கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் முன்னுதாரணமாக இருக்கும் நாடுகளில் துபாயும் ஒன்று. அரசின் வேண்டுகோளை ஏற்று அந்நாட்டு மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்குத் தவிர வெளியே நடமாடுவதில்லை. வீட்டிலிருந்தே வேலை, இணையளதளத்தில் கல்வி மற்றும் விளையாட்டுப் பயிற்சிகள் எனப் பெருவாரியான மக்கள் வீட்டிலிருந்தபடியே தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

துபாயில் வசித்துவரும் `பேரன்பு’ சாதனாவின் (குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்) தந்தை வெங்கடேஷிடம் அந்த நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்துப் பேசினோம்.
“காய்கறிகள், மளிகைப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே செல்கின்றனர். சமூக இடைவெளியைச் சரியாகக் கடைப்பிடித்து, ஒவ்வொரு கடைக்கும் உள்ளே செல்லும்போதே சானிடைஸர் பயன்படுத்திய பிறகே பொருள்களை வாங்குகின்றனர். இதை ஒவ்வொரு கடையினரும் சரியாக மேற்பார்வையிடுகின்றனர்.

இந்தச் சில கடைகளும் காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை மட்டுமே இயங்கும். அதன் பிறகு, ஒட்டுமொத்த துபாய் நாட்டிலும் எந்தக் கடைகளும், நிறுவனங்களும் இயங்குவதில்லை. அந்த நேரத்தில் மக்களும் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு அனுமதியில்லை. மாஸ்க் அணியாமல் செல்பவர்களையும் கும்பலாக நடமாடுபவர்களையும் பிடித்து காவல்துறையினர் பெரிய தொகையை உடனடி அபராதமாக விதிக்கின்றனர்.

அனுமதியின்றி வாகனங்களில் பயணம் செய்தால் ரேடார் தொழில்நுட்ப உதவியுடன் வாகனத்தை உடனே காவல்துறையினர் சுற்றிவளைத்து அபராதம் விதிப்பது அல்லது வழக்கு பதிவு செய்கின்றனர். வெளிநிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்வோரில் 80 சதவிகிதத்தினர் வீட்டில் இருந்தும், சிலர் மட்டும் காவல்துறையினரிடம் உரிய அனுமதி பெற்று அலுவலகத்துக்குச் சென்றும் வேலை செய்கின்றனர்.
வெளியூர் பயணங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கொரோனாவுக்கான மருத்துவப் பரிசோதனைகளுக்கு மிகப்பெரிய இடத்தை அரசு அமைத்திருக்கிறது. அரசின் நடவடிக்கைகளால், மக்களின் ஒத்துழைப்பால் பெரிய அச்சம் இல்லாத வகையில் துபாய் நாட்டில் கொரோனா பாதிப்பு மிகவும் கட்டுக்குள் இருக்கிறது” என்பவர் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்துப் பேசினார்.

“மார்ச் 15 முதல் நாங்கள் வீட்டிலேயேதான் இருக்கிறோம். என் மனைவி ஆன்லைனில் நடன வகுப்புகள் எடுக்கிறார். பொதுத்தேர்வு இல்லாத மாணவர்களுக்கான பள்ளித் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. 12-ம் வகுப்பு படிக்கும் மகள் சாதனாவுக்கு இன்னும் ஒரு தேர்வு நடக்கவிருந்த நிலையில், வெளிநாட்டில் இருந்துவந்து துபாயில் வசிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரு தேர்வையும் அரசு ரத்து செய்து சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. பொதுத்தேர்வு எழுதும் இந்த நாட்டு மாணவர்களுக்கான தேர்வு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை” என்று கூறினார் வெங்கடேஷ்.