கொரோனோவின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவிவரும் இந்த வைரஸ், தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. கொரோனோவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மிகக் கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கண்டராதித்தம் கிராமம். சுமார் 1,250 குடும்பங்கள் வசிக்கும் இந்த ஊரின் ஊராட்சிமன்றத் தலைவராக இருப்பவர் சந்திரா ராமமூர்த்தி. இவர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் சூழலில், கண்டராதித்தம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்டராதித்தம், பாக்கியநாதபுரம், க.மேட்டுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூபாய் 300 மதிப்பிலான அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.

அதோடு இல்லாமல், தங்கள் கிராமத்தை தூய்மைப்படுத்தும் 11 தூய்மைப் பணியாளர்களையும் அழைத்த ஊராட்சி மன்றத் தலைவி சந்திரா ராமமூர்த்தி, கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தங்கள் கிராமத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் கால்களைக் கழுவி பாதபூஜை செய்து வணங்கினார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத தூய்மைப் பணியாளர்கள் தங்கள் ஊராட்சி மன்றத் தலைவியை ஆரத்தழுவிக் கையெடுத்துக் கும்பிட்டனர்.
இதுகுறித்து சந்திரா ராமமூர்த்தி, “மற்றவர்களைப் போல் இல்லாமல் ஊராட்சிமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறேன். அதனடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறேன். இப்படியிருக்கும்போதுதான், கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது.

ஆனாலும், எங்கள் கிராமம் பின் தங்கிய கிராமம் என்பதால், மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை. இதைக் கருத்தில் கொண்டு தூய்மைப் பணியாளர்கள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதுடன், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்துவருகிறோம். கொரோனா விவகாரத்தால், தூய்மைப் பணியாளர்களுக்கு அளவுக்கதிகமான வேலை.
மேலும், இரு குடும்பங்களைத் தனிமைப்படுத்தி வைத்துள்ளோம். அனைத்துப் பணியாளர்களும் அயராது உழைக்கிறார்கள். துளியும் தங்களைப் பற்றி கவலைப்படாமல் கிராம மக்களின் நலனில் அக்கறை கொண்டு உழைக்கும் இவர்களைக் கௌரவப்படுத்த நினைத்தோம். அந்தக் கால்கள் புனிதமானவை அதனால், அவர்களை வீட்டுக்கு அழைத்து, தூய்மைப் பணியாளர்களின் கால்களைக் கழுவிவிட்டு வணங்கினோம். கூடவே, அவர்களுக்குப் புத்தாடை வழங்கிக் கௌரவித்தோம்.
Also Read: `அப்போ கஜா புயல்… இப்போ கொரோனா வைரஸ்!’ – கலங்கும் திருச்சி மாவட்ட வாழை விவசாயிகள்
இதுமட்டுமல்லாமல் எங்களின் சொந்த செலவில் கிராம மக்களுக்குத் தேவையான வீட்டிற்குத் தேவையான சிறிது மளிகை பொருள்களும், கிருமி நாசினி பொருள்களையும் வழங்கி வருகிறோம். இப்படிச் செய்தாலாவது கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்களா என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு’’ என்றார் நம்பிக்கையுடன்.