நாக்பூரில் இருந்து தமிழகத்துக்கு திரும்பிய இளைஞர் செகந்திராபாத் முகாமில் மாரடைப்பால் மரணமடைந்ததை அடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த ஆவத்திபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்-ராதிகா தம்பதி. கூலித்தொழிலாளர்களான இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகனான லோகேஷ்(23) இன்ஜினியரிங் முடித்துள்ளார். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நாக்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிவதற்காக சென்றுள்ளார்.
இதற்கிடையே நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து வெளி மாநிலத்திற்கு படிக்கச் சென்ற மாணவ, மாணவிகள் பணிக்குச் சென்ற தொழிலாளர்கள் அனைவரும் அந்தந்த மாநிலங்களில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில் நாக்பூருக்குப் பணிக்குச் சென்ற லோகேஷ் தன்னுடன் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த 25 இளைஞர்களுடன் சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்துள்ளனர். கடந்த 10 நாட்களாக வழியில் கிடைத்ததை சாப்பிட்டுக்கொண்டு நடந்து வந்துள்ளனர்.
வழியில் லாரி ஓட்டுநர் உதவி செய்ய, லாரியில் ஏறி வந்த இளைஞர்கள் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் வந்துள்ளனர். அங்கு வாகனச் சோதனையில் சிக்கிய இவர்கள் உடனடியாக செகந்திராபாத் பகுதியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி இரவு, முகாமில் இருந்த லோகேஷ் திடீரென்று சரிந்து விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மாரடைப்பு காரணமாக இளைஞர் லோகேஷ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இளைஞரின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியர் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில் இளைஞரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு உடனடியாக அடக்கம் செய்யப்பட்டது. சொந்த ஊருக்கு வந்துவிடலாம் என நடக்கத்தொடங்கிய இளைஞர் வெறும் உடலாக வீட்டிற்கு வந்த சேர்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கால் முடங்கிய கிராமம்.. தாங்களாகவே முடிவெட்டிக்கொள்ளும் இளைஞர்கள்..!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM