கொரோனா வைரஸ் வல்லரசு நாடான பிரிட்டனில், மக்களைப் பாடாய்ப் படுத்துகிறது. அந்த நாட்டில், சாதாரண மனிதர்கள் முதல் நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், இளவரசர் சார்லஸ் வரை கொரோனா தாக்கியுள்ளது. இச்செய்திகள் உலக மக்களுக்கு யதார்த்தத்தைப் புரிய வைத்தன. நோய்க்குப் பணக்காரன், ஏழை என்ற பேதமில்லை… தனித்திருத்தலும் சமூகப் பரவலைத் தடுப்பதும் அவசியம் என உணர வைத்தது.

கொரோனா

பிரிட்டன் சார்லஸின் அரண்மனையில் பணிபுரிந்த பணிப் பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது சில நாள்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்தப் பணிப்பெண் தனிமைப்படுத்தப்பட்டார். கொரோனா தாக்கம் பிரிட்டனில் உச்சத்தில் இருந்த சமயத்திலும், இளவரசர் சார்லஸ் தொடர்ந்து, லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இதன் காரணமாக, அவருக்குக் கொரோனா தொற்று தாக்கியிருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது.

கொரோனா தாக்கியதும் இளவரசர் சார்லஸ் தனிமைப்படுத்தப்பட்டார். அவரின் மனைவி 72 வயது கமீலாவுக்குக் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. கமீலாவுக்குக் கொரோனா தாக்கம் இல்லை என்கிற தகவல் கிடைத்தது. தொடர்ந்து, ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மைனையில் தனிமைப்படுத்தப்பட்ட சார்லஸ் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார். மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால், சில நாள்களில் குணமடைந்த சார்லஸ் வீடியோ மெசேஜ் ஒன்றை வெளியிட்டார். அதில், “நாம் அனைவரும் இப்போதும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். எனக்கிருந்த கொரோனா பாதிப்பு தக்க சமயத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் எளிதாகக் குணமடைந்தேன்.

ராணி எலிசபெத் மற்றும் பிலிப்

குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து தனித்திருப்பதுதான் நல்லது. வாழ்க்கையின் இயல்பான கட்டமைப்புகள் திடீரென இல்லாமல் போகும் போது, அது ஒரு விசித்திரமான, வெறுப்பூட்டும் மற்றும் துன்பகரமான அனுபவமாகும்” என்று இளவரவர் சார்லஸ் குறிப்பிட்டிருந்தார். கடைசியாக, கடந்த மார்ச் 12- ந் தேதி இளவரசர் சார்லஸ் தன் தாயும் பிரிட்டன் அரசியுமான 93 வயது எலிசபெத்தையும் தந்தை 98 வயது பிலிப்பையும் பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்தித்திருந்தார். ஆனால், இவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை.

கொரோனாவிலிருந்து சார்லஸ் குணமடைந்தாலும், இன்னும் கொஞ்ச நாள்கள் சார்லஸ் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வார் என்று தெரிகிறது. இதற்கிடையே , லண்டனில் உள்ள எக்ஸெல் அரங்கு 4,000 படுக்கைகளுடன் கொரோனா வைரஸ் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. 9 நாள்களில் 16,000 ராணுவ வீரர்கள் இணைந்து இந்த மருத்துவமனையை அமைத்துள்ளனர். இதற்கு, `நைட்டிங்கேல்’ மருத்துவமனை என்று பெயரிடப்பட்டுள்ளது.

மருத்துவமனையாக மாற்றப்பட்ட எக்ஸெல் மையம்

இளவரசர் சார்லஸ் நேற்று வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் இந்த மருத்துவமனையைத் திறந்து வைத்தார். இந்தச் சூழலில் இளவரசர் சார்லஸிடம் டெலிபோன் வழியாகப் பேசிய இந்தியப் பிரதமர் மோடி, கொரோனாவிலிருந்து விடுபட்டதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Also Read: `உடல் வலி; குளிர்ச்சி; நடுக்கம்’ – கொரோனா அறிகுறி தெரிந்த அடுத்தநாளே உயிரிழந்த இளம்பெண்

பிரிட்டனில் இதுவரை 33,718 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,921 பேர் பலியாகியுள்ளனர். 135 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். பிரிட்டனில் கொரோனாவால் குணமடையும் நபர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதும் அந்த நாட்டு அரசுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு 13,000 பேருக்குக் கொரோனா டெஸ்டிங் நடைபெற்று வருகிறது. இதை 25,000 என உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.