அன்றாட நிகழ்வுகளுக்கு நெட்டிசன்களின் கமென்ட் அல்லது விமர்சனம்தான் மீம்ஸ். சில நேரங்களில் இந்த விமர்சனங்கள் கொஞ்சம் வைரலாகி ஒரு பெரிய ட்ரெண்டையே உருவாக்கிவிடும். அப்படி ட்ரெண்ட் ஆனால் அந்த மீமில் இருப்பவருக்கு மிகப்பெரிய புகழ் வெளிச்சம் கிடைக்கும். சில சமயம் சங்கடத்தையும் உண்டாக்கிவிடும்.

வடிவேலுவின் `கிரி’ பட காமெடி போல “அதுக்கப்றம் அந்த வண்டி ஒரு மூத்தர சந்துக்குப் போச்சு” என ஒருவரை மட்டுமே டார்கெட் செய்து அடித்து அழகுபார்த்து, அடுத்த ஏரியாவில் இருக்கும் ஆட்களுக்கு ஃபார்வேர்டு செய்யும் கோராமையும் அவ்வப்போது நடக்கும். அவ்வாறாக ஒரு தனி நபரை அல்லது ஒரு டாப்பிக்கை வைத்தே சில நாள்களுக்கு ஒருவரை உளுத்தம்பருப்பு போல ஊறவைத்து அடித்துத் துவைக்கும் பண்பாட்டுக்கு Targeted Meme Campaign எனப்பெயர். தினமும் எழுந்து பல் துலக்கி, குளித்து, ஆபீஸ் சென்று பிடிக்காத எதிரணி கோஷ்டியைத் தாக்கி இவ்வாறான Targeted Memes போட ஒரு பெரும்கூட்டமே சமூக வலைதளங்களில் இயங்குகிறது.

அஞ்சான் மீம்ஸ்

இந்த டைப் மீம்ஸ் சூறாவளியில் முதலில் சிக்கிச் சின்னாபின்னமானது அஞ்சான் மற்றும் லிங்குசாமிதான். சோஷியல் மீடியா அதுவரை பார்த்திராத மீம்ஸ், போட்டோ கமென்ட்ஸ், வீடியோக்களால் எங்கும் நிறைந்தது அஞ்சான்.

சூர்யா ரசிகர்கள் இப்போதும் “அது அவ்ளோ மோசமான படமில்ல பாஸ்… சில நடிகர்களின் ரசிகர்கள்தான் சூர்யா மேல உள்ள கடுப்புல இப்டி பண்ணிட்டாங்க” எனப் புலம்புவதுண்டு. ஆனால் இதுபோன்ற Meme Campaign-ல் சிக்க நீங்கள் மோசமான ஒரு படைப்பைக் கொடுத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கலாய்ப்பதற்கு கன்டென்ட் கொடுத்திருந்தாலே போதுமானது. `அஞ்சான்’ ஓவராக கலாய்க்கப்பட்டதற்குக் காரணம் அந்தப் படத்தைத் தாண்டி, டீஸர் 5 மில்லியன் வியூஸுக்கு கேக் வெட்டியதும், லிங்குசாமி ஆடியோ லாஞ்சில் சொன்ன `கத்துக்கிட்ட மொத்த வித்தையும் இறக்கியிருக்கிறேன்’ எனும் டயலாக்கும்தான்.

சாதாரணமாக ஒருவர் வழுக்கி விழுந்தால் அவர் மீது இரக்கம் வரும். விவேக் சொல்வதைப்போல “நாங்க ராஜ பரம்பரை. இந்த எண்ணெய்ல நான் காலை வெப்பேன்டா” என வாண்டடாக வாயை விட்டு வழுக்கிவிழுந்தால் அப்படியே எதிர்மறை விளைவாகி அது கன்டென்ட்டாகி விடுகிறது.

அஞ்சானுக்குப் பிறகு `யான்’ படத்துக்கு அதேபோல் டார்கெட்டட் மீம்ஸ் வந்தாலும் படம் பார்த்த மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதால் அது அவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கவில்லை. ஆனால் `லிங்கா’வின் போது “க்ளைமேக்ஸ் பிடிக்கலைன்னா தியேட்டரை விட்டு எழுந்து போ” எனச் சொன்ன கே.எஸ்.ரவிகுமாரை, வசூல்ராஜாவில் வருவதுபோல் “பழைய பேஷன்ட்டை டிஸ்சார்ஜ் பண்ணுங்க… புது பேஷன்ட் ரவிக்குமாரை அட்மிட் பண்ணுங்க” என வண்டியில் அள்ளிப்போட்டு ஒரு ரவுண்டு வந்தார்கள் நெட்டிசன்ஸ்.

நேசமணி

சோஷியல் மீடியாவில் எப்போது எது ட்ரெண்ட் ஆகும் என்பது கணிக்கவே முடியாது என்றாலும் மேற்சொன்ன எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு வகையில் அந்த மீம்ஸ் வர அந்த நபர்களும் ஒரு காரணம்.

ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் எதுவுமே செய்யாமல் தானாகவே ட்ரெண்டிங்கில் வரும் மீம் கலாசாரம் ஆரம்பித்தது போன வருடம்தான். ஒருவர் விளையாட்டாக ப்ரெண்ட்ஸ்’ பட வடிவேலு காமெடியைப் பகிர்ந்து #PrayForNesamani என Hashtag போட… படு சீரியசாக அதை ஒரு கூட்டம் நலம் விசாரிக்க… சுடச்சுட மீம்கள் வந்து இறங்க… இரண்டே நாள்களில் உலக ட்ரெண்ட் ஆனார் நேசமணி. சோஷியல் மீடியாவில் ஆரம்பித்து சினிமா பிரபலங்கள், டிவி நிகழ்ச்சிகள், யூட்யூப் பேட்டிகள் என ஒரு ரவுண்டு வந்தார் வடிவேலு. பெரும்பாலும் சம்பந்தப்பட்டவர்களே பார்த்தாலும் சிரித்து ரசிக்கும் அளவுக்கு நன்றாகவே இருந்தது அந்த மீம்ஸ்.

அந்த வரிசையில் தற்போது சிக்கியிருப்பவர் சமுத்திரக்கனி. இது மேற்சொன்ன எல்லாவற்றையும்விட வேறுபட்டு நிற்கக் காரணம், இது ஒரு படம் அல்லது கதாபாத்திரம் சார்ந்ததாக இல்லை. நேரடியாக சமுத்திரக்கனியை பர்சனலாக அடிக்கிறது. வெகு சில மீம்கள் ரசிப்பது போல இருந்தாலும் மார்ஃபிங், ஆபாச வார்த்தைகள் என இம்முறை பெரும்பாலான மீம்கள் தரம் தாழ்ந்த தனிப்பட்ட தாக்குதலாகவே இருக்கின்றன. சோஷியல் மீடியாவில் ஒரு மீம் கேம்பெய்ன் ஆரம்பித்த இடத்தைக் கண்டுபிடிப்பது முடியாத காரியம் என்றாலும் சில விஷயங்களை வைத்து எந்த குரூப் இதைச் செய்தது என ஓரளவுக்குக் கணிக்க முடியும். `கொளஞ்சி’ மற்றும் `நாடோடிகள் -2′ படத்தில் சாதி, மத வெறியர்களை சாடியிருப்பார் சமுத்திரக்கனி. குறிப்பாக `கொளஞ்சி’ திரைப்படத்தில் வரும் சில வசனங்களினால் கடுப்பான ஒரு கட்சி அபிமானிகள்தான் இதை ஆரம்பித்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால், முன்பே சொன்னதைப்போல ஒரு குறிப்பிட்ட கூட்டம் மட்டுமே முடிவெடுத்து எதையும் இவ்வளவு வைரலாக்க முடியாது. பொதுமக்கள் அதைக் கையில் எடுக்கும்போதே ஒரு கன்டென்ட் வைரல் ஆகிறது.

சமுத்திரக்கனி மீம்ஸ்

தன் கருத்துகளை திரைமொழியில் சொல்லாமல், நீண்ட வசனங்களாகவே அதைப் பார்வையாளர்களுக்குக் கடத்தும் சமுத்திரக்கனியின் பிரசாரத் தொனி மீது பொதுவாகவே பார்வையாளர்களுக்கு ஒரு சிறிய ஒவ்வாமை உண்டு. `மாஸ்டர்’ பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் பிரிட்டோவின் பேச்சைப்பற்றிக் கூறும்போது, “அவர் பெரிய அனுபவசாலி, நிறைந்த அறிவாளி. அதையெல்லாம் சொல்லணும்னு நினைக்கறாப்ல… அவ்ளோ நாலெட்ஜ் இருக்கு அவருக்கு” என்று சொல்வார்.

அதேபோல சமுத்திரக்கனியும் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பட்டம் பெற்று, நடிப்பு ஆசையில் சினிமாவுக்கு வந்தவர். ஆரம்ப காலங்களில் தன் உருவத்தை வைத்து கிண்டலடிக்கப்பட்டு, வாய்ப்பு மறுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டிருக்கிறார். “அப்பவெல்லாம் ஒரு சீன்ல நடிக்க அசிஸ்டென்ட் டைரக்டர் கைல கால்ல விழுந்து வாய்ப்பு வாங்குவேன்” எனத் தன் துயரங்களை சமுத்திரக்கனியே பகிர்ந்திருக்கிறார். 1997-ல் விஜயனிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து, பின் பாலசந்தரிடம் உதவி இயக்குநராகி, 2003-ல் முதல் படமான `உன்னை சரணடைந்தேன்’ படத்தை இயக்கினார். படம் தோல்வி. அடுத்ததாக விஜயகாந்தை வைத்து இயக்கிய `நெறஞ்ச மனசு’ படமும் தோல்வி. மீண்டும் சீரியல்கள் இயக்கச் செல்கிறார். சீரியலிலிருந்து மீண்டும் சினிமா. பாலாவிடம் துணை இயக்குநராகச் சேர்கிறார். அங்கு பழக்கமான சசிகுமார், அவர் இயக்கிய முதல் படமான `சுப்ரமணியபுர’த்தில் வில்லனாக நடிக்கவைக்கிறார். அதே சசிகுமாரை நாயகனாக வைத்து 2009-ல் `நாடோடிகள்’ படத்தை இயக்கித் தன் முதல் வெற்றியைப் பதிவு செய்கிறார். 1997-ல் சினிமா உலகுக்குள் நுழைந்த சமுத்திரக்கனி முதல் வெற்றியை ருசிக்க 12 ஆண்டுகள் கடுமையாகப் போராடவும், உழைக்கவும் வேண்டியிருந்தது. இத்தனை வருடப் போராட்டத்துக்குப் பிறகு வெற்றி பெற்ற ஒருவரிடம் சொல்ல எவ்வளவு கதைகள், எவ்வளவு அனுபவங்கள் இருக்கும்?

சமுத்திரக்கனி

மீம்ஸ் போடவோ அதைப்பகிரவோ ஒருவரை விமர்சிக்கவோ அவரது கடந்த காலத்தையெல்லாம் பார்க்கத்தேவையில்லையே எனச் சிலர் சொல்லலாம். கதாபாத்திரங்கள், பேட்டிகள், படங்கள் தாண்டி ஒருவரை காரணமின்றித் தனிப்பட்ட முறையில் தாக்கும்போது இதைத் தெரிந்துகொள்ளுதல் அவசியம் எனத் தோன்றுகின்றது. கருத்து கந்தசாமி எனப் பலர் கலாய்த்தாலும் தொடர்ந்து அவர் ஆணவக்கொலை, பெண்ணடிமைத்தனம் மற்றும் சாதி, மத வெறிக்கு எதிராகப் பேசி வருகிறார். சமத்துவம், அறம் சார்ந்த, மனிதம் பேசும், பாசிட்டிவிட்டியைப் பரப்பும், எதற்கும் துவண்டுவிடாதீர்கள் என உந்தும் கருத்துகளையே தன் படங்களின் மூலம் கூறி வருகிறார். இவை அனைத்தும் பேசப்பட வேண்டிய விஷயங்கள்தானே?

அதற்காக விமர்சனம் வைக்கவேண்டாம் என அர்த்தமில்லை. எந்தக் கலைப்படைப்பும் கலைஞனும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரில்லை. அது மட்டுமன்றி விமர்சனம்தான் ஒரு கலைஞனை அடுத்தடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும். ஆனால், அந்த விமர்சனங்கள் தரம் தாழாமல் இருக்கவேண்டும் தனிநபர் இழிவு இருக்கக் கூடாது. இந்த மீம்களால் சமுத்திரக்கனியின் பட வாய்ப்புகள் குறையப்போவதில்லை. அவர் துவண்டு தேங்கி நின்றுவிடவும் போவதில்லை. சக மனிதர்களின் மீது பேரன்பும், சமூகத்தின் மீது பெரும் அக்கறையும் கொண்ட ஒரு கலைஞனை எந்தக் காரணமுமின்றித் தரம்தாழ்த்தி மனம் நோகடிப்பது அறமற்றது.

சமுத்திரக்கனி

Tamil Meme Nation Is the Best எனப் பிறமொழி பேசும் மக்களும் சிலாகிக்கிறார்கள். அவ்வப்போது வரும் இதுபோன்ற சில பிற்போக்கான மீம் கேம்பெய்ன்கள் நம் மீதான அந்த மதிப்பை குலைத்துவிடக்கூடாது. `என்னை அறிந்தால்’ படத்தில் அஜித் சொல்வது போல இது ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு அந்தப்பக்கம் போனால் Fun. இந்தப்பக்கம் வந்தால் Abuse. நாம் இரண்டுக்கும் நடுவில் வடிவேலு சொல்வதைப்போல “அதென்னப்பா வெளாட்டு… அது கோட்டு மேலயே ஓட்றது” மோடில் பயணிப்பதே சிறப்பு!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.