கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, இந்தியாவில் 21 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வங்கிகளில் நகைக் கடன் வழங்குவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றும் லட்சக்கணக்கான நகை மதிப்பீட்டாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள். தங்களது குடும்பங்களின் அன்றாட ஜீவாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கவலையோடு பேசுகிறார்கள்.

இவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதோடு மட்டுமல்ல, தற்போது வருமானத்திற்கு வழியில்லாமல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறு, குறு விவசாயிகள், கட்டடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை, எளிய மக்கள், அவசரப் பணத் தேவைகளுக்குத் தங்களது நகைகளை அடகு வைக்க முடியாத அவல நிலையும் உருவாகியுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் மிகுந்த கவலையோடு பேசிய நகை மதிப்பீட்டாளர்கள் சிலர், “வங்கிகளில் வேலை பார்க்கும் நகை மதிப்பீட்டாளர்களுக்கு வங்கி நிர்வாகம் எந்த ஒரு ஊதியமும் வழங்குறதில்லை. நகைகள் அடமானம் வைக்கக் கூடியவங்கக்கிட்ட இருந்து, ஒரு சிறு தொகையை கமிஷனாகப் பிடிச்சு, அதுல ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை வங்கி நிர்வாகம் எடுத்துக்கிட்டு மீதியைத்தான் எங்களுக்குக் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. உடல்நிலை சரியில்லைனு ஒருநாள் வேலைக்குப் போகலைனாலும்கூட எங்களுக்கு வருமானம் போயிடும். அதுவும்கூட நகை அடமானம் நடந்தால்தான் எங்களுக்கு வருமானம் வரும். 21 நாள்கள் கொரோனா ஊரடங்கால் இப்ப எங்களோட நிலைமை ரொம்பவே பாதிக்கப்பட்டுருக்கு.

இப்ப வங்கிகள் திறந்திருந்தாலுமே கூட, நகைக் கடன்கள் கொடுக்குறதை எல்லாமே வங்கிகள் நிறுத்தி வச்சிருக்கு. எங்களுக்கு வேற வருமானம் கிடையாது. இதைத்தான் நாங்க நம்பி இருக்கோம். நகைக் கடன்கள் கொடுக்குறதை நிறுத்தி வச்சதுனால, இந்தியாவுல எங்கள மாதிரி லட்சக்கணக்கான நகை மதிப்பீட்டாளர்களின் குடும்பங்கள் கடுமையா பாதிக்கப்பட்டுருக்கு. வங்கிகள்ல பணியாற்றும் பணியாளர்களுக்கு, எப்படி இருந்தாலும் சம்பளம் வந்துடும். ஆனால், எங்களோட பிழைப்புதான் கடுமையான திண்டாட்டத்துல இருக்கு. கடந்த பத்து நாள்களா அன்றாட ஜீவாதாரத்துக்கே திணறிக்கிட்டு இருக்கோம். இன்னும் 13 நாள்கள் எப்படி ஓட்டப் போறோமோ தெரியலை. ஒரு சில வங்கிக் கிளைகள்ல நகைக் கடன்கள் வழங்க மேலாளர்கள் அனுமதிச்சாலும்கூட, நகை மதிப்பீட்டாளர்களால் வீட்டை விட்டே வெளியில வர முடியாத சூழல் இருக்கு.

வங்கிகளில் பணியாற்றும் மற்ற ஊழியர்களுக்கு எல்லாம் வங்கி நிர்வாகம் அடையாள அட்டை வழங்கியிருக்கு. வங்கிகளுக்குப் போயிட்டு வர அவங்களை காவல்துறை அனுமதிக்குது. ஆனால் நகை மதிப்பீட்டாளர்களிடம் அடையாள அட்டை இல்லாததால, வங்கிகளுக்குப் போக முடியலை” எனத் தெரிவித்தார்கள்.
இப்பிரச்னை குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் சுகுமாறன், ‘’சிறு, குறு விவசாயிகள், கட்டடத் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் தங்களோட அவசரப் பணத் தேவைகளுக்கு வங்கிகளைத்தான் நம்பி இருக்காங்க. ஊரடங்கால் இப்ப வருமானம் இழந்து தவிக்கக்கூடியவங்க, வேற எங்கயுமே கடன் வாங்க முடியாத சூழல்ல இருக்காங்க. தங்களிடம் உள்ள நகைகளை வங்கிகளில் அடமானம் வச்சாவது வயிற்றுப் பொழப்பை ஓட்டலாம்னு பார்க்குறாங்க. ஆனா அதுக்கும் இப்ப வழியில்லாமப் போயிடுச்சி. ஏழை எளிய மக்களின் நலன் கருதியாவது, உடனடியாக வங்கிகளில் நகைக் கடன்கள் கொடுக்க ஆரம்பிக்கணும்” என்றார்.