உலக வல்லரசான அமெரிக்கா கொரோனா பாதிப்பிலும் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் இதுவரை 5 கோடி பேர் தங்களது வேலையை இழந்துள்ளனர். இம்மாத இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 7 கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலையிழந்தவர்களில் இந்தியர்களும் அடங்குவர்.
H1-B விசா பெற்று இந்தியர்கள் அமெரிக்காவுக்கு பணிக்குச் செல்கின்றனர். இந்த விசா 3 ஆண்டுகள் அமெரிக்காவில் பணியாற்ற வழிவகை செய்கிறது. விசா காலம் முடிந்தவுடன் புதுப்பித்துக் கொண்டால் மேலும் 3 ஆண்டுகள் கிடைக்கும். H1-B விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றுபவர்களில் 67 சதவீதம் பேர் இந்தியர்கள். அவர்களில் பலரும் தற்போது தங்கள் வேலையை இழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்துத் தெரிந்து கொள்ள நாம் அமெரிக்கப் பத்திரிகையாளர் ஷீலா ரமணனை தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறும் போது “ பெரு நிறுவனங்கள் மூடப்பட்டதால் பலரும் இங்கு வேலை இழந்து காணப்படுகின்றனர். அதனால் வருமானமும் பெருமளவில் சரிந்துள்ளது. மேலும், கடைகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இராண்டாம் உலகப்போருக்குப் பிறகு பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது” என்றார்
கொரோனாவால் வேலையை இழந்திருப்பவர்களுக்கு உதவ அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் அந்த உதவிகள் அமெரிக்கர்களுக்குத்தான் கிடைக்கும். H1-B விசா மூலம் அந்நாட்டில் பணிபுரிவார்களுக்குக் கிடைக்காது. மேலும் H1-B விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றுபவர்கள் வேலையை இழந்தால், அதன்பின் 60 நாள்களுக்கு மட்டுமே அந்நாட்டில் தங்கியிருக்க முடியும். அதன் பிறகு அங்கிருந்து வெளியேற வேண்டும்.
ஊரடங்கில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் – வைரஸின் பெயரைச் சூட்டிய பெற்றோர்
இந்தக் கெடுவை 90 நாள்களாக அதிகரிக்க வேண்டும் என்று இந்தியத் தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பான நாஸ்காம் அமெரிக்க அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இதுஒருபுறமிருக்க கொரோனாவால் அமெரிக்கர்கள் வேலையிழப்பைச் சந்தித்துள்ளதால் சில காலத்திற்கு H1-B விசா வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற குரல்கள் அமெரிக்காவில் கேட்கத் தொடங்கியிருக்கின்றன. எனவே கொரோனா பிரச்னை முடிந்தாலும் இந்தியர்களுக்கு H1-B விசா கிடைக்குமா எனத்தெரியவில்லை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM