“சிறுசேமிப்பு நமது வாழ்க்கைக்கு உதவக்கூடியது. அதனால்,. சேமிப்போம். அதற்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை”
இப்படி ஒரு நிகழ்வு நடந்ததா என்பது தெரியாது. ஆனால், இந்த மாதிரியான அரசியல்வாதிகள் எல்லா காலத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவையில் அதிகம் எனலாம். தமிழக அமைச்சர்களின் உளறல்கள் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கிறது. மாஸ்க்கை நாப்கின் என செல்லூர் ராஜு சொல்லி முடித்த நிலையில், அ.தி.மு.க-வின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரான பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், ட்விட்டரில் பதிவிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

`கொரோனாவுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக இருப்பதைக் காட்டும் வகையில் ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடம் மின் விளக்கை அணைத்து, அகல் விளக்கை ஏற்றுவோம்’ எனப் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதை வரவேற்கும் வகையில் ரவீந்திரநாத் போட்ட ட்வீட் சர்சையாகிவிட்டது.
ரவீந்திரநாத் குமாரின் பதிவில், `ஒன்று கூடுவோம்! கொரோனாவை வெல்வோம்!!
நம் பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி ஜி அவர்களுடன் இணைந்து போராடுவோம்!
மின் விளக்கை அணைத்து, அகல் விளக்கை ஏற்றுவோம்!
பாரத ஒற்றுமையை உறக்கச் சொல்வோம், கொரோனா என்னும் யுத்தத்தை வெல்வோம்!’
இப்படி ரவீந்திரநாத் போட்ட ட்வீட்டில் `ஒன்று கூடுவோம்! கொரோனாவை வெல்வோம்’ எனச் சொல்லியிருக்கிறார்.

கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளத்தான் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. சமூகப் பரவலைத் தடுக்க இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கும் நிலையில், மோடியின் அறிவிப்பை நிறைவேற்ற `ஒன்று கூடுவோம்’ எனச் சொல்லியிருக்கிறார். அப்படி ஒன்று கூடுவது சரியா? அது கொரோனாவை ஒழிக்குமா?
`முழுசா பி.ஜே.பி-யாகவே மாறியிருக்கும் ரவீந்திரநாத் குமாரைப் பார்” என அ.தி.மு.க-வினரே கிண்டல் அடிக்கும் அளவுக்கு மோடியையும் பி.ஜே.பி-யைத் தொடர்ந்து புகழ்ந்து தள்ளி வருகிறார் ரவீந்திரநாத் குமார். அ.தி.மு.க-வினர் யாருமே ஏன் முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்கூட மோடியின் படத்தைப் போட்டு செய்திக் குறிப்பு வெளியிட்டதில்லை. தமிழ்நாடு தொடர்பான நிகழ்வாக இருந்தாலும்கூட ரவீந்திரநாத் போடும் ட்விட்களில் மோடி படம் தவறாமல் இடம்பெறும். அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் படங்களை எல்லாம் பேருக்கு ஸ்டாம்ப் சைஸில் போட்டிருப்பார்.
எப்படியாவது மத்திய அமைச்சர் ஆகிவிட வேண்டும் என ரவீந்திரநாத் எடுத்து வரும் தொடர் முயற்சியின் ஒரு வடிவம்தான் மோடியின் படம். இந்தியாவில் எந்தக் கட்சியும் இன்னொரு கட்சியின் தலைவர் படத்தைப் போட மாட்டார்கள். ஜெயலலிதா இருந்திருந்தால் மோடியின் படத்தைப் போடும் துணிச்சல் ரவீந்திரநாத் குமாருக்கு வந்திருக்காது எனவும் அ.தி.மு.க வட்டாரத்தில் பேசுகின்றனர். பா.ஜ.க தரப்பில் எது சொன்னாலும் அதை ஆமோதிக்கும் வகையில் தொடர்ச்சியாகப் பாராட்டு தெரிவித்து வருகிறார் ரவீந்திரநாத் குமார்.

அப்படித்தான் கொரோனாவுக்கு எதிராகப் போட்ட ரவீந்திரநாத்தின் பதிவு, சமூகப் பரவலை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. `ஒன்று கூடுவோம்! கொரோனாவை வெல்வோம்!!’ என்பது கொரோனாவை பரப்புவதுபோல் ஆகாதா என்பதற்கு ரவீந்திரநாத் குமார்தான் பதில் சொல்ல வேண்டும் என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.
ஏப்ரல் 2-ம் தேதி அவர் போட்ட ட்வீட்டில்
விழித்திருங்கள்…
விலகி இருங்கள்…
வீட்டிலேயே இருங்கள்…
கொரோனாவை தடுக்க உறுதி ஏற்போம்
எனச் சொல்லியிருக்கிறார். விலகி இருங்கள் எனச் சொல்லிவிட்டு, இப்போது ஒன்று கூடுவோம் என்கிறார். ஏன் இந்த முரண்பாடு என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் வலம் வருகிறது.