உடல்நிலையில் கவனம்கொள்ள வேண்டியவர்கள் மட்டுமே உபயோகித்துக்கொண்டிருந்த மாஸ்க், தற்போது உலகளவில் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா வைரஸிடமிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்வதற்காக, சிறியவர்கள் முதல் வயதானவர்கள்வரை அனைவரும் மாஸ்க் அணிந்துகொள்கிறார்கள். டிமாண்ட் அதிகமானதால், ஐந்து ரூபாய்க்குச் சாதாரணமாகக் கடைகளில் கிடைத்துக்கொண்டிருந்த மாஸ்க், இப்போது ரூ.50 வரை விற்கப்படுகிறது.

mask

இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு, ‘காய்ச்சல், இருமல், அல்லது மூக்கு ஒழுகுதல் போன்ற சுவாசப் பிரச்னை அறிகுறிகள் இல்லாதவர்கள், மாஸ்க் அணியத் தேவையில்லை. ஆரோக்கியமாக இருக்கும் மக்கள் மாஸ்க் அணிவதால் அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. மேலும், சரியான முறையில் மாஸ்க்கைப் பயன்படுத்தவில்லையென்றால் அது தொற்றுநோய்க்கான ஆதாரமாகவும் மாறும்’ என்று அமெரிக்க சர்ஜன் ஜெனரல் மற்றும் உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டது.

ஆனால், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில், மாஸ்க்குக்கு எந்தளவுக்குப் பங்கிருக்கிறது என்பது குறித்து எந்தவோர் ஆராய்ச்சியும் அதுவரை செய்யப்படவில்லை என்பதே நிதர்சனம். இந்நிலையில் ‘முகக்கவசம் அணிவதால் நோய்த்தொற்றை எந்தளவுக்குக் குறைக்க முடியும்?’ என்பது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு அதன் முடிவை வெளியிட்டிருக்கிறது maskssaveslife இணையதளம்.

Corona

அவர்களின் ஆய்வு முடிவில், ‘ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது மேற்கத்திய நாடுகளே கொரோனாவின் நோய்த்தொற்றால் அதிக பாதிப்படைந்து வருகின்றன. அதற்குக் காரணம் அவர்கள் முகக்கவசம் அணிவதில் காட்டிய அலட்சியம்தான். உலகளவில் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, உலக மக்கள் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.

மேலும், ‘பொதுவாகவே மாஸ்க் அணியும் கலாசாரத்தைப் பின்பற்றுபவர்கள் ஜப்பானியர்கள். இவர்கள், உலகளவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிப்படைந்தவர்களில், மிகக் குறைந்த விகிதத்தைக் கொண்டிருக்கிறார்கள். இங்கு, மக்கள் தொகையில் வயதானவர்கள் அதிகம் என்பதால் நோய்த்தொற்று எளிதாகப் பரவுவதற்கு அதிகம் வாய்ப்புண்டு. ஆனால், தொற்று மற்றும் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக் குறைவாக இருப்பது ஜப்பானில்தான். இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,387. சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய அதே நேரத்தில்தான் இங்கும் நோய்த்தொற்று பரவ ஆரம்பித்தது.

corona virus

மார்ச் 18 முதல் செக் குடியரசு, மக்கள் பொதுவெளியில் இருக்கும்போது முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கியது. அங்கு இதுவரை, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,942, மற்றும் 23 இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன. மற்ற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது பாதிப்பு விகிதம் இங்கு மிகவும் குறைவு. இதற்குக் காரணம் அங்கு அமல்படுத்தப்பட்ட கட்டாய முகமூடி அணியும் சட்டம்தான்’ என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

மாஸ்க் விழிப்புணர்வு பற்றியும், யார் எந்த வகையான மாஸ்க் பயன்படுத்தவேண்டும் என்பதைப் பற்றியும் தொற்றுநோயியல் சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூரிடம் பேசினோம்.

Mask

“முன்பு காய்ச்சல், சளி இருப்பவர்கள் மட்டுமே மாஸ்க் பயன்படுத்த அறிவுறுத்தினோம். தற்போது நம்மிடம் இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அந்த நிலைப்பாட்டை மெல்ல மெல்ல மாற்றிவருகிறோம். என்றாலும், மாஸ்க் அணிவதன் மூலம் 100% நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்திவிடலாம் என்றும் சொல்லிவிட முடியாது. மாஸ்க் உபயோகம் முழுக்க முழுக்க தனிமனிதப் பாதுகாப்புக்காக மட்டுமே. எனவே, மாஸ்க் அணிவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், எந்த மாஸ்க் அணியவேண்டும் என்பதில் கவனம் தேவை. அதைச் சரியாகப் பராமரிப்பதும் அவசியம்.

N95, சர்ஜிக்கல் மற்றும் துணி என மூன்று வகையான மாஸ்க்குகள் மார்க்கெட்டில் இருக்கின்றன. பொதுமக்கள் நிச்சயம் N95 மாஸ்க்குகளைப் பயன்படுத்தக்கூடாது. நோய்த்தொற்று உள்ளவர்களைக் கவனித்துக்கொள்ளும் மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே N95 மாஸ்க்குகளை பயன்படுத்தவேண்டும். சாதாரணமாகக் கடைகளில் கிடைக்கும் சர்ஜிக்கல் மாஸ்க்கை, நோய்த்தொற்றாளர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டிய சூழலிலிருக்கும் பொதுமக்கள் பயன்படுத்தலாம். அதைச் சரியான முறையில் அணியவும், அப்புறப்படுத்தவும் வேண்டும். சர்ஜிக்கல் மாஸ்க் இல்லாத பட்சத்தில், சுத்தமான, தரமான பருத்தித் துணியில் தயாரித்த மாஸ்க்குகளை உபயோகப்படுத்தலாம்” என்றவர்,

Abdul Gafur

”மாஸ்க் அணிவதால் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தப்பிவிடலாம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கண்கள் வழியாகவும் பரவக்கூடும். மேலும், ஏரோசால்ஸ் (aerosols) எனும் சிறிய வைரஸ் துகள்கள் மாஸ்க்கிலும் ஊடுருவக்கூடும். இருப்பினும், கொரோனா வைரஸின் முக்கியப் பரிமாற்றப் பாதையாக இருக்கும் நீர்த்துளிகளைத் தடுப்பதில் மாஸ்க்குகள் பயனுள்ளதாக இருக்கும். எனவே, சரியான மாஸ்க்கை முறையாகப் பயன்படுத்துவது சிறந்தது” என்றார் டாக்டர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.