கொரோனா பரவுதல் ஒவ்வொரு நாளும் தீவிரமாகிக் கொண்டிருக்க, பிரச்னையைக் கையாளத் தெரியாமல் உலக நாடுகள் அனைத்தும் திக்குமுக்காடிக் கொண்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கில் அதிகரித்துக்கொண்டிருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, கடந்த சில தினங்களாக, ஒவ்வொரு நாளும் லட்சங்களில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இப்போதைக்கு நோயாளிகள் அதிகம் கொண்ட அமெரிக்காவில், அந்த எண்ணிக்கை ஏப்ரல் முடிவுக்குள் 2.5 லட்சத்தை தாண்டும் என அதிபர் ட்ரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.

கோவிட் 19

வரலாற்றின் பக்கங்களில், நாம் கடந்து வந்த மற்ற வைரஸ்களில் எதுவும், தன்னுடைய முதல் அலை தாக்குதலிலேயே இந்தளவுக்கு வேகமாகப் பரவியதில்லை என்கின்றனர் மருத்துவர்கள். இதற்கு முன் ஏற்பட்ட கொரோனா வகை வைரஸ்களான சார்ஸ் – மெர்ஸ் போன்றவைகூட, உலகம் முழுவதும் இந்தளவுக்கு வேகமாகப் பரவவில்லை. குறுகிய காலகட்டத்தில் குறுகிய நிலப்பரப்புக்குள் தன்னுடைய தாக்கத்தை அவை முடித்துக்கொண்டன. இன்னபிற வைரஸ்களும்கூட, தமது இரண்டாம், மூன்றாம் அலைப் பரவுதலில்தான் நாடுவிட்டு நாடு தீவிரமாகப் பரவியுள்ளன. அந்தப் பரவுதலுக்கு இடைப்பட்ட காலத்தில், பாதிப்புக்குள்ளான நாடுகள் சிக்கலைக் கையாளும் யுக்தியை அறிந்துகொண்டு, பிரச்னையை வருமுன் தடுக்கத் தயாராகியிருந்தன.

கோவிட்-19 கொரோனாவை பொறுத்தவரையில், அப்படியான ஒரு கால அளவுகோல் நமக்குக் கிடைக்கவில்லை. சீனாவில் முதல் அலை ஓய்வதற்குள், தென் கொரியாவும் சிங்கப்பூரும் கொரோனா வளையத்துக்குள் வந்துவிட்டன. அவை சுதாரிப்பதற்குள், இத்தாலி – ஜெர்மனி – அமெரிக்கா போன்றவை வந்துவிட்டன.

கோவிட் 19

Also Read: `தண்ணீர், உணவு எதுவும் இல்லை!’ -கொரோனா சிகிச்சையில் உள்ளோரை, மரத்தடியில் அமர வைத்த தேனி மருத்துவமனை

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் முதன் முதலாய் பாதிப்பு ஏற்படத்தொடங்கிய இடமான சீனா, இப்போது முதல் அலை பாதிப்பைக் கடந்துவிட்டது. இப்போதைக்கு, தனது நோயாளிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது சீனா. கடந்த ஒரு வாரத்தில் மொத்தமே 313 புதிய நோயாளிகள்தான் சீனாவில் உறுதிசெய்யப்பட்டிருப்பதாகத் தரவுகள் சொல்கின்றன. சிங்கப்பூரும் தென் கொரியாவும் இப்போது சிக்கலை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டன. ஆனால் சில நாடுகள், பிரச்னையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் விழிபிதுங்கிக்கொண்டிருக்கின்றன.

`சீனா கொரோனாவிலிருந்து மீள்கின்றது’ என சீனர்களை இப்போது பாராட்டத் தொடங்கியிருக்கின்றனர் அறிவியலாளர்கள். அவர்கள் கோட்பாட்டின்படி, நோய்க்கட்டுப்பாட்டில் சீனாவில் செய்யப்பட்ட முதலும் முக்கியமான விஷயம் லாக் டவுன்தான். ஏறத்தாழ எட்டு வாரங்களுக்கும் மேலாக, முழுவதுமாகத் தன்னை முடக்கிக்கொண்டு, நோய்ப் பரவுதலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் வூஹான் மக்கள். இதைப்பார்த்துதான், சோதனை முயற்சியாக இந்தியாவும் இப்போது லாக் டவுன் முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.

ஆனால்…

சீனா கொரோனாவிலிருந்து மீள்கின்றது என்ற வாதத்தை மறுபரிசீலினை செய்ய வேண்டிய சூழல் இப்போது ஏற்பட்டிருக்கிறது.

காரணம், கடந்த வாரம் சீனாவில் அறிகுறிகள் தெரியவந்து, அதன் அடிப்படையில் பரிசோதனை செய்யப்பட்டு, பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கைதான் அந்த 331. அறிகுறிகளே தெரியாமல், வைரஸ் தொற்றோடு ஊருக்குள் நடமாடியவர்களை இப்போதுதான் கண்டறிந்துள்ளது சீன அரசு. அந்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,541.

அறிகுறிகள் தெரியவராத நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து, கோவிட் 19, மீண்டும் எபிடெமிக்காக உருவெடுக்கலாம் என்பது மருத்துவர்களின் கணிப்பு.

சீன அரசு, மீண்டுமொரு தாக்குதல் ஏற்பட்டுவிடாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் `அறிகுறிகள் தெரியவராத’ நோயாளிகளான 1,541 பேரை, மருத்துவக் கண்காணிப்பில் தற்போது வைத்துள்ளது. இவர்களும், இவர்களோடு தொடர்பில் இருந்து தொற்று கண்டறியப்பட்டவர்களும் அடுத்த 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு, அதன்பின் வைரஸ் பரிசோதனைக்கு மீண்டும் உட்படுத்தப்படுவர் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. கொரோனா நெகட்டிவ் என முடிவு வரும்வரை இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிட் 19 – சீனா

இந்த நோயாளிகளின் எண்ணிக்கை உறுதிசெய்யப்பட்ட நோயாளிகளுக்கான பட்டியலில் வராது எனக் கூறியுள்ளனர் அதிகாரிகள். அதற்குப் பதிலாக, சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் சார்பில் `அறிகுறிகள் தெரியாத – நோய் பாதிப்புள்ள நபர்களின் எண்ணிக்கை‘ என தனியொரு தளம் உருவாக்கப்பட்டு அதில் தினமும் இந்நோயாளிகளின் எண்ணிக்கை அப்டேட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நோயாளிகளுக்கு இருமல், தும்மல் போன்ற அறிகுறிகள் எதுவும் தெரியவராது என்பதால், இவர்கள் மூலம் பரவும் விகிதமும் குறைவாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர் சீன மருத்துவர்கள்.

கோவிட் 19

மொத்தத்தில், சீனா முழுமையாக மீளத்தொடங்கிவிட்டதென்பது, இப்போதைக்கு ஏற்கும்விஷயமாக இருக்காது. சீனா மற்றொரு சிக்கலுக்குள் நுழையத்தொடங்கும் வாய்ப்புகள் அதிகம்.

ஒருவேளை அடுத்தகட்ட சிக்கலுக்குள் சீனா சென்றால், அது இரண்டாம் அலை பரவுதலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இரண்டாவது அலை பரவுதலின்போது, ஓரளவுக்கு விழிப்புணர்வோடு இருக்கலாம் என்பதால் பிரச்னையைச் சற்று எளிதாகக் கையாண்டுவிட வேண்டும் என இப்போதும் நம்புகிறது சீன அரசு. அந்த வகையில் சீனா தற்போது தீவிர சர்வதேச பயணிகள் கண்காணிப்பு – சர்வதேச பொருள் பரிமாற்றங்கள் தடுப்பு – சற்றே தளர்த்தப்பட்ட லாக்டவுன் போன்றவற்றை மேற்கொன்டு வருகிறது.

கோவிட் 19 – சீனா

Also Read: `மீண்டும் அதே வார்டில் பணியாற்ற விரும்புகிறேன்!’-கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நர்ஸ் உருக்கம்

இரண்டாம் அலையாக கொரோனா பரவுதலில் உள்ள சிக்கல் குறித்து பொது மருத்துவர் கு.கணேசனிடம் பேசினோம்.

பொது மருத்துவர் கு.கணேசன்

“இருமல் – தும்மல் போன்ற அறிகுறிகள் குறைவாகத் தெரியும் என்ற காரணத்தினால் மட்டும், நோய்ப்பரவுதலும் குறைவாகவே இருக்குமென்பதை, முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், இந்தக் கொரோனா மூச்சுக்காற்றின் மூலம்கூட பரவிவிடலாம். கூட்டமான இடங்களில் இருப்பவர்கள், பிஸிக்கல் டிஸ்டன்சிங் இல்லாமல் இருப்பவர்கள் போன்றோர் மிக இயல்பாக, தங்கள் சுவாசத்தின் வழியாகவே நோயைப் பரப்பிடுவர். ஆகவே, இதற்கும் தீவிர கண்காணிப்பு அவசியம்.

முதல் அலைப் பரவுதலைவிடவும், மிக கவனமாக இந்த இரண்டாம் அலைப் பரவுதல் கவனிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் பிரச்னை முன்பைவிட தீவிரமாகலாம். அறிகுறிகளற்ற நோயாளிகளைக் கையாளும்போது, எங்கிருந்து பாதிப்பு தொடங்கியது என்பதையும், பிரச்னை எங்கு தீவிரமாக உள்ளது என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அதைப்பொறுத்து, அந்தப் பகுதிகள் தீவிர கண்காணிப்பு வட்டத்துக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.

கோவிட் 19

இரண்டாம் அலைப் பரவலில், முக்கியமான ஒரு சிக்கல் இருக்கிறது.

இப்போதைக்கு கோவிட்-19 கொரோனாவுக்கான சிகிச்சையாக இருப்பது, `சப்போர்டிவ் கேர்’தான். அதாவது, தெரியவரும் அறிகுறிகளை முதல்நிலையிலேயே கட்டுப்படுத்துவது. இந்த நிலையில் அறிகுறிகள் கட்டுக்குள் கொண்டுவரப்படாவிட்டால், அடுத்த நிலை பாதிப்புகள் ஏற்பட்டுவிடலாம்.

இரண்டாம் அலை பரவலானது. அறிகுறிகள் தெரியவராத நோயாளிகளால் ஏற்படுவது எனும்பட்சத்தில், முதல் நிலையிலேயே அவர்களுக்குப் பிரச்னையை சரிசெய்யவோ தடுக்கவோ வாய்ப்பு குறைவுதான். நேரடியாக அடுத்தடுத்த நிலையிலேயே இவர்கள் அறியப்படும் நிலை உருவாகலாம்.

கோவிட் 19 – சீனா

இந்தச் சிக்கலைத் தவிர்க்க, முன்பே சொன்னது போல, பாதிப்பு எந்தப் பகுதியிலிருந்து தொடங்கியது என்பதையும், எந்தப் பகுதியில் பிரச்னை தீவிரமாக உள்ளது என்பதையும் கவனத்தில் கொண்டு அங்கு தீவிரமான கண்காணிப்பை அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் சீனா சிறப்பாகச் செயல்படும் என நம்பலாம்” என்றார் அவர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.