கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த 24-ம் தேதியிலிருந்து ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. போக்குவரத்து வசதிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டது. இதனால் மாநிலம் விட்டு மாநிலம் சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் இருக்கும் பகுதிகளில் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறார்கள். அதனால் அவரவர் சொந்த மாநிலத்துக்கு நடந்தே செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

லோகேஷ்

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த இளைஞர் லோகேஷ். வயது 23. இவரும் அவருடைய நண்பர்களும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தனியார் உணவு பதப்படுத்தும் நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றுள்ளனர். ஊரடங்கு உத்தரவையடுத்து அந்தத் தனியார் நிறுவனம் காலி செய்யச் சொன்னதால் 450 கி.மீட்டர் நடந்தும், லாரியில் லிஃப்ட் கேட்டும் செகந்தராபாத் வந்து மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் லோகேஷ்.

லோகேஷின் பெற்றோர் பேச முடியாமல் மயங்கிய நிலையில் இருந்ததால் லோகேஷின் தாய்மாமன் ஞானவேலிடம் பேசினோம், “லோகேஷின் அப்பா பாலசுப்ரமணி, அம்மா ராதிகா. இவர்களுக்கு இரண்டு மகன்கள். பெரியவன்தான் தற்போது இறந்துபோன லோகேஷ். சின்னவன் பெயர் சஞ்சய். ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். இவர்கள் பள்ளிப்பாளையம் ஜெயலஷ்மி தியேட்டர் எதிரே வசித்து வருகிறார்கள். லோகேஷின் அப்பா இதய நோயாளி. தனியார் துணிக்கடைக்கு வாட்ச்மேன் வேலைக்குப் போகிறார்.

ஆம்புலன்ஸ்

இவர்களது குடும்பம் ரொம்ப ஏழ்மையான குடும்பம். லோகேஷ் டிப்ளமோ டெக்ஸ்டைல் முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி லோகேஷும், அவரது நண்பர்கள் நாலு பேரும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள மெளரி என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடேட் என்ற நிறுவனத்தில் உணவு பதப்படுத்தும் பணிக்காக 45 நாள்கள் பயிற்சிக்காக சென்றார்கள்.

ஊரடங்கு உத்தரவையடுத்து அந்தக் கம்பெனியில் பணியாற்றியவர்களுக்கு உணவு கூட வழங்காமல் காலி செய்யச் சொல்லிவிட்டார்கள். அதையடுத்து, லோகேஷ் அங்கு பணியாற்றிய 26 பேர் நடந்தும், லாரியில் லிஃப்ட் கேட்டும் 450 கி.மீட்டர் கடந்து தெலங்கானாவில் உள்ள செகந்தராபாத் வந்தடைந்தனர். தெலங்கானா காவல்துறையினர் விசாரித்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து உணவு வழங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில், கடந்த 1-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு லோகேஷ் இறந்துள்ளார். குடும்ப வறுமையைப் போக்குவதற்காகச் சென்ற அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பமே நிலை குலைந்து போயிருக்கிறது.

கதறல்

வெளிநாட்டில் பிற நாட்டின் வளர்ச்சிக்காக வேலை பார்ப்பவர்களை அழைத்துவர அரசு விமானத்தை அனுப்பி அழைத்து வருகிறது. ஆனால், இந்தியாவின் வளர்ச்சிக்காக உள்நாட்டில் வேலை பார்க்கும் தொழிலாளிகளை அழைத்துவர ஒரு வாகனத்தைக் கூட அனுப்பவில்லை என்றால் இது என்ன அரசு? உள்நாட்டில் வேலை பார்க்கும் தொழிலாளிகளை அரசாங்கம் மனிதர்களாகக் கூட மதிக்கவில்லை. எங்க பையனுக்கு ஏற்பட்ட நிலை வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது. இதுபோன்ற அவசர முடிவு எடுக்கும்போது அப்பாவி மக்களையும் கவனத்தில்கொள்ள வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.