கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐந்து பேருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் பணி செய்தவர். மற்ற நான்கு பேரும் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு ஊர் திரும்பியவர்கள். இவர்களின் ரூட் மேப் எடுக்கப்பட்டு, அவர்களின் தொடர்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்கள், 165 நபர்களுடன் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த 165 நபர்களும் தற்போது வீட்டில் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி தனிமை வார்டு

இதுகுறித்து அதிகாரி ஒருவர் நம்மிடம் கூறுகையில், “சென்னை விமான நிலையத்தில் பணியில் இருந்தவர் ஊர் திரும்பிய பிறகு அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதற்காக மருந்து வாங்க நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பின்னர், காய்ச்சலின் தீவிரம் அதிகமானதால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று அட்மிட் ஆகியுள்ளார். அவர் நாகர்கோவிலில் உள்ள அவரின் மனைவி வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்துள்ளார். தற்போது அவரது நண்பர் உள்ளிட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Also Read: `தொடர்ந்து அதிகரிக்கும் எண்ணிக்கை.. ட்ரம்ப்புக்கு 2-ம் கட்ட பரிசோதனை! – கொரோனா அப்டேட்ஸ்

டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களில் இரண்டு பேர் 23-ம் தேதி இரவே நாகர்கோவில் வந்துவிட்டார்கள். பின்னர் அவர்கள் உறவினர்களின் வீட்டுக்கு பைக்கில் சென்றுள்ளனர். மற்ற இருவரில் ஒருவர் 23-ம் தேதி டெல்லியிலிருந்து விமானத்தில் சென்னை வந்துள்ளார்.

23-ம் தேதி இரவு 11 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்துள்ளார். விமானநிலையத்திலிருந்து ஆட்டோவில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் வந்துள்ளார். அங்கிருந்து எஸ்.இ.டி.சி பேருந்தில் நள்ளிரவு 1 மணிக்கு மதுரை வந்து மதுரையிலிருந்து அரசு பஸ்ஸில் 24-ம் தேதி காலை 6 மணிக்கு நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தை அடைந்துள்ளார். அங்கிருந்து சொந்த வாகனத்தில் வீடு சேர்ந்துள்ளார். மற்றொருவரும் அதுபோல விமானத்தில் சென்னை வந்து கோயம்பேடு, மதுரை வழியாக நாகர்கோவிலுக்கு 24-ம் தேதி காலை 6 மணிக்கு வந்து சேர்ந்துள்ளார். அங்கிருந்து அவரது சகோதரரின் பைக்கில் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

கொரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் இவர்கள் யாரை எல்லாம் தொடர்புகொண்டார்கள் என 165 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்களை தனிமைப்படுத்திக் கண்காணித்து வருகிறோம். இவர்களுடன் விமானத்தில் பயணித்தவர்கள், பேருந்தில் பயணித்தவர்கள் ஆகியோரின் விவரங்களைச் சேகரிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.