காரைக்கால் ஹஜ்ரத் திவான் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். ஆனால், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக இன்று நடைபெறவிருந்த கந்தூரிக்கான கொடியேற்ற விழா நிறுத்தப்பட்டது. இவ்விழா நடக்கும் என்று அ.தி.மு.க எம்.எல்.ஏ-வும், நடக்காது எனத் தி.மு.க முன்னாள் அமைச்சரும் வலைதளங்களில் மோதிக்கொண்டதுதான் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது.

காரைக்கால்

காரைக்கால் தெற்கு தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ அசனா அலுவலகம் வெளிட்ட செய்தியில், “காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், வருடா வருடம் சிறப்பாக நடைபெறும் காரைக்கால் ஹஜ்ரத் திவான் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா வருடாந்தர கந்தூரி கொடியேற்றும் விழாவை இந்த இக்கட்டான கொரோனா நோய்த்தொற்று சூழ்நிலையில் முத்தவல்லிகள் ஐந்து நபர்களுக்கும் மற்றும் துஆ ஓதுவதற்கு ஒருவருக்கும் மட்டும் அனுமதி அளித்து வருடா வருட நடைபெறும் விழாவை தடை படாமல் நடைபெற மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மாண்புமிகு தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசனா வலியுறுத்தியதைத் தொடர்ந்து ‘ஒரு மினாராவிற்கு கொடியேற்ற மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்து உள்ளார்’. மாவட்ட நிர்வாகம் அளித்த அனுமதியை பொதுமக்கள் மீறாமல் வீட்டில் இருந்தே துஆ செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேற்கண்ட செய்திக்கு தி.மு.க முன்னாள் அமைச்சர் நாஜிம் கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் அனைத்துமே பூட்டிக் கிடக்கின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு கந்தூரி விழாவை மாவட்ட நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. ஐதிகத்திற்காக பெரிய கொடிமரத்திற்குப் பதிலாக சிறிய கொடிமரம் வைத்துக் கொடியேற்றம் நடத்தலாம் என்றாலும்கூட அந்தக் கொடிமரமும் அகற்றப்பட்டுவிட்டது. இந்நிலையில், பொறுப்பு வாய்ந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், கொடியேற்றம் வழக்கம்போல் நடைபெறும் என்றும், ஒரு மினராவில் மட்டும் கொடியேற்ற மாவட்ட ஆட்சியர் அனுமதி தந்துள்ளார் என்றும் தவறான தகவலைப்  பதிவிட்டுள்ளனர். இன்று  நாடு இருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் பிரதமரும் முதலமைச்சரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க படாதபாடுபட்டு வரும் வேளையில், உண்மைக்குப் புறம்பான செய்தியை சிறுபிள்ளைத்தனமாக ஒரு சட்டமன்ற உறுப்பினரே பதிவிடக் கூடாது. இதனால் காரைக்கால் அமைதிக்கு பங்கம் ஏற்பட்டுவிடும் என்று அஞ்சுகிறேன். எனவே, யாராக இருந்தாலும் தவறான செய்தியை பதிவிடக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

கொரோனா

இதற்கிடையில் மாவட்ட பா.ஜ.க-வினர், “ஆலயங்கள் பூட்டிக்கிடக்கின்றன. கோயில் திருவிழாக்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன. இந்நிலையில் கந்தூரி விழாவிற்கு மட்டும் அனுமதி அளித்தால் நன்றாக இருக்காது” எனக் கண்டனத்தை பதிவு செய்தனர். இறுதியில் இன்று நடைபெறவிருந்த கொடியேற்ற விழா நிறுத்தப்பட்டுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.