இத்தாலியில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த நாட்டில் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக இத்தாலியர்கள் தங்களின் பணத்தைத் தெருக்களில் வீசுகின்றனர் என்று சமூக வலைதளங்களில் சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இந்தப் புகைப்படத்தின் உண்மைத்தன்மை என்ன என்பதை விகடன் பேக்ட் செக் குழு பரிசோதித்தது.

ஏப்ரல் 3 -ம் தேதி நிலவரப்படி, இத்தாலியில் 1,15,242 -க்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,900-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 18,000-க்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இத்தாலி இரண்டாம் இடத்தில் உள்ளது.

“செல்வத்தின் மீதும், கடவுள் மீதும் நம்பிக்கையை இழந்து பணத்தை ரோட்டில் வீசிய இத்தாலியர்கள்”. “
“இத்தாலியர்கள் தங்கள் பணத்தைத் தெருக்களில் எறிந்தனர், இப்போது பணத்தால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை..” என்பது போன்ற வாசகங்களுடன் தெருவெங்கும் சிதறிக்கிடக்கும் ரூபாய் நோட்டுகளைக் கொண்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கின்றன.

இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் இத்தாலியில் எடுக்கப்பட்டதல்ல. வெனிசுலாவில் எடுக்கப்பட்டவை. 2018-ம் ஆண்டு வெனிசுலாவின் பழைய நாணயமான பொலிவர் ஃபியூர்டே, புதிய வடிவிலான நாணயமான பொலிவார் சோபெரானோவாலாக மாற்றப்பட்டது.

வெனிசுலாவில் உள்ள ஒரு வங்கியில் கொள்ளை நடந்தது. பின்னர் அந்தப் பணம் மதிப்பற்றது என்று தெரிந்ததும் அந்த மக்கள் பழைய பணத்தை வீதிகளில் வீசி எறிந்ததாகவும், சிலர் தீயில் எரிந்ததாகவும் அந்தச் சமயத்தில் வெனிசுலாவில் வெளியான செய்திகள் கூறுகின்றன.

மொத்தத்தில் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படும் இந்தச் செய்தி போலியான ஒன்று.