கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதுமே ஏப்ரல் 14-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவை தவிர்த்து, பொதுமக்கள் பலரும் தாமாக முன்வந்து வெளியே செல்லவில்லை. ஆனாலும், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அனைத்து தரப்பினருக்கும் பாதிப்புதான் என்றாலும், அன்றாடம் சம்பாதித்துப் பிழைப்பு நடத்துபவர்களின் நிலைதான் பரிதாபம். அன்றாடம் சம்பாதித்துப் பிழைப்பு நடத்துபவர்கள் பலரும் கையிருப்பு ஏதும் இல்லாமல், இந்த ஊரடங்கு நாள்களில் பசியுடன் கிடக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

30 கூலித்தொழிலாளர் குடும்பங்களின் பசிபோக்கும் இளைஞர்கள்

இந்த நிலையில், புதுக்கோட்டை கீழ 6, 7-ம் வீதிகளில், அன்றாடம் சம்பாதித்துப் பிழைப்பு நடத்தும் குடும்பங்கள் இருப்பதைக் கண்டறிந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, தினமும் அவர்களுக்கு மதியம், இரவு என இரண்டு வேளைகளிலும் சாப்பாடு போட்டு அசத்துகின்றனர். மீன் குழம்பு, ஆட்டுக்கால் சூப், பிரியாணி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வெரைட்டி சாப்பாடு போட்டு அசத்துகின்றனர். இளைஞர்களின் இந்தச் செயலைப் பாராட்டிய தன்னார்வ அமைப்புகள், ரோட்டரி சங்கங்களும் சாப்பாடு வழங்கி உதவ முன்வந்துள்ளனர்.

சாப்பாடு வழங்குவதை முன்னெடுத்த விவேக் மற்றும் நியாஸிடம் பேசினோம், “ஊரடங்கு உத்தரவால ஆதரவற்றோர் பலரும் சாப்பாடு கிடைக்காம கஷ்டப்பட்டாங்க. அதனால, எங்க வீட்டுல உணவு தயார் செஞ்சு, உணவுப் பொட்டலங்களை எடுத்துக்கிட்டுப் போய் தெருத் தெருவா கொடுத்தோம். அப்பத்தான், கீழ 6-ம் வீதியில் அந்த மாற்றுத்திறனாளி பெண்ணைப் பார்த்தோம். சாப்பாடு கொடுத்தோம். ரெண்டு மூணு பொட்டலங்கள் கேட்டாங்க. விசாரிச்சப்பதான், அவங்க குடும்பத்துல யாரும் சாப்பிடலைனு தெரிஞ்சது. இவங்கள மாதிரி அந்தப் பகுதியில் ஒரு 30 குடும்பங்க இருக்காங்க. மழை, வெயில் படாம இருக்க போடப்பட்ட சிறிய தொகுப்பு வீடுகள்தான் இவர்களுடைய வீடு. பூ கட்டுறது, வீட்டு வேலைக்குப் போறதுதான் இவர்களோட தொழில். வீட்டு வேலைக்குப் போயிட்டு வந்தால்தான் இவர்களுக்கு சாப்பாடு. உடனே நாங்க நம்மலால முடிஞ்ச வரைக்கும் தினமும் ஒரு வெரைட்டி ரைஸாவது கொடுக்கலாம்னு முடிவு பண்ணி, சாப்பாடு கொடுக்க ஆரம்பிச்சோம்.

30 கூலித்தொழிலாளர் குடும்பங்களின் பசிபோக்கும் இளைஞர்கள்

ஆனா இப்போ… மீன், பிரியாணின்னு வித விதமா கொடுக்கிறோம். பாதுகாப்போட வீட்டிலேயே எல்லாருக்கும் சமைச்சிடுவோம். எங்களோட முன்னெடுப்பைப் பார்த்துட்டு நண்பர்கள், இளைஞர்கள் எல்லாம் முன்வந்து ஒத்துழைப்பு கொடுக்கிறாங்க. தொடர்ச்சியா ஊரடங்கு முடிகிற வரைக்கும் அவங்களுக்கு சாப்பாடு கொடுக்கணும்” என்கின்றனர்.

இதுபற்றி கூலித் தொழிலாளர் குடும்பங்களிடம் பேசினோம், ”இப்போதைக்கு கூழோ, கஞ்சியோ கிடைச்சா போதும் என்றுதான் நெனச்சோம். ஆனா, இந்த பிள்ளைங்க எங்களுக்கு விதவிதமா சாப்பாடு கொடுக்கிறாங்க. இவங்க எல்லாரும் சேர்ந்து செய்யுற உதவியை எங்க காலம் உள்ள வரைக்கும் மறக்கமாட்டோம்” என்கின்றனர் நெகிழ்ச்சியாக.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.