இந்தியாவில் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளுக்கு `உங்கள் ஒற்றுமையைக் காட்டுங்கள்’ என நமது பிரதமர் மோடி அழைப்பு விடுப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால், பல நேரங்களில் அதற்கு எதிர்வினையாக எதாவது செயலாற்றிவிடுகின்றனர் மக்கள். அப்படிதான் கடந்த மார்ச் 22 அன்று மக்கள் ஒற்றுமையைக் காட்ட தங்கள் வீட்டுக்கு வெளியே வந்து கைதட்டுங்கள் எனப் பிரதமர் கூற, அதற்கு எதிர்வினையாக மக்கள் ஒருபடி மேலேயே ஆரவாரமாகச் சாலையில் நடத்திய பரேடை மறந்திருக்க மாட்டீர்கள்.

தற்போதும், அப்படி மற்றொரு திட்டத்துடன் மோடி தொலைக்காட்சியில் பேச அடுத்து என்ன நடந்துவிடுமோ என்ற கலக்கத்தில் இருக்கிறது இந்தியா. ஏப்ரல் 5 (வரும் ஞாயிறு) அன்று இரவு 9.00 மணியிலிருந்து 9.09 வரை ஒன்பது நிமிடங்களுக்கும் வீட்டில் உள்ள மின்விளக்குகளை அணைத்து, டார்ச் லைட் அடித்து அல்லது அகல் விளக்கு ஏற்றி நம் ஒற்றுமையைக் காட்டச் சொல்லியிருக்கிறார் பாரதப் பிரதமர். இதனால், மோடியின் ஆதரவாளர்கள் ஆரவாரமாக இருந்தாலும், மத்திய மற்றும் மாநில மின்சார வாரியங்கள் பெரும் பதற்றத்தில் இருக்கின்றன.

PM Modi

இந்தியாவின் ஒரு நாளின் சராசரி மின் தேவை 1,60,000 MW (Mega Watts). Power System Operation Corporation Limited (POSOCO) என்ற அமைப்புதான் இந்தியா முழுவதற்குமான மின் விநியோகத்தைச் செய்து வருகிறது. பொதுவாக நாம் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கான மின்சாரத்தை விநியோகித்தால் மட்டுமே, நம் மின் விநியோக அமைப்பு நிலையாகச் செயல்படும். மிகவும் கூடுதலாகவோ குறைவாகவோ மின் பயன்பாடு இருக்கும்போது மின் விநியோக அமைப்பையும் கடுமையாகப் பாதிக்கும். சாதாரண நேரங்களில் அதுபோல குழப்பங்கள் நிகழாது.

ஆனால், ஏப்ரல் 5-ம் தேதி நாடு முழுவதும் அனைத்து மக்களும் மின்விளக்குகளை அணைப்பதும் சட்டென சில நிமிடங்களில் அதை மீண்டும் இணைப்பதும் சற்றே சிக்கலானதுதான். அது ஏன்?

Also Read: `கோப்புகளில் கிருமி நாசினி; கொரோனா அச்சம்!’ – ராஜ்நிவாஸில் முடங்கிய கிரண் பேடி

மின் பயன்பாடு அதிகரிக்கும்போதும் அல்லது குறையும்போது என்ன ஆகும்?

நாம் தினமும் பயன்படுத்தும் அளவான மின்சாரத்தை உற்பத்தி செய்து மின் வாரியம் வழங்கும். மின்சாரத்தைச் சேமித்து வைக்கும் முறை நம்மிடம் இல்லை. மிகவும் அதிக மின் சக்தியைச் சேமித்து வைப்பது என்பது இயலாத காரியம். திடீரென நாட்டில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் விளக்குகளை அணைக்கும்போது நம் தேவைக்கு அதிகமாக மின்சாரம் விநியோகம் ஆகும். அந்த நேரத்தில் மின் நிலையங்கள் (PowerPlants) மின் விநியோக அமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டு மொத்தமாக நமக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் வாய்ப்புகள் உண்டு.

POSOCO

இப்படித் தடைப்பட்டிருக்கும் மின் இணைப்பை ஒன்பது நிமிடங்களுக்குப் பிறகு திடீரென அனைவரும் ஒரு சேர உபயோகிக்கும்போது (விளக்குகளை ஆன் செய்யும்போது) அதிகமான மின் தேவைக்கு மின்சாரத்தை வழங்க முடியாமல் மின் நிலையங்கள் செயலிழக்கும் வாய்ப்புகளும் உண்டு.

ஏற்கெனவே ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்தியாவின் ஒரு நாளின் மின்சாரப் பயன்பாடு 1,25,000 MW-ஆக குறைந்துள்ளது. நாளை மக்கள் செய்யவிருக்கும் 9 நிமிட விளக்கணைப்பு மேலும் சிக்கலைக் கொண்டு வரலாம்.

Power Grid

ஊரடங்கு அமலில் இருப்பதால் அத்தியாவசிய தேவைகளைத் தவிர, மற்ற எந்த நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளும் செயல்படவில்லை. அதனால், ஒரு நாளின் சராசரி மின் பயன்பாடு குறைந்துள்ளது. ஆனால், இந்த விளக்கணைப்பு திட்டமிட்டுச் செய்யப்படும் ஒன்று என்பதால் அனைத்து மாநில மின் வாரியங்களும் ஓரளவுக்குத் தயார் நிலையில்தான் இருக்கின்றன. உத்தரப்பிரதேச மாநில மின் வாரியமானது சரியாக ஏப்ரல் 5, இரவு 9.00 மணிக்கு 3000 MW அளவுக்கு மின் விநியோகத்தை குறைக்கவிருப்பதாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழக மின் வாரியம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், அனைத்து மின் பொறியாளர்களும் ஏப்ரல் 5 மாலையில் பணியில் இருக்க வேண்டும், மின் விநியோகத்தை நிலையாக வைக்க SLDC-யின் (State Load Dispatch Centre) அறிவிப்புகளை முறையாக, சரியான நேரத்துக்குப் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: `மீண்டும் அதே வார்டில் பணியாற்ற விரும்புகிறேன்!’-கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நர்ஸ் உருக்கம்

இதற்கு முன்னர் இப்படியொரு நிகழ்வை இந்தியா சந்தித்திருக்கிறதா எனக் கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மார்ச் 22 அன்று முதல் நாடு முழுவதும் சுய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதற்கு முந்தைய நாள் இருந்த மின் பயன்பாடான 1,61,000 MW-ல் இருந்து 22-ஆம் தேதி 1,35,000 MW-ஆக மின் பயன்பாடு குறைந்தது. அதுவும் திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒன்று என்பதால் Posoco-வும் மாநில, மின் வாரியங்களும் அதைச் சிறப்பாகக் கையாண்டன.

தமிழ்நாடு மின்சார வாரியம்

அந்த ஒன்பது நிமிடங்களுக்கு விளக்குகள் மட்டும் அணைக்கப்படும் என்பதால் 10,000 – 15,000 MW வரை மின் பயன்பாடு குறைந்து பின்னர் கூடும் எனக் கணித்திருக்கின்றனர். எனவே, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களாகிய நாமும், வீட்டில் உள்ள அனைத்து மின் சாதனங்களையும் அணைத்து நம் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டியதில்லை. அது, மேலும் சிக்கலைத்தான் கொண்டு வந்து சேர்க்கும். பிரதமருக்கு நம் ஆதரவையும் தெரிவிக்க வேண்டும் என விரும்புபவர்கள் விளக்குகளை மட்டும் அணைப்பது நலம்.

ஒன்பது நிமிடங்களிள் விளக்குகளை அணைப்பதோடு மற்ற மின் சாதனங்களையும் அணைக்க வேண்டும். இல்லாவிட்டால் மின் விநியோகத்தில் ஏற்படுகிற மாற்றம் காரணமாக அவை பழுதாகிவிடும் என்ற வதந்தியும் பரவி வருகிறது. அப்படி எதுவும் ஆகாது என மத்திய மின்சக்தி அமைச்சகம் (Ministry of Power) தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தெருவிளக்குகள் அணைக்கப்பட வேண்டாம் என்றும் அமைச்சகத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளது!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.