கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பிரதமர் நிவாரண நிதி மற்றும் மாநில அரசின் நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டவர்கள் தங்களால் இயன்ற நிதியை வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயதுக்குட்பட்ட இரண்டு சகோதரிகள் தங்களது சேமிப்பை கொரோனா நிதிக்காக கொடுத்துள்ளனர்.

லக்னோவைச் சேர்ந்த தொழிலதிபரான கவுரங் அரோராவின் இரண்டு மகள்கள் மாய்ஷா அரோரோ (வயது 6) மற்றும் அலியா அரோரா (வயது 10). இவர்கள் இருவரும் தாங்கள் சேர்த்து வைத்திருந்த சேமிப்பிலிருந்து தலா 5,000 ரூபாயை வழங்கியுள்ளனர்.
“எங்களது தாத்தா தனது சேமிப்பில் இருந்து இல்லாத மக்களுக்கு கொடுப்பார். இதைப்பார்த்துதான் நாங்களும் இப்போது இந்த நிதியை அளிக்க முன்வந்துள்ளோம்” எனச் சிறுமிகள் இருவரும் கூறியுள்ளனர். மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து பிரதமர் நிவாரண நிதிக்காக இதை அளித்துள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள லக்னோ மாவட்ட ஆட்சியர், “இக்கட்டான சூழலில் சிறுமிகள் தங்களது சேமிப்பில் இருந்த தொகையை அளித்துள்ளனர். இவர்களது இந்தச் செயலின் மூலம் வயதுக்கும் உதவும் குணத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உணர்த்தியுள்ளேன். எல்லோருக்கும் இவர்கள் முன்மாதிரியாக உள்ளனர்” என நெகிழ்வுடன் கூறினார்.