கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், அத்தியவாசியப் பொருள்கள் தங்கு தடையின்றிக் கிடைக்கும் என்று அரசு தொடர்ந்து சொல்லி வருகிறது. ஆனால், பொருள்களே கிடைப்பதில்லை என்ற குரல்தான் தமிழகம் முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

கொரோனா

அப்படியே பொருள்கள் கிடைத்தாலும், அவற்றின் விலை அதிகமாக இருக்கிறது என்ற சோகக் குரல்கள்தான் அதிகம் ஒலிக்கின்றன. இப்படி மக்களின் ரத்த அழுத்தத்தை எகிற வைக்கும் கடைகளுக்கு மத்தியில், கோவையில் மனிதம் போற்றி வருகிறது ஒரு கடை.

கோவை ரத்தினபுரிப் பகுதியில் சாலையின் ஓரம் பூட்டப்பட்ட பலகாரக் கடை முன்பு ஒரு சிறிய கண்ணாடி பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளே வரிசையாக அடுக்கிவைக்கப்பட்ட பிரெட்டுகள். வெளியே, `செல்ப் சர்வீஸ், ஒரு பாக்கெட் பிரெட் 30 ரூபாய். பணத்தை அருகில் உள்ள பெட்டியில் போடவும்’ என்ற அறிவிப்பு.

பிரெட்

கூடவே, `மனிதத்தின் முதல் படி’ என்று எழுதப்பட்டுள்ளது. அருகில் விற்பனையாளரோ, உரிமையாளரோ யாரும் இல்லை. நமக்குத் தேவையான பிரெட்களை எடுத்துக் கொண்டு, அதற்கான காசை நாமே வைத்துவிட்டு வரவேண்டும். அவ்வளவுதான்.

ஆச்சர்யத்துடன் ரத்தினபுரி பகுதிக்குச் சென்றோம். ஆனால், அந்த மக்கள் ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதைப் போல, காசை வைத்துவிட்டு, பிரெட் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு சர்வ சாதாரணமாகக் கிளம்பினர். ரத்தினபுரி நெல்லை முத்துவிலாஸ் கடையில்தான் இப்படி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பிரெட்

இதுகுறித்து அந்தக் கடையின் மேலாளர் லோகேஷ், “மார்ச் 22-ம் தேதி சுய ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தபோது, மக்கள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக இப்படி ஓர் விஷயத்தை யோசித்தோம்.

60 பாக்கெட்கள் வைத்தோம். காசுப் பெட்டிக்குப் பெரிதாகப் பாதுகாப்பு எல்லாம் செய்யவில்லை. இருப்பவர்கள் காசு வைத்து எடுத்துக்கொள்ளட்டும், இல்லாதவர்கள் காசு வைக்காவிடினும் பரவாயில்லை என்ற சேவை நோக்கத்தில்தான் தொடங்கினோம். ஆனால், அன்றைய தினம் கிட்டத்தட்ட அனைத்து பிரெட் பாக்கெட்களுமே காலியாகிவிட்டன.

லோகேஷ்

90 சதவிகிதத்துக்கு மேல் பணமும் வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தினர். கடந்த ஐந்து ஆண்டுகளாக, நாங்கள் இந்தப் பகுதியில்தான் கடை நடத்தி வருகிறோம். இந்தப் பகுதி மக்களால்தான் நாங்கள் வளர்ச்சியும் அடைந்துள்ளோம்.

எனவே, இந்த நேரத்தில் மக்களுக்குக் கைகொடுக்க, அந்தத் திட்டத்தைத் தொடரலாம் என்று முடிவு செய்தோம். எங்களது ஊழியர்களுக்கு எல்லாம் விடுமுறை கொடுத்து அனுப்பிவிட்டோம். இதே பகுதியில்தான் எங்கள் குடோன் உள்ளது. அங்கு வைத்து தினசரி நாங்களே பிரெட்களைத் தயாரித்து, இங்கு கொண்டுவந்து வைத்துவிடுவோம்.

பிரெட்

இப்போதுவரை 99 சதவிகிதம் பணம் வந்துவிடுகிறது. எங்கு இல்லாவிடினும், இங்கு கிடைக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையை நாங்களும் காப்பாற்றி வருகிறோம்.

தினசரி 150 முதல் 250 பிரெட் பாக்கெட்கள் தயாரிக்கிறோம். தேவை அதிகரித்துள்ளதால், மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை பிரெட்களை வைத்து வருகிறோம். யார் எப்போது வேண்டுமானாலும் இங்கு பிரெட் எடுத்துக்கொள்ளலாம். தற்போது நிறைய இடங்களிலிருந்து மக்கள் அழைக்கிறார்கள்.

பிரெட்

எனவே, இந்தத் திட்டத்தை இன்னும் விரிவுபடுத்தலாமா என்ற எண்ணமும் இருக்கிறது. சூழ்நிலைகளைப் பொறுத்து அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொள்வோம்” என்றார் உற்சாகமாக.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.