கொரோனா வைரஸால் உலகம் முழுவதிலும் இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 50,000-க்கும் மேல் உள்ளது. ஏழை, பணக்காரன், நாட்டின் தலைவர், பிரபலம் என எதையுமே பார்க்காமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தி மொத்த மனிதக் குலத்தையும் அச்சத்தின் பிடியில் வைத்துள்ளது கொரோனா. நிலைமை இப்படியிருக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெண்களைவிட ஆண்களே அதிகம் உயிரிழப்பதாக ஆய்வு முடிகளில் தெரியவந்துள்ளது.

பெண்களைவிட ஆண்களே மூன்று மடங்கு அதிகமாக உயிரிழக்கிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பலியானவர்களின் எண்ணிக்கைபடி பார்த்தால் 71% ஆண்களும் 29% பெண்களும் உயிரிழந்துள்ளனர். இதற்கு சில காரணங்களும் கூறப்பட்டுள்ளது அதில் பெண்களைவிட ஆண்களுக்கே மது மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் அதிகம். அதேபோல் பெண்கள் பெரும்பாலும் வீட்டிலேயே இருக்கிறார்கள் தங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்கிறார்கள். ஆனால், ஆண்கள் அதிகம் வெளியில் செல்வது, தூய்மையாக இல்லாமல் இருப்பதும் காரணமாக கூறப்படுகிறது.
மேலும் கைகழுவுவதைப் பெண்கள் தீவிரமாகக் கடைப்பிடிப்பதாகவும் ஆண்கள் அலட்சியமாகச் செயல்பட்டு வைரஸ் அறிகுறி இருந்தால் கூட விரைவில் மருத்துவமனை செல்வதில்லை என்றும் அதனால் வைரஸின் தீவிரம் அதிகரித்து உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இல்லாமல் பெண்களின் மன தைரியமும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. `கொரோனா வைரஸ் மூச்சுக் குழாயையும் நுரையீரலையும் அதிகம் பாதிக்கும், அப்படி புகைபிடிப்பவர்களுக்கு இயல்பிலேயே நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதால் அதனுடன் வைரஸ் தொற்றும் இணைந்து ஆண்கள் உயிரிழக்கின்றனர்’ என இந்தியாவின் பொது சுகாதார அறக்கட்டளை இயக்குநர் டாக்டர் ஸ்ரீநாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.

அதேபோல் பெண்களின் ஹார்மோன்களில் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதும் உயிரிழப்புகள் தடுக்கப்படுவதற்குக் காரணம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இதே போன்ற அபாயங்களை எதிர்கொள்வதில் ஆண்களைவிடப் பெண்களே திடமிக்கவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.