“கார்த்திக்குப் படம் பண்ணலாம்னு முடிவு பண்ணி அவர்கிட்ட கதை சொன்னேன். அவருக்கு நான் சொன்ன ஸ்க்ரிப்ட் பண்றதுல பெரிய உடன்பாடில்ல. `சார், உங்ககிட்ட ‘ரன்’ மாதிரியான படம் எதிர்பார்த்தேன். ஏற்கெனவே ‘பருத்திவீரன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ படங்கள்லாம் கிராமத்து லுக்லதான் இருக்கு. அதனால மாடர்ன் கதை சொல்லுங்க’னு சொன்னார். `சரி ஓகே ப்ரதர். கதை அமைஞ்சா கூப்பிடுறேன்’னு சொல்லிட்டு வந்துட்டேன். அதுக்கு அப்புறம் பாண்டிசேரிக்கு ஸ்க்ரிப்ட் வேலைக்காகப் போயிருந்தேன். அங்கதான் ‘பையா’ படத்தோட ஒன்லைன் தோணுச்சு. அதுக்குப் பிறகு உதவி இயக்குநர்களோட சேர்ந்து கதையை வடிவமைச்சேன். எனக்கே இந்தப் படத்தோட கார், காதல்னு ஒருவிதமான மூட் பிடிச்சிருந்தது. கார்த்திக்கிட்ட கதை சொன்னேன். அப்ப அவர் ஹைதராபாத்ல `ஆயிரத்தில் ஒருவன்’ ஷூட்டிங்ல இருந்தார். `ஸ்க்ரிப்ட் ரொம்ப புதுசா இருக்கு சார். எனக்கு ரொம்ப புதுசா தெரியுது’னு சொன்னார்.”

கார்த்தி – தமன்னா

“இப்படிதான் புராஜக்ட் டேக்ஆஃப் ஆனது. இந்தப் படத்தோட மேக்கிங் ரொம்ப கஷ்டமா இருந்தது. பெரிய வேலை வைக்கும்னு கொஞ்சமும் எதிர்பார்க்கல. ஏன்னா, ஒரு கார் அதுல ரெண்டு பேர்னு சிம்பிளா நினைச்சிட்டேன். ஆனா, படத்தோட ஷூட்டிங் எடுக்க மூணு கார் வரைக்கும் நம்ம கையிலே எப்பவுமே இருக்க வேண்டிய சூழல் இருந்தது. தவிர, மும்பையில இருந்து ட்ரங்க் கொண்டு வந்து அதுக்கு மேல காரை நிறுத்தியெல்லாம் ஷாட்ஸ் எடுத்தோம். எப்பவுமே 15 பைக்கும் கையில இருந்துகிட்டே இருக்க வேண்டிய சூழல் ஆகிடுச்சு. என்னோட சொந்தத் தயாரிப்பா இருந்தாலும் கொஞ்சமும் காம்பரமைஸ் எடுத்துக்கமா பண்ணேன். அந்த நேரத்துல கார்த்திக்கும் பெரிய பட்ஜெட் இருந்தது. குறிப்பா, யுவன்ஷங்கர் ராஜா சாரின் மியூசிக்கும் படத்துக்குப் பெரிய பிளஸா இருந்தது. படம் ரிலீஸானப்ப எல்லா மியூசிக் விருதுகளும் எங்க படத்துக்குதான் கிடைச்சது. படம் ரிலீஸான மூணு நாள் வரைக்கும் படம் சுமார்தானு டாக் இருந்திருக்கு. அது எனக்குத் தெரியல. சேரன், பார்த்திபன் சார்லாம் படம் பார்த்துட்டு, `படம் ரொம்ப நல்லாயிருக்கு. இதை ஏன் நல்லாயில்ல’னு சொல்றாங்கனு கேட்டப்பதான் எனக்கே படம் பற்றின டாக் தெரியவந்துச்சு. அப்ப கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.”

“அதுக்குப் பிறகு படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. கார்த்தியோட கரியர்ல இந்தப் படத்தோட வசூல் மைல்கல்தான். சேலம்ல இன்னும், ‘இந்தப் படத்தோட வசூலைத் தாண்ட முடியல பெரிய கூட்டம் வெளியே நின்னுச்சு’னு சொல்லுவாங்க. ‘அடடா மழை’ பாட்டுக்கு பொண்ணுங்க செமயா டான்ஸ் ஆடினதா விநியோகஸ்தர்கள் சொன்னாங்க. தமிழ் மட்டுமல்லாம தெலுங்குல ‘Awara’னு டப் பண்ணி வெளியிட்டோம். அங்கயும் படம் ஹிட். தமிழ்நாடு ரிலீஸ் தயாநிதி அழகிரி வாங்கியிருந்தாங்க. தம்பி போஸ், `படத்தைப் போட்டுக்காட்ட மாட்டேன். ஏன்னா, நீங்க படம் பார்த்துட்டு வாங்காம விட்டுடீங்னா வேற யாரும் வாங்க வரமாட்டாங்க. அதனால, ஒப்பந்தம் போட்டுட்டதுக்குப் பிறகு படம் காட்டுறேன்’னு கடைசியா படத்தைப் போட்டான். படம் பார்த்ததுக்குப் பிறகு இவங்களுக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆண்டனியோட எடிட்டிங், பிருந்தாசாரதி வசனம், மதியோட ஒளிப்பதிவு, ராஜீவனின் கலைனு எல்லாமே படத்துக்குச் சரியா அமைஞ்சது. குறிப்பா முத்துக்குமாரின் பாடல் வரிகள். இந்தப் படத்துக்காக அவர்கிட்ட போனப்ப காட்சியைக் கேட்டுட்டு வரியை அப்படியே வாயில சொல்ல ஆரம்பிச்சிட்டார். ரொம்ப அழகான வரிகளுக்குச் சொந்தக்காரர். உயிரோட இருந்திருந்தா எத்தனை நல்ல பாடல்களைக் கொடுத்திருப்பார். ‘பையா’ ரிலீஸாகி பத்து வருஷம் ஆகியிருந்தாலும் இப்பதான் ரிஸீஸான மாதிரி இருக்கு. சில விஷயங்களுக்குக் காலமே கிடையாது.”

“முதல்ல படத்தோட ஹீரோயினா நயன்தாராவை கமிட் பண்ணுனோம். ஆனா, சில காரணங்களால பண்ண முடியல. இந்த வருத்தம் இதுவரைக்கும் ரெண்டு பேருக்கும் இருக்கு. அவங்களுக்கு ஏத்த சரியான கதை அமையுறப்போ ரெண்டு பேரும் வேலை பார்ப்போம். தமன்னாவும் ரொம்ப அழகாக நடிச்சிருந்தாங்க. பைபாஸ் ரோட்டுலதான் படத்தோட ஷூட்டிங் பெரும்பாலும் இருந்தது. அந்த நேரங்கள்ல என்கிட்ட கேரவன் இல்லாம இருந்திருக்கு. அப்பலாம் ட்ரெஸ் மாத்துறதுக்கு ரெண்டு பொண்ணுங்க புடவை புடிச்சிட்டு நிப்பாங்க. தமன்னா சிரமம் பார்க்காம அதுக்குள்ள போயிட்டு வந்து மாத்தியெல்லாம் கொடுத்திருக்காங்க. ஒரு கம்ஃபோர்ட் ஜோன்லதான் எங்ககூட வேலை பார்த்தாங்க. ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மனைவி பிரியா காஸ்ட்டியூம் டிசைனரா வேலை பார்த்திருந்தாங்க. ரொம்ப நேர்த்தியான ஆடைகளைக் கொடுத்தாங்க. கார்த்தியை முதன்முதலா வெஸ்டர்ன் லுக்ல அழகாக காட்டியிருப்பாங்க.”

“ கார்த்தி நல்லா கார் ஓட்டுவார். இது பெரிய பிளஸா இருந்தது. கார்த்திக்கு ரொம்ப ரிஸ்கான ஷாட் இருந்தது. டிராவல் மாதிரியான படம்னு நிறைய ரெஃப்ரன்ஸ் எடுத்து வெச்சிருந்தேன். ஏன்னா, இந்த மாதிரியான ஷாட், லொகேஷன்ல எந்தப் படமும் வந்ததில்லை. அதனால, `இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம்’னு யாரும் சொல்லிடக் கூடாதுனு ரொம்ப மெனக்கெட்டு இருந்தேன். ப்ரியதர்ஷன் சார் படம் பார்த்துட்டு, `மேக்கிங் நல்லாயிருக்கு. எனக்குப் பிடிச்ச படம்’னு சொல்லிட்டு வீட்டுக்குக் கூப்பிட்டு ட்ரீட் கொடுத்தார். படத்தோட கதைக்களம் பெங்களூர் டு மும்பைனு முடிவு எடுத்ததுக்குப் பிறகு இந்த ரூட்ல ஒரு டிராவல் போயிட்டு வந்தேன். எங்க எல்லாம் ஷூட் பண்ணலாம்னு பார்த்துட்டு வந்தேன். கனல் கண்ணன்தான் ஃபைட் மாஸ்டர். இதுக்கு முன்னாடி கார்த்திக்குக் கிடைக்காத அனுபவமெல்லாம் இந்தப் படத்துல கிடைச்சது. கிட்டத்தட்ட நூறு நாள் வரைக்கும் படத்தோட ஷூட்டிங் நடந்தது. வாகமன், பூனே, பெங்களூர், மும்பைனு நிறைய லொகேஷன் போனோம். இந்தப் படத்தோட ஷூட்டிங் மட்டும் ஒன்றரைக் கோடி வரைக்கும் செலவு பண்ணி ஒரு ஸ்டூடியோவுல எடுத்திருந்தோம். அதுக்குப் பிறகு திருப்தி கிடைக்காதனால ரிலீஸுக்கு முன்னாடி க்ளைமாக்ஸ் மாத்தி ராமோஜி ஃபிலிம் சிட்டில எடுத்தேன். ரஜினி சார் படம் பார்த்துட்டு,`ஒரு ரெண்டு காட்சி ரோட்ல எடுக்குறதே கஷ்டம். நீங்க படம் முழுக்க ரோட்ல எடுத்து பிச்சிட்டீங்க’னு சொன்னார். பர்சனலா இந்தப் படம் எனக்கு மனசுக்கு நெருக்கமான ஒண்ணு” என்றவரிடம் ‘பையா 2’ பற்றிக் கேட்டோம்,

“இந்தப் படத்தோட ரெண்டாவது பாகத்தை எடுக்கணும்னு நினைச்சது இல்லை. ஏன்னா, ஒரு முறை நடக்குற ஒரு விஷயம் ரியலா ஃப்லோவுல நடக்கும். திரும்ப இன்னொண்ணு பண்ணணும்னு நினைக்குறப்போ வலுக்கட்டாயாமப் பண்ணுவோம். அப்ப, அந்த ஃப்லோ இல்லாமப் போகலாம். இதனால சில ஓப்பிடுகள் பண்ண ஆரம்பிச்சிருவோம். சில இடங்கள்ல நம்மை நிரூப்பிக்க முயற்சி பண்ணுவோம். கதை எழுதுறதுக்கான சுதந்திரமே கிடைக்காமப் போயிடும். மக்கள் மனசுல இருக்குற நல்ல படத்தோட சுவையைக் கெடுத்துறக்கூடாதுனு நினைக்குறேன். இது என்னோட தனிப்பட்ட கருத்து. கார்த்தியோட வளர்ச்சி பெருசு. ‘மெட்ராஸ்’, ‘கைதி’னு சூப்பரான படங்கள்லாம் பண்ணிட்டு இருக்கார். சரியான ஸ்க்ரிப்ட் வர்றப்ப அவர்கூட வேலை பார்க்கணும். அடுத்து என்ன படம் டைரக்‌ட் பண்ணலாம்னு நானே யோசிக்கிட்டு இருந்தேன். இப்ப எல்லாரும் சொல்லச் சொல்ல ‘ரன்’, ‘பையா’ ஸ்டைலில் யூத்தான படம் பண்ணணும்னு ஆசையிருக்கு. ஸ்க்ரிப்ட் அமையுறதைப் பொறுத்து பார்ப்போம்” என்கிறார் லிங்குசாமி.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.