கொரோனா தொற்று, உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. வல்லரசு நாடுகள் தொடங்கி வளரும் நாடுகள் வரை மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து உலகத்தை மீட்டெடுக்க பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. போக்குவரத்து வசதிகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கூடுதல் சவால்களையும் சந்தித்து வருகின்றனர்.

ஆதரவற்றவர்கள்

இந்த நிலையில், கடந்த தினங்களாக விழுப்புரம் ரயில் நிலையம் அருகே 70 வயது மதிக்கத்தக்க பெண்மணி இருவர், ஒரு டீக்கடையின் வாசலில் படுத்திருந்ததைக் கவனித்தேன். தெருக்களில் ஆள் அரவமற்றிருக்கும் இந்தச் சூழலில் அவர்களுக்கு உணவு கிடைத்ததா? கொரோனா பற்றிய விழிப்புணர்வுடன் பாதுகாப்பாக இருக்கிறார்களா? அவர்களுக்கு உதவி எதுவும் தேவைப்படுகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள அவர்களிடம் சென்று பேசினேன்.

“யம்மா எங்க போகச்சொல்லப் போறீக? போலீஸ் ஐயாகிட்ட சொல்லிட்டுதான் இங்க உட்கார்ந்து கிடக்கோம் பாத்துக்கோங்க. நான் பிச்சை எடுக்குற ஜனம் இல்லம்மா” என்று பதற்றத்துடன் பேசியவரை நிறுத்தி, ஆறுதலான வார்த்தைகளுடன் உரையாடலைத் தொடங்கினேன்.

“என் பேரு விஜயா. ஊரு திருநெல்வேலி. பாளையங்கோட்டை சந்தையில காய்கறி வியாபாரம் பாக்கேன். இந்தா உட்கார்ந்து இருக்கே இந்தம்மா என் கூட சேர்ந்து சந்தையில காய்கறி வியாபாரம் பண்ணுவாங்க. ரெண்டு பேரும் ஒண்டிக்கட்டை” என அருகில் இருந்த 75 வயது மதிக்கத்தக்க அம்மாவை அறிமுகம் செய்தார்.

ஆதரவற்றவர்கள்.

“இந்த அம்மா திருப்பதி சாமிக்கு முடி எடுக்கேன்னு வேண்டிருந்துச்சாம். ரொம்ப நாளா சொல்லிட்டே இருந்துச்சு. இது பரீட்சை நேரம் கூட்டம் கம்மியா இருக்கும். விரசா சாமியைப் பார்த்துறலாம்னு சொன்னாவ. அந்தானிக்கு 15 நாளைக்கு முன்னாடி, திருநெல்வேலியில இருந்து புறப்பட்டோம்.. விழுப்புரத்துல இருந்து 35 ரூபா டிக்கெட்டுல திருப்பதிக்கு ஒரு ரயில் இருக்குங்கிறதைக் கேள்விப்பட்டு இங்க இறங்குனோம். அன்னைக்கு ராத்திரியே ரயிலையெல்லாம் நிறுத்திட்டாக. இந்த ஊரு எங்களுக்குப் புதுசுங்கிறதால எங்கையும் போக்கெடம் இல்லாம இங்க கிடக்கோம். இன்னையோட 8 நாள் ஆச்சு. எப்போ ரயில் எடுப்பாங்கனு தெரியல. அது சரி அந்த ஏழுமலையானை நாம பார்க்கணும்னு நினைச்சா போதுமா, அவன் நம்மள பார்க்கணும்னு நினைக்கணும்லா” என்று அங்கலாய்த்துக்கொண்டு பேச்சைத் தொடர்ந்தார்.

“மொத மூணு நாளு ரயில்வே ஸ்டேஷன்லேயே படுத்துக்கெடந்தோம். அங்கேயிருந்த எல்லாத்தையும் வெளிய அனுப்பிட்டாங்க. எங்க போறதுனு தெரியாம, இந்தக் கடை வாசலில் உட்கார்ந்து கிடக்கோம். எங்ககிட்ட காசும் கம்மியாத்தான் தாயீ இருந்துச்சு. கையில வெச்சுருந்த காசுக்கு டீ, சாப்பாடு பொட்டலங்கள் வாங்கி குடிச்சு வயித்த நிரப்பிக்கிட்டோம். நாலாவது நாள் கையில காசும் இல்ல. பயங்கர பசி. தண்ணீயை மட்டும் குடிச்சுட்டு படுத்துக்கிடந்தோம்.

Also Read: `மூன்று நாளாக பிஸ்கட் மட்டுமே… பசியின் கோரத்தாண்டவத்தால் 100-க்கு போன் செய்த இளைஞர்கள்

விஜயா அம்மா

வாழ்க்கையில பசி மாதிரி கொடுமை எதுவும் இல்லம்மா, நம்ம மனசு சொல்றத உடம்பைக் கேட்கவே விடாது. யாராவது `சாப்டீங்களா’?னு கேட்க மாட்டாங்களானு இருந்துச்சு. ஏதோ அமெரிக்காவுல காய்ச்சலாம். இங்கையும் பரவுதுனு வீட்டுக்குள்ள இருங்கனு சொன்னா அன்னாடங் காட்சிகள் என்னம்மா பண்ணுவாங்க.

எங்கள விடுங்கம்மா புள்ள குட்டி வெச்சுருக்க ஜனங்க என்ன பண்ணுங்க. இவ்வளவு நேரம் ஒரு ஆட்டோக்காரரு பேசிட்டு இருந்தாரு. காலையில இருந்து ஒரு சவாரிகூட இல்லையாம். புள்ள குட்டிகளுக்கு எப்படி கஞ்சி ஊத்துறதுனு பொலம்புனாரு. மக்கள காய்ச்சலில் இருந்து காப்பாத்துறேனு பசிக்குப் பலி கொடுத்துருவாங்க போல.

கொரோனா வைரஸ்

Also Read: ஹெச்.ஐ.வி தொற்றுக்கு எதிராகப் போராடி, கொரோனா தொற்றால் உயிரிழந்த பிரபல வைராலஜிஸ்ட் கீதா ராம்ஜி!

நாங்க இங்க உட்கார்ந்து கிடக்குறத பார்த்துட்டு டெய்லி ஒரு தம்பி மதிய சாப்பாடு கொண்டாந்து குடுத்துட்டுப் போகுதும்மா. அதையே மூணு வேளைக்கும் பிரிச்சு சாப்பிட்டு மறுநாள் மதியம் வரை கழிச்சுட்டு இருக்கோம். இனி ரயில் விட்டாலும் ஊருக்கு போக கையில காசு இல்லம்மா. யாராவது உதவி பண்ணா, எங்க ஊரைப் பார்த்துப் போயிருவோம். ஒண்டிக்கட்டையா கிடந்தாலும் எங்க ஊருதான் தாயீ எங்க உசுரு” என்று சொல்லும்போதே கண்ணீர் பெருக்கெடுக்கிறது விஜயா அம்மாவுக்கு.

நிலைமை சரியாகும் வரை எதாவது அரசு காப்பகத்தில் தங்கிக்கொள்கிறீர்களா? என்றவுடன் “அதெல்லாம் வேண்டாம்மா, நாங்க எங்க ஊருக்குப் போணும். அங்க ஏகப்பட்ட ஜோலி கிடக்கு. ரேஷனில் அரிசி, பருப்பெல்லாம் தர்றாங்கனு சொல்றாங்க. அதெல்லாம் வாங்கணும். ஏதோ பொல்லாத காய்ச்சலுங்கிறாங்க. அது சீக்கிரம் சரியாக அந்தச் சாமீதான் உதவணும்” என்றவரிடம் கொரோனா வைரஸ் பரவுதல் பற்றி எதுவும் தெரியுமான்னு விசாரிக்க. “அதெல்லாம் தெரியாதும்மா. எல்லாரும் சொல்றாங்க. வீட்டுக்குள்ள இருந்தா வாராதுனு. அது என்னவோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

ஆதரவற்றவர்கள்

எங்களுக்கு அதெல்லாம் எதுவும் இல்ல, பாரு கைகால் சுகத்தோட ஆண்டவன் வெச்சுருக்கான்” – உலகத்தின் சூழல் புரியாமல் இருப்பவரிடம் கொரோனா வைரஸ் பரவும் விதவும் விதத்தை விளக்கி, கவனமாக இருங்கனு சொல்லி கிளம்ப முற்பட்டபோது,

“யம்மா, உன்னால முடிஞ்சா ரெண்டு தண்ணீ பாட்டில் வாங்கித்தாம்மா. பக்கத்துல தண்ணிக் குழாய் எதுவும் இல்ல” என்று கேட்டபோது, மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. இரண்டு பாட்டில் தண்ணீர் வாங்கிக்கொடுத்துவிட்டு கிளம்பினேன்.

வீட்டில் அமர்ந்துகொண்டு பொழுது போகாமலிருப்பதை ஊரடங்கின் சிக்கலாகக் கருதுபவர்கள், உண்மையான சிக்கல் எது என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட்டு, கொரோனாவிடமிருந்து நம் பூமியை மீட்டெடுக்க வேண்டிய நேரம் இது. தூரமாய் இருந்து உதவுவோம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.