சீனாவின் வுகான் நகர சந்தையில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இன்று உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உலக அளவில் 10 லட்சத்தைக் கடந்திருக்கும் நிலையில், இந்தியாவில் 3,000-த்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 68 ஆக அதிகரித்திருக்கிறது. உலக அளவில் பலி எண்ணிக்கை 58,000-த்தைக் கடந்துவிட்டது.

கொரோனா

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த 24-ம் தேதி முதல் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 11 நாள்கள் ஆன நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரியும்படி அறிவுறுத்தியிருக்கின்றன. அதேநேரம், ஊரடங்கு உத்தரவால் தினக்கூலி பணிக்குச் செல்வோர் உள்ளிட்ட தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல், வெளிமாநிலத் தொழிலாளர்களும் இந்த ஊரடங்கால் சொந்த ஊர்களுக்குச் செல்லவும் முடியாமல் வேலையும் கிடைக்காமல் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன.

Also Read: “சென்னை முதலிடம்; திண்டுக்கல் 2வது இடம்” -மாவட்ட வாரியான கொரோனா பட்டியல் #Corona

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 102 பேர் உட்பட 411 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக சென்னையில் 81 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் குடியிருந்த பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 8 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களாகப் போலீஸார் அறிவித்துள்ளனர்.

கோவிட் 19

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அலுவலகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டாலும் அங்கு பணியாற்றி வரும் காவலாளிகள் வழக்கம்போல் பணிக்குச் சென்று வருகிறார்கள். அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகக் கட்டடங்கள் உள்ளிட்டவையில் பணியாற்றும் காவலாளிகள் இந்த ஊரடங்கால் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். வெளியூரில் இருந்து சென்னையில் வந்து தங்கி காவலாளியாகப் பணிபுரிவோர் நிலை இன்னும் கொடுமை. அதேபோல், வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றில் பணிபுரியும் காவலாளிகள், தங்களுக்கு உரிய பாதுகாப்புக் கவசங்கள் அளிக்கவில்லை என்று புகார் கூறுகிறார்கள். மேலும், தாங்கள் பணிபுரியும் இடங்களில் இருந்து உணவுக்காகப் பல கி.மீ தூரம் அலைய வேண்டியிருப்பதாகவும் வேதனைப்படுகிறார்கள் தனியார் காவலாளிகள்.

ஊரடங்கு உத்தரவால் பல்வேறு துறையினர் முடங்கியிருந்தாலும் மருத்துவத் துறையினர், போலீஸார் உள்ளிட்டோர் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வரிசையில், காவலாளிகளும் ஓய்வின்றி ஊரடங்கிலும் பணியாற்றி வருகிறார்கள். பெரும்பாலான காவலாளிகள் பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்தி வருவதால், போக்குவரத்து விஷயத்தில் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். டூ வீலர், சைக்கிள் ஆகியவற்றில் பணிக்குச் சென்றால் போலீஸாரின் கெடுபிடிகள் வேறு. இதையெல்லாம் தாண்டியே தினசரி பணிக்குச் சென்று வருகிறார்கள் காவலாளிகள்.

அந்தோணி

சென்னை மேடவாக்கத்தில் இருந்து தினசரி 10 கி.மீ-க்கும் அதிகமான தூரம் நடந்தே சென்று காவலாளி பணியைப் பார்த்துவிட்டு வீடு திரும்புகிறார் அந்தோணி என்ற முதியவர். ஷிஃப்ட் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தவரிடம் பேசினோம். “எல்காட்ல செக்யூரிட்டியா வேலை பாக்குறேங்க. ஊரடங்கால எல்லாருக்கும் லீவு விட்டுட்டாங்க. எல்லாருக்கும் லீவுனாலும் நாம வேலைக்குப் போகாம இருக்க முடியுமா. நாங்க 64 பேரு வேலை செய்றோம்.

66 வயசாகுது எனக்கு. 10 வருஷமா செக்யூரிட்டியா இருக்கேன். உழைச்சாதானே சோறு? என்கிட்ட சைக்கிள், டூ வீலர் எதுவும் இல்லை. மேடவாக்கத்தில இருந்து பஸ்லதான் வேலைக்குப் போய்ட்டு வந்துட்டு இருந்தேன். ஆனால், இப்போ பஸ் வசதி இல்லாததால தினமும் காலைல 6 கி.மீ, சாயந்தரம் 6 கி.மீனு டெய்லி 12 கி.மீ வேலைக்கு நடந்து போய்ட்டுதான் வர்றேன். காலைல 6 மணிக்குப் போனா சாயந்தரம் 6 மணி வரைக்கும் டூட்டி. காலைல போகும்போது யாராவது பைக்ல வந்தா லிஃப்ட் கேட்டு போவேன். அதேமாதிரிதான் சாயந்தரமும்.

அந்தோணி

ஆனா, பெரும்பாலும் டிராஃபிக் இல்லாததால, நடந்துதான் போய்ட்டு வந்துட்டு இருக்கேன். சுத்தி இருக்க எல்லா கடையையும் அடைச்சுட்டாங்க. அதனால வேலை பாக்கும்போது ஒரு டீ கூட குடிக்க முடியாது. அதேமாதிரி சாப்பாடுக்கும் கஷ்டம். நான் டெய்லி சாப்பாடு எடுத்துட்டு போய்டுறேன். ஆனால், வெளியூர்ல இருந்து வந்து இங்க தங்கியிருக்கவங்க பாடுதான் திண்டாட்டம். டெய்லி சாப்பாடு எடுத்துட்டுப் போற எங்களமாதிரி ஆளுங்க அவங்களுக்குக் கொஞ்சம் சாப்பாடு கொடுப்போம். போக்குவரத்துதான் ரொம்ப கஷ்டமா இருக்கு. பஸ்ஸ நிப்பாட்டிட்டாங்க என்பதற்காக வேலைக்குப் போகாம இருக்க முடியுமா? அதான் டெய்லி நடந்தாவது வேலைக்குப் போய்ட்டு வர்றேன்’’ என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.