கிட்டா, நேரமும் ஓடும். தேவையற்ற பயம், இறுக்கம் குறையும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.