இரண்டு உலகப் போர்களுக்குப் பிறகு, நீண்ட நாள்களாக மொத்த உலகத்தின் கவனமும் ஒரே இடத்தில் குவிந்திருப்பது இந்தக் கொரோனாவிற்கு எதிரான போரில்தான். உலகின் 205 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. ஒவ்வொரு நாடும் அதனதன் தனித்தன்மைக்கும் திறமைக்கும் ஏற்ப அதனோடு போராடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பல நாடுகள் முழு முடக்கத்தை (Lockdown) அமல்படுத்தியிருக்கின்றன. போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருப்பது முதல், அத்தியாவசியங்கள் தவிர மீதமிருக்கும் மற்ற அனைத்து வர்த்தகச் செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டிருப்பது வரை, இந்த முடக்கம் உலகை ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறது. ஏறத்தாழ உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறது.

இந்தியாவும் கூட கடந்த இரண்டு வாரங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, முடக்கத்தில் இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் நடந்தே வீடு செல்லும் கொடுமைகள் ஒருபுறம், வருமானமின்றி வறுமையில் வாடும் குடும்பங்கள் மறுபுறம் என வறியவர்களை நோயுடன் சேர்த்து, இந்தியாவின் இயலாமையும் வதைத்துக்கொண்டிருக்கிறது.

இந்தியா

அதேசமயம், சிலருக்கு இணையமும், சமூக வலைதளங்களும் இந்த முடக்கத்தைச் சமாளிக்க உதவிக்கொண்டிருக்கிறது. சம்பந்தமே இல்லாமல் சமுத்திரக்கனி முதல், போலீசாரின் லத்தியடி வரை மீம்ஸுகள் குவிந்து நம் பொழுதுகளைப் போக்கிக் கொண்டிருக்கிறது. இவை எதுவுமில்லாமல், காஷ்மீர் முடங்கிக் கிடந்ததன் வலியை, பயத்தை இங்கு நினைவு கூராமல் கடக்கமுடியவில்லை.

இந்தப் பேராபத்திலிருந்து மீண்டு நாம் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பலாம். ஆனால் இனி ஒருபோதும் உலகம் பழைய நிலையை அடையப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம். தனிமைப்படுத்துதல், சமூகப் பரவல், முடக்கம், ஊரடங்கு என இந்த வார்த்தைகளின் முழு அர்த்தமும், வீரியமும் புரிந்துகொள்ளப் பெரும்பகுதி இந்தியர்கள் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், உலகின் மற்ற பகுதிகளில், பிற நாடுகளில் மக்கள் இதை எப்படிக் கடைப்பிடிக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் எனச் சற்றே எட்டிப்பார்த்ததில் சில அதிர்ச்சிகளும் ஆச்சர்யங்களும் காத்திருந்தன அதன் தொகுப்பு இங்கே…

Also Read: உலகில் கொரோனா வைரஸ் தொற்றே ஏற்படாத நாடுகள் இவைதான்!

சீனா

சாதாரணமாகவே சர்ச்சைக்குரிய நாடு. Covid -19 வைரஸ் தொற்றின் முதல் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட இடம் என்பதால், ஓராயிரம் கான்ஸ்பைரசி தியரிகள், அனுமானங்கள், குற்றச்சாட்டுகள், கோபங்கள், சர்ச்சைகள் என உலகின் அனைத்து நாடுகளும் ஏதோ ஒரு வகையில் சீனாவைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றன. வூஹான் உட்படப் பல மாகாணங்களை ஜனவரி மாதமே முழுவதும் இரும்புக்கரம் கொண்டு முடக்கி, தற்போது மீண்டுகொண்டிருக்கிறது, விரைவில் தனிமைப்படுத்தலிலிருந்து சீன மக்களுக்கு விடுதலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. சீனாவைப் பற்றி நிறைய கட்டுரைகளில் பேசிவிட்டதால் மற்ற நாடுகளைப் பார்ப்போம்.

இத்தாலி:

உலக நாடுகள் எல்லாம் தனிமைப்படுத்துதல் (Quarantine) எனும் வழியை, Covid -19 கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் தீர்வாகக் கையிலெடுக்க முன்னோடி உண்மையில் இத்தாலிதான். அங்கு முதல் Covid -19 நோயாளி அடையாளம் காணப்பட்ட காடொக்னோ (Codogno) எனும் பகுதியில்தான் முதலில் முடக்கம் அமல்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் ஜனநாயகத்திற்கு எதிரான செயலாக உலகம் முழுக்க விமர்சிக்கப்பட்டாலும், அங்கு கணிசமாகக் குறைந்த நோய்த் தொற்று பல நாடுகளை இந்த முடக்கத்தைப் பின்பற்ற வைத்திருக்கிறது.

பிப்ரவரி இறுதியில் ஒரு சில மாகாணங்களில் தொடங்கிய முடக்கம், மார்ச் 10 இத்தாலி முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்தியாவின் முடக்கத்தைப் போலவேதான் அங்கேயும், அத்தியாவசியங்களைத் தவிர்த்து, போக்குவரத்து உட்பட மற்ற அனைத்துச் செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. கூடுதலாக உணவகங்கள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதியிருக்கிறது. அங்கும் மூன்று அடி இடைவெளி கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

இத்தாலி

அங்கு மக்கள் இந்த முடக்கத்திற்கு ஒத்துழைக்கவில்லை என்று நாம் படிக்கும் வாட்ஸ் அப் குறுந்தகவல்கள் உண்மை அல்ல. மக்கள் அதன் அவசியத்தைப் புரிந்துகொள்ளவில்லை என்பதே உண்மை. படங்களில் மட்டுமே பார்த்திருந்த ஒரு சூழல் உண்மையில் உருவாகும் போது மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவும், புரிந்துகொள்ளவும் சிரமப்பட்டனர். அச்சத்திலும், பதற்றத்திலும் இருந்த மக்கள் ஊரடங்கு வரப்போகிறது என்று அறிந்தவுடன், சொந்த ஊருக்குச் செல்வதற்காக ஆயிரக்கணக்கில் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் திரண்டனர்.

தங்கள் குடும்பங்களுக்குத் தேவையான பொருள்கள் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காகக் கடைகளில் குவிந்து பொருள்களை வாங்கிக் குவித்தனர். ஏதோ போரடிக்கும் விடுமுறை, குடும்பத்துடன் கூடுதல் நேரம் என வீட்டிலிருப்பதை விளையாட்டுத்தனமாக எடுத்துக்கொண்டனர், fake நியூஸ் எனப்படும் போலியான தகவல்கள் ஏராளம் பரவியதால், சரியான வழிகாட்டுதல்களைத் தவறவிட்டனர். இத்தாலியர்கள் சில உயிரிழப்புகளைச் சந்தித்த பிறகு தாமதமாகத்தான் பல விஷயங்களை உணர்ந்தனர். விளைவு – நாம் அறிவோம்.

ஸ்பெயின்:

மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி அங்கு சுமார் 94,000 மக்கள் Covid -19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், எட்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அதுவும் மார்ச் 31-ம் தேதி ஒரே நாளில் 849 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். மார்ச் 17 முதல் அதன் 47 மில்லியன் மக்களை வீட்டிற்குள் முடங்கியிருக்க உத்தரவிட்டிருந்தது ஸ்பெயின் அரசு. வங்கிகள், மருத்துவமனைகள், அத்தியாவசியப் பொருள்கள் விற்கும் கடைகள், ஆகியவை திறந்திருக்க அதைப் பயன்படுத்தவும் அங்கு பணிபுரியவும் மட்டுமே மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். பார், உணவகங்கள் ஆகியவை முற்றிலும் அடைக்கப்பட்டிருக்கின்றன.

உத்தரவை மீறி வெளியே வருபவர்களுக்கு 100 யூரோ முதல் 6,00,000 யூரோ வரை, வெளியே வந்ததன் காரணம், அவர்களின் உடல்நிலை ஆகிய விவரங்களைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படுகிறது அல்லது அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். மிகத் தீவிரமான இந்தக் கட்டுப்பாடுகளால் மக்களின் நடமாட்டமின்றி வெறிச்சோடி இருக்கிறது ஸ்பெயின் சாலைகள்.

ஸ்பெயின்

பொதுவாகத் தனிநபர் சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவை ஐரோப்பிய நாடுகள், அவ்வகையில் மிகவும் சுதந்திரமாக இருந்து பழக்கப்பட்ட ஸ்பெயின் மக்கள், கொரோனா பீதியையும் தாண்டி, அரசாங்கத்தின் மீது சற்று கோபமாகவே இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியே வந்து வைரலான வீடியோ ஒன்று அந்நாட்டில் மட்டுமல்லாது, அங்கு முடக்கம் என்ற பெயரில் மனித உரிமை மீறல் நடப்பதாக உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது.

அந்த வீடியோவில் சாலையில் நடமாடும் ஒரு 22 வயது மொரோக்கோ இளைஞரை, தடுத்து நிறுத்திய போலீசார், எங்கு செல்கிறாய் எனக் கேட்கிறார்கள். அதற்கு அவர் பதில் சொல்லாமல் இருக்கவே, அவரை லத்தியால் இருமுறை அடிக்கிறார்கள், பார்த்துக்கொண்டிருப்பவர்கள் போலீசாரைத் திட்ட, ஜன்னல்கள் வழி பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்பி இதற்கு எதிராகப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள் அந்த ஊர் மக்கள். தற்போது இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடக்கிறது. ஸ்பெயின் நாட்டிலும் ஏப்ரல் 15 வரை இந்த முடக்கம் நீடிக்கும் எனச் சொல்லப்படுகிறது.

Also Read: பிரதமர் `அறிவிக்க முடியாது’ என்ற ஊரடங்கை, அறிவித்துக் காட்டிய மாஃபியா – பிரேஸிலில் நடப்பது என்ன?

ரஷ்யா:

மார்ச் 30 முதல் ஒருவாரத்திற்குச் சம்பளத்துடன் கூடிய நாடு தழுவிய விடுமுறை அளித்திருக்கிறது ரஷ்யா. விடுமுறை – ஒர்க் ஃப்ரம் ஹோம் இல்லை! இந்தக் காலகட்டத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளிவரத் தடை விதித்திருக்கிறது ரஷ்யா. சிறப்பு பாஸ் பெற்று மட்டுமே மக்கள் வெளிவர முடியும். தவிர 100 மீட்டர் சுற்றளவில் செல்லப்பிராணிகளை வாக்கிங் கூட்டிச் செல்லலாம், குப்பைகளை வெளியே எடுத்துச் செல்லலாம், மளிகை மற்றும் மருந்துப் பொருள்கள் வாங்கச் செல்லலாம் அவ்வளவே. இவைதவிர ரஷ்யா நாட்டு மக்களை ஏற்றிவரும் விமானங்கள் தவிர மற்ற விமானங்களுக்குத் தடை விதித்திருக்கிறது.

ரஷ்யா

தென் ஆப்பிரிக்கா

மார்ச் 26 முதல் 21 நாள் முடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசிய வர்த்தகம் மட்டும் நடைபெறுகிறது. போலீசாரும் ராணுவத்தினரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடுமையான கட்டுப்பாடுகளால் மக்கள் அத்தியாவசியத் தேவைக்குக் கூட அதிகம் வெளியே வருவதில்லை.

நியூசிலாந்து:

மார்ச் 25 முதல் ஒரு மாதத்திற்கு முடக்கம் அமலில் இருக்கிறது. வெளி நாடுகளிலிருந்து வரும் அனைவரும் கட்டாயம் 14 நாள்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா:

மார்ச் 23 முதல் அத்தியாவசியங்கள் தவிர்த்து மற்ற அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளும் முடக்கப்பட்டுள்ளன. ஆனால், முழுவதும் அந்நாடு முடக்கப்படவில்லை, முறையான காரணங்களின்றி வீட்டை விட்டு வெளியே வருகிறவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆஸ்திரேலியாவில் பள்ளிகள் மூடப்படவில்லை, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதா வேண்டாமா என்ற முடிவைப் பெற்றோர்கள் எடுக்கலாம் என அறிவித்திருக்கிறது. திருமணங்களில் ஐந்து பேர் வரை பங்கேற்கவும், இறப்பு என்றால் பத்துப் பேர் வரை பங்கேற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான மாநிலங்கள், தனி மாகாணங்கள் முழு முடக்கத்தை அறிவித்து, பயண தடையை அமல்படுத்தி, எல்லைகளை மூடியிருக்கின்றன.

ஆஸ்திரேலியா

யுனைடெட் கிங்டம்:

மார்ச் 23 முதல் நாடு தழுவிய முடக்கம் அங்கு அமலில் இருக்கின்றது. பிற நாடுகளைப் போலவே அத்தியாவசிய வேலைகள் செய்யவும், மருந்து மற்றும் மளிகைப் பொருள் வாங்கவும் மட்டுமே மக்கள் வெளிவர அனுமதியளித்திருக்கிறது. கூடுதலாக, மக்கள் உடற்பயிற்சி செய்யவும் வெளியே வரலாம் என்று அறிவித்திருக்கிறது. இறப்பு நிகழ்வுகள் தவிர வேறு எதற்காகவும் மக்கள் இரண்டு பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா

உலகின் வல்லரசுதான், பில்டிங் ஸ்ட்ராங் என்றாலும் டிரம்ப் எனும் ரொம்பவும் வீக்கான பேஸ்மென்ட்டால் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. உலகிலேயே மிக அதிகமாக Covid -19 நோய்த் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு இருப்பது இங்குதான். அவசரகால நிலை எல்லாம் பிரகடனம் செய்தாகிவிட்டது. ஆனால், ஏப்ரல் 1-ம் தேதி வரை இங்கு நாடு தழுவிய முடக்கம் (lockdown) அறிவிக்கப்படவில்லை. ஆனால், அமெரிக்காவின் சில மாகாணங்கள், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி முடக்கத்தை அறிவித்துள்ளன. ஆனால், நாடு தழுவியதாக ஒரு உத்தரவு இல்லாத காரணத்தினால், அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களிலும் ஒரேமாதிரியான நடவடிக்கைகள் அங்கு எடுக்கப்படவில்லை. அமெரிக்கர்கள் ஒரு மாகாணத்திலிருந்து இன்னொரு மாகாணத்திற்குப் பயணிப்பதில் எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.

அதிபர் டிரம்ப் முழு முடக்கம் அறிவிப்பதைப் பற்றிக் குழப்பமாகவே பேசிக்கொண்டிருக்கிறார். ஒரு நாள் முடக்கம் அறிவிக்கப்படும் என்றார், மறுநாள் பத்திரிகையாளர் சந்திப்பில் அமெரிக்காவில் முடக்கம் கொண்டு வந்தால் தேவையில்லாத பதற்றம் ஏற்படும். அது பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றார். அதற்குச் சட்டத்தில் இடம் இல்லை என்றார். இறுதியில் அரசு, மக்கள் பயணத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய சில அறிவுரைகளை மட்டும் கொடுத்து நிறுத்திக்கொண்டது. இந்த இக்கட்டான சூழலில், கூடுதல் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என அமெரிக்காவின் அதிபர் பேசுவதைப் பல ஊடகங்கள் ஒளிபரப்புவதில்லை, என்பது கூடுதல் செய்தி.

இவை தவிர ஐரோப்பிய யூனியன், பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, டென்மார்க், நார்வே, போலந்து, செக் ரிபப்லிக், மொரோக்கோ, கென்யா, குவைத், ஜோர்டான், அர்ஜென்டினா, இஸ்ரேல், சவூதி அரேபியா மலேஷியா ஆகிய நாடுகள் 15 நாள்கள் முதல் ஒரு மாத காலம் வரை நாடு தழுவிய முடக்கத்தை அறிவித்துள்ளன.

அமெரிக்கா

Also Read: `21 நாள் லாக் டவுன்… விதியை மீறினால் என்ன தண்டனை?’ – உள்துறை அமைச்சகத்தின் கைட்லைன்ஸ்

உண்மையில், Covid -19 கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராட இந்த முழு முடக்கங்கள் மட்டுமே தீர்வு என்பதில்லை, தென் கொரியா,சிங்கப்பூர் போன்ற பல நாடுகள் அவையின்றியே வெற்றிகரமாக இந்த நோய் பரவுவதைத் தடுத்திருக்கின்றன. ஆனால், விரைந்து முடிவெடுக்காமல், தாமதப்படுத்திய நாடுகளில் சமூகப் பரவல் தொடங்கும் என்ற அச்சத்தின் அடிப்படையிலேயே இப்படி இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டிருக்கிறது.

சீனாவில், முதல் நபர் நோய்த் தொற்றோடு கண்டறியப்பட்ட மூன்றாவது வாரத்தில் அந்த மொத்த பகுதியையும், நோய் பரவ வாய்ப்பிருக்கும் மாகாணங்களையும் மொத்தமாக முடக்கி Covid -19 கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், இத்தாலி 39 நாள்களுக்குப் பிறகும், ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் 43 நாள்களுக்குப் பிறகும், UK, ஜெர்மனி, பிரான்ஸ் 50 நாள்களுக்குப் பிறகும் தான் முழு முடக்கத்தை அமல்படுத்தின. நாடு முழுவதும் முடக்கப்பட்டு 12 நாள்களுக்குப் பிறகே இத்தாலியில் இறப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இந்தப் போர், நம் உயிருக்கு மட்டும் அச்சுறுத்தல் இல்லை, இதனால் நம் பொருளாதாரம் உட்படப் பல பாதிப்புகள் நிகழும் பெரும் நாடுகள் தொடங்கி, உள்ளேயே இருப்பதில் உளவியல் ரீதியாக, உடல் ரீதியாக எனத் தனிநபர் வரை பல மாற்றங்களைக் காணவிருக்கிறோம். ஆக மக்கள் வீட்டிலிருப்பது மட்டுமே தற்போது பல நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் ஒரே தீர்வு. வீட்டில் இருங்கள்… பாதுகாப்பாக இருங்கள். மிக முக்கியமாக, தைரியமாக இருங்கள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.