பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சமூக ஊடகங்களின் பயன்பாடு மிக அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகின் வேறெந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு சாதி, மத, மொழி வேறுபாடுகளைக் கொண்ட மக்களையும், அவ்வேறுபாடுகளை அரசியலாக்கி குளிர்காயும் இயக்கங்களையும் கொண்ட தேசத்தில் இவ்வூடகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் மிக ஆழமானது .

Representational Image

மேலைநாட்டினர் அரசியலை அன்றாட வாழ்விலிருந்து விலக்கி வைக்கத் தெரிந்தவர்கள். அங்கு சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் பெரும்பாலும் அவரவர் தொழில் சார்ந்ததாகவோ அல்லது பொழுதுபோக்குகள் சார்ந்ததாகவோ மட்டுமே இருக்கும். மேலும், தனிமனித கருத்துரிமைக்கும் சுதந்திரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் அந்த நாடுகளில் ஒத்த கருத்துடைய குழுக்களிடையே பகிரப்படும் தகவல்கள் அவரவர் வட்டத்தைவிட்டு வெளியேறுவதில்லை.

நம்மில் பலருக்கு வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் செய்திகளைப் படிப்பதைவிடப் பகிர்வதில்தான் விருப்பம் அதிகம். அனுப்பும் பொத்தானை அழுத்தும் பழக்கம் கட்டுப்படுத்த முடியாத போதையாகிவிட்டது. முதலில் பகிர்வோம்; பின்னர் நேரமிருந்தால் படித்துக்கொள்ளலாம் என்பதே பலரது செயலாக இருக்கிறது. நாம் அனுப்பும் செய்திகளால் விளையும் நன்மை தீமைகளைப் பற்றிய கவலைகளெல்லாம் கிடையாது. அனுப்புதல் மட்டுமே முழுமுதல் நோக்கம்.

முதலில் சமூக ஊடகச் செய்திகளை இரண்டு வகையாகப் பிரிக்க வேண்டும். ஒன்று சராசரி மனிதர்கள் கண்டதையும் கேட்டதையும் படித்ததையும் அக்கறை அல்லது ஆர்வத்தால் அனுப்பும் வகை.

Representational Image

சமூகத்தில் ஏற்படும் நிகழ்வுகளையும், தனிமனித தவறுகளால் ஏற்படும் பிரச்னைகளையும் தங்களின் கொள்கைகளுக்கு ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ முன்னிறுத்தி, மக்களைப் பிரிவுபடுத்தி அரசியல் லாபமோ பொருளாதார லாபமோ பார்க்க நினைக்கும் குழுக்களைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு பரப்பும் செய்திகள் இரண்டாம் வகை.

பிணம் தின்னிக் கழுகுகளாய்க் காத்திருக்கும் இவர்கள், சில நேரங்களில் முதல்வகைச் செய்திகளையும் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்வார்கள்.

நாற்பதைக் கடந்தவர்களுக்கு நினைவிருக்கலாம்…

இன்டர்நெட்டெல்லாம் இல்லாதிருந்த எண்பதுகளில் அனுப்புநர் முகவரியில்லாத ஓர் அஞ்சலட்டை வரும். ஏதாவது ஒரு மதத்தின் புனித ஸ்தலத்தைக் குறிப்பிட்டு, அங்கு சென்ற ஓர் உடல் ஊனமுற்றவர் உடனடியாக ஊனம் நீங்கி முழு குணமாகிவிட்டார் என்பது போன்ற செய்திகளைக் கொண்டிருக்கும் அந்த அஞ்சலட்டைகள் எந்த மதத்தின் பெயரில் வந்தாலும்,

“இதைப் பத்துபேருக்கு அனுப்பியவர் ஓரிரு நாள்களில் பெரும் செல்வந்தராகிவிட்டார். உதாசினப்படுத்திக் கிழித்துப்போட்டவர் ரத்தம் கக்கி இறந்தே விட்டார்” என ஒற்றுமையாய், ஒரே மாதிரி முடிந்திருக்கும்.

Representational Image

அஞ்சலட்டைகள் அல்லாமல், உடனடியாகச் சிலநூறு பிரதிகள் அச்சிட்டு விநியோக்கிக்க வேண்டும் என்ற இறைவன் பெயரிலான மிரட்டலுடன் கலர் கலர் நோட்டீஸ்களாகவும் அவ்வப்போது வந்து விழும்.

“இப்படிச் செய்யாவிட்டால் அப்படி நிகழும்” எனக்கூறி சராசரி மனிதனின் பயத்தையே அவனுக்கெதிரான ஆயுதமாகத் திருப்புவதுதான் அன்று முதல் இன்று வரை நிகழ்த்தப்படுகிறது. அன்றைய அஞ்சலட்டை, துண்டு நோட்டீஸ்களுக்குப் பதிலாகச் சமூக ஊடகங்கள் என்பது மட்டுமே வித்தியாசம்

சாதி, மதம், மொழி, பிராந்திய வேறுபாடுகளால் பகுத்தறிவின் அனைத்து ஊற்றுக்கண்களும் அடைக்கப்பட்ட ஒரு மண்ணின் மக்களிடம்,

“இச்செய்தியை உடனடியாகப் பகிர்ந்தால் நன்மை பெறுவீர்கள்… இந்த நிலை உங்கள் பிள்ளைகளுக்கு நேரவேண்டாமென்றால் பகிருங்கள்… நீங்கள் பாதிக்கப்படும்வரை காத்திருக்காதீர்கள்… சுயநலத்தால் சும்மா இருந்துவிடாதீர்கள்… சொர்க்கம் கிடைக்கப் பகிருங்கள்… நரகத்தைத் தவிர்க்கப் பகிருங்கள்”

என்றெல்லாம் அறைகூவல் விடுக்கும் செய்திகள் என்னவிதமான வினையாற்றும் என்பது அந்தப் பரப்புரைகளை ஆரம்பித்து வைப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இப்படியாகப் பகிரும் செய்திகளுக்கு வலுசேர்க்கும் ஆதாரங்களாய் சமூக ஊடகங்களில் பதியப்படும் படங்கள் மற்றும் காணொலிகளில் பல அச்செய்திகளுக்குச் சம்பந்தமில்லாதவைகளாகவே இருக்கும்.

Representational Image

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் கொரோனா சூழலையே உதாரணமாக எடுத்துக்கொள்வோம்…

நிலநடுக்கத்தின்போது மருத்துவமனை காலிசெய்யப்படும் புகைப்படங்களும் ஏதோ ஒரு மேலைநாட்டின் சவப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் எடுக்கப்பட்ட படங்களும் இத்தாலியில் கொரோனா பாதிப்பின் விளைவு எனப் பகிரப்படுகின்றன.

சில மாதங்களுக்கு முன்னர் ஜலதோசத்தால் பாதிக்கப்பட்ட ,போப்பண்டவர் மக்கள் தரிசனத்தின்போது மூக்கு சிந்திய படம் இத்தாலியுடன் தொடர்புபடுத்திப் பதியப்படுகிறது.

இரானில் ஒரு நீருற்றுக்கருகில் இயற்கை எரிவாயு கசிந்து, நீரும் நெருப்பும் கொப்புளிக்கும் காணொலி, “மெக்காவில் நீருடன் நெருப்பு உலக முடிவு” என்ற தலைப்புடன் உலா வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த நீர் நெருப்பு காணொலி சில ஆண்டுகளாய் வெவ்வேறு தலைப்பில் சுழன்றுகொண்டிருக்கிறது.

போலீஸார் அடிக்கும் காட்சிகள், மக்கள் ஓடும் காட்சிகள் எனக் கொரோனா நடவடிக்கைகளாகச் சித்திரிக்கப்படும் பல காட்சிகள் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டவை.

Representational Image

ஏறக்குறைய உலகின் அனைத்து நாடுகளிலும் பரவிவிட்ட ஒரு நோய் இந்தியாவில் பரவியதற்கு அந்தக் கூட்டம் காரணம் என ஒரு தரப்பும் இந்தக் கூட்டம் காரணம் என ஒரு தரப்பும் எரியும் நெருப்பில் எண்ணை வார்க்க, நோய்க்கிருமிக்கு சாதிமதப் பேதமெல்லாம் கிடையாது என்ற அடிப்படை அறிவை இழந்தவர்கள் அந்தப் பரப்புரைகளையும் பகிர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

“இவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள். விலகியிருக்கவும்” எனத் தலைப்பிட்டு பெயர், முகவரி, தொழில் விவரங்களுடன் அவ்வப்போது ஒரு பட்டியல் வெளியாகிறது. எந்த ஓர் அரசுத் துறையின் முத்திரையும் இல்லாமல் வெள்ளைத்தாளில் எழுதியோ அல்லது பிரின்ட் செய்தோ வெளியிடப்படும் இந்தச் செயல் கொரோனா டிரெக்கிங் என்று நியாயப்படுத்தப்படுகிறது!

சமூகத்துக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய குற்றவாளி அல்லது பயங்கரவாதி ஒருவனின் விவரங்களை அரசு முறைப்படி வெளியிடுவதற்கும் மருத்துவ ரீதியிலான டிரெக்கிங்குக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. டிரெக்கிங் குழுவினரின் நோக்கம் ஒருவரை தனிமைப்படுத்துவது மட்டுமல்ல. பல்வேறு கேள்விகளின் மூலம் அவர் சந்தித்த, பழகியவர்களின் விவரங்களைப் பெறுவதும் அதில் அடக்கம். சுகாதாரத்துறையினர் தங்களால் கண்டுபிடிக்க முடியாதவர்களைத் தொடர்புகொள்ளக் காவல்துறை போன்ற மற்ற அரசுத் துறைகளை நாடுவார்களே தவிர, இப்படிப் பகிரங்கமாக அனைத்து விவரங்களையும் வெளியிட மாட்டார்கள் என்றெல்லாம் யாரும் யோசிப்பதில்லை.

Representational Image

வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை போன்ற ஊடகங்கள் ஒரு செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதுடன் அல்லாமல் அச்செய்தியைத் தணிக்கைக்கும் உட்படுத்தியபின்னரே வெளியிடுகின்றன. இதற்கு நேர் மாற்றமாய்க் கோரமான விபத்துகள் வன்முறை நிகழ்வுகள் என யார் வேண்டுமானாலும் எதையும் பகிரலாம் என்ற நிலையிருக்கும் சமூக ஊடகத்தில் ஒரு செய்தியைப் பதிவேற்றம் செய்வதற்கு முன்னால் அது நம்பக்கூடியதா என்பதுடன் அது எப்படிப்பட்ட பாதிப்புகளையும் மன உளைச்சல்களையும் ஏற்படுத்தும் எனச் சிந்திக்க வேண்டியதும் மிக அவசியம்.

ஒரு தனிநபர் பற்றிய தகவல்கள் மற்றும் முகவரியை பகிரங்கப்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதோடு அதனால் அந்த நபர் மற்றும் அவர் சார்ந்த குடும்பத்துக்கு ஏற்படும் பாதகங்கள் மற்றும் மன உளைச்சல்களையும் நினைவில் கொள்ள வேண்டும்.

தவறான ஒரு சிறு செய்தி கூடப் பெரும் விளைவை ஏற்படுத்தக்கூடிய இன்றைய சூழலில், எந்த ஒரு செய்தியையும் அவர் அனுப்பினார் இவர் அனுப்பினார் என்று பகிர்ந்துவிடாமல், செய்தியின் பொருள் உணர்ந்து, ஏன் அனுப்பினார் எதற்கு அனுப்பினார் என யோசித்தப்பின் மற்றவர்களுக்கு அனுப்புவதே பகுத்தறிவான செயல்.

“நெல்லை கொட்டினால் அள்ளிவிடலாம் சொல்லை கொட்டினால் அள்ள முடியாது” எனும் கிராமத்து வழக்கு, இந்தக் கணினி யுகத்தில் தகவல்களுக்கும் பொருந்தும்..!

இணையவெளியில் பறக்கவிட்ட தகவலை மீண்டும் பிடித்து அழிக்க இயலாது.

காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.