`ஊரடங்கு நேரத்தில் வருமானம் இல்லாத நிலையில், ரேஷனில் வழங்கப்பட்ட மோசமான அரிசியை எப்படி சாப்பிட்டு உயிர் வாழ முடியும்?’ என்று வீடியோ வெளியிட்ட மதுரையைச் சேர்ந்த நடைபாதை வியாபாரியின் குடும்பத்துக்கு உதவி செய்திருக்கிறார் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

மதுரை அருள்தாஸ்புரத்தில் உள்ள நடைபாதை வியாபாரியான நாகராஜின் குடும்பம், கொரோனா ஊரடங்கால் கடந்த 22-ம் தேதி முதல் வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்த நிலையில், ரேஷனில் அரிசி போடும் நாளுக்காகக் காத்திருந்தது.
கடந்த 2-ம் தேதி, முதல் ஆளாகச் சென்று ரேஷனில் பொருள்களை வாங்கிவந்தவர், அந்த அரிசியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். புழு பூச்சிகளுடன் கல்லும் மண்ணும் கலந்து, சமைக்கத் தரமற்ற நிலையில் இருந்தது. அரிசியை ரேஷன் கடையில் திருப்பி அளிக்க முடியாத நிலையில், அதை வீடியோவாகப் பதிவுசெய்து தெரிந்தவர்களுக்கு அனுப்பினார்.

அரிசியை மாற்றிக் கொடுப்பதாக ரேஷன் கடை தரப்பில் கூறியுள்ளனர். இந்த நிலையில், அவருடைய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பார்த்திருக்கிறார். ‘நாகராஜ் குடும்பத்துக்கு உடனே உதவி செய்யுங்கள்’ என மதுரை மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
இதையடுத்து, மாவட்ட அமைப்பாளர் மூவேந்திரன், துணை அமைப்பாளர் வழக்கறிஞர் அன்புநிதி, அறிவுநிதி உட்பட இளைஞரணி நிர்வாகிகள் நாகராஜ் குடும்பத்துக்கு உதவி செய்துள்ளனர். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அன்புநிதி, “இளைஞரணி சார்பில் ஊரடங்கு அறிவித்த நாளிலிருந்து ஆதரவற்றவர்களுக்கு உணவும் ஏழ்மை நிலையிலுள்ளவர்களுக்கு உணவுப்பொருள்களும் முடிந்தவரையில் கொடுத்துவருகிறோம்.

இதைப் பற்றி இளைஞரணியின் மாநிலச் செயலாளர் எங்களுக்கு தெரிவித்தவுடன், நாங்கள் மாவட்ட அமைப்பாளர் மூவேந்திரன் தலைமையில் நாகராஜ் வீட்டுக்குச் சென்று 50 கிலோ பொன்னி அரிசி, 2 மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை வழங்கினோம். மேலும், அவருடைய பிள்ளைகள் படிப்புக்கு உதவி செய்வதாகக் கூறி வந்தோம். இதுபோல் ஆதரவற்ற இன்னும் சிலருக்கும் உதவிகளை வழங்கிவருகிறோம்” என்றார் உற்சாகத்துடன்.