இந்த நொடியில் உலகம் முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கும் ஒற்றைப் பெயர் ‘கொரோனா’. மனித இனத்தை ஆட்டிப்படைத்து 50,000-க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொண்டு இன்னும் பல உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது இந்தக் கண்ணுக்குத் தெரியாத கொடூர வைரஸ். உலகம் முழுவதும் இந்த வைரஸால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2, 28,923 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ்

இப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்த நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு தாய் தற்போது சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு உதவியுள்ளார். உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகமாக 2,77,161 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக நியூயார்க் நகரம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நகரத்தைச் சேர்ந்த டிஃப்பனி பிங்க்னி என்ற பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர். இவர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தன் ரத்தத்தைத் தானமாக வழங்கியுள்ளார்.

Also Read: `இறுதி நேரத்தில் தனிமை; முகம் பார்க்க அனுமதி இல்லை’ – வேதனையிலும் வேதனை தரும் இத்தாலி உயிரிழப்பு

அமெரிக்காவிலேயே முதல் முறையாக டிஃப்பனி இதைச் செய்துள்ளார். ‘கொரோனா வைரஸுக்கான பதில்கள் ஒருவேளை என் ரத்தத்தில் இருக்கலாம்’ என அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கொரோனா வைரஸுக்கு எதிராக உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் பல நூற்றாண்டுக்கு முந்தைய மருந்துகளையும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்களுக்கு உதவிய நோய் எதிர்ப்பு மூலக்கூறுகளுடன் அவர்களின் ரத்த பிளாஸ்மாவை வேறு ஒருவருக்குச் செலுத்தினால் அவரும் குணமடையலாம் என நம்பப்படுகிறது. இருந்தும் இதற்கு முறையான ஆதாரமும் இல்லை.

கொரோனா

இது பற்றிப் பேசியுள்ள நியூயார்க்கின் மவுண்ட் சினாய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் டேவிட் ரீச், “டிஃப்பனியின் செயல் மிகப்பெரியது. இது வரவேற்கத்தக்கது. அவர் முற்றிலும் குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டதும் அனைத்துச் சோதனைகளும் செய்யப்பட்ட பிறகே ரத்த தானம் செய்தார். இந்த நோயை எதிர்கொள்ள மக்கள் மிகவும் பலவீனமாக உள்ளனர். எனவே ரத்தம் கொடுப்பதன் மூலம் சக மனிதர்களுக்கு உதவமுடியும் என நினைக்கிறார்கள். எங்களின் இந்த முயற்சி நல்லபடியாகச் செயல்படும் என நாங்கள் நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஒரு நோயால் பாதிக்கப்பட்டு மீண்டவரின் உடலில் தானாகவே அந்த நோயை எதிர்க்கக் கூடிய ஆன்டிபாடிகள் உருவாகும். இந்த ஆன்டிபாடிகள் உயிர் பிழைத்தவரின் ரத்தத்தில் சில மாதங்கள் அல்லது வருடங்களுக்குக் கூட அப்படியே இருக்கும். இதை வைத்தே தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

ரத்த தானம்

‘உலகில் புதிதாக நோய் வெடிக்கும் போது அதைக் கட்டுப்படுத்த அல்லது முற்றிலும் நிறுத்த அறிவியலாளர்கள் மருந்து கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். இதற்கு ஆகும் காலத்தைக் கூறுவது கடினம். எனவே நோயிலிருந்து மீண்டவர்களின் ரத்தம் மிகவும் அரிதாகப் பயன்படுத்தப்படுகிறது. இது சிகிச்சை இல்லை. மாறாக ஒரு நோயின் தீவிரத்தைக் குறைப்பதற்கான வழி மட்டுமே” என்று வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவத்துறையைச் சேர்ந்த மருத்துவர் ஜெஃப்ரி ஹென்ட்ர்சன் குறிப்பிட்டுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.