கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.
அவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வர் ஆலயம்.
சோழ நாட்டில் காவிரி வடகரையில் அமைந்துள்ள சிவத் தலம், திருக்கடம்பூர். தற்போது மேலக்கடம்பூர் என வழங்கப்படுகிறது. இவ்வூர் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயிலுக்கு அருகே இருக்கிறது.
கடம்பூர் திருக்கோயில் `கரக்கோயில்’ வகையைச் சார்ந்தது. நான்கு சக்கரங்களுடன் கிழக்கு நோக்கிய குதிரைகள் பூட்டப்பெற்ற நிலையில் தேர் வடிவிலான கட்டுமானம் கொண்டது.

இந்தத் திருக்கோயிலில் அருள்புரிபவர் அமிர்தகடேஸ்வரர். தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்து அமுதத்தைப் பெற்றனர். முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடாமல் அமுதுண்ண முடிவு செய்தனர். அதனால் அந்த அமிர்தத்தைக் கவர்ந்த விநாயகர் மறைத்து எடுத்துவரும் வழியில், பூலோகத்தில் ஒரு துளி அமிர்தம் கடம்பவனக் காட்டில் விழுந்தது. அதுவே, சுயம்பு லிங்கமாக மாறி அமிர்தகடேசுவரராக உருக்கொண்டு அருள்பாலிக்கிறது.
முதலாம் ராஜேந்திர சோழன், தமது வங்கப் படையெடுப்பின்போது, வங்கத்தின் இரண்டாம் மகிபாலனை வென்று, அங்கிருந்த தசபுஜ ரிஷப தாண்டவமூர்த்தி எனும் பஞ்சலோக விக்கிரகத்தினை வெற்றிச்சின்னமாகக் கொண்டுவந்தார். அவரே தற்போது மேலக் கடம்பூரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார்.

இந்திரன் ருத்திர கோடி ஜபம் செய்து வழிபட்ட தலம் இது. இந்திரனின் தாய் அதிதி தினந்தோறும் வழிபடும் மகிமை கொண்டது இந்தத் தலம். அஷ்டமி திதி இரவில் வணங்கவேண்டிய கால பைரவர், இக்கோயிலின் விசேஷம். சனி பகவான் இங்கே கழுகு வாகனத்தில் காட்சி தருகிறார். அதனால், இங்கு வழிபட்டால் சனி தோஷம் யாவும் மறைந்து போகும்.
பெரும்பாலான கோயில்களில் ஐம்பொன் விக்கிரகமாக அருளும் நடராஜரும் சிவகாமி அம்மையும் இங்கே கல்லால் ஆன மூர்த்திகளாகவே எழுந்தருளியுள்ளார்கள். கருவறை தேவகோட்டத்தில் ஆலமர்செல்வன் கட்டுமலை ஒன்றின்மேல் காளை மீது அமர்ந்து ஞானமூர்த்தியாகவும், அதன் மேல் மாடத்தில் யோகப்பட்ட நிலையில் கையில் வீணையுடனும் முதல் தளத்தில் நின்றபடி வீணாதரராகவும் அருள்கிறார். இவரை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

இந்தத் தலத்தில் மட்டுமே காணக்கிடைக்கும் தசபுஜ ரிஷப தாண்டவமூர்த்தி பிரதோஷ மூர்த்தியாக அருள்புரிகிறார். இவரை பிரதோஷம் அன்று மட்டுமே தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தரிசித்தால் ஆனந்தம் பெருகும்.