டெல்லியில் கொரோனா தொற்று உள்ளதாக 8 மருத்துவர்கள் கண்டறியப்பட்டிருக்கிறார்கள். அதேபோல இந்தியா முழுவதும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என்று பல ஆயிரம் பேர் மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். மருத்துவர்களுக்கே இந்தி கதி என்றால், கொரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை செய்யும் வைராலஜிதுறை சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர்களின் கதி எப்படி இருக்கிறது தெரியுமா?

தமிழகம் மிகப்பெரிய ஆபத்தை நோக்கிப் போய்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 300ஐத் தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்படைந்தவர்கள் பட்டியலில் தமிழகம் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

corona

தமிழகத்தில் சுமார் 309 பேருக்குக் கொரோனா தொற்று உள்ளது உறுதியாகியுள்ளது. அவர்களில் ஆறு பேர் குணமாகியுள்ளனர். இன்னும் பல நூறு பேரின் தொண்டையிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனை கூடங்களில் டெஸ்டிங்கில் உள்ளன. கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதா என்று கண்டறியும் முதற்கட்ட பரிசோதனை, சுமார் 10 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இயங்கும் பரிசோதனைக்கூடங்களில் நடக்கின்றன. தேசிய தரச்சான்று பெற்ற தனியார் பரிசோதனைக்கூடங்கள் ஆறில் நடக்கின்றன. இவைதவிர, இரண்டாம் கட்ட கன்ஃபர்மேஷன் டெஸ்டிங் செய்யும் பரிசோதனைக்கூடங்கள் மூன்று. சென்னை கிண்டியில் உள்ள கிங்கிஸ் இன்ஸ்டிட்யூட், திருவாரூர் மற்றும் தேனி ஆகிய ஊர்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகள், சிறிய அளவில் சென்னை அரசு பொதுமருத்துவமனை பரிசோதனைக்கூடங்களில் நடக்கின்றன.

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு திரும்பியவர்கள் சுமார் ஆயிரம் பேருக்கு மேல். இவர்களைப்போல, வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் என்றெல்லாம் பார்த்தால்… தினப்படி கொரோனா தொற்று உள்ளதா என்று டெஸ்டிங் நடத்த ஏராளமான சாம்பிள்கள் குவிகின்றன. ஆனால், பயங்கரமான கொரோனா வைரஸ் தாக்கத்தைப் பரிசோதிக்க உலகத் தரம் வாய்ந்த பி.எஸ்.எல். 3 (பயோ சேஃப்டி லெவல் 3) என்கிற லெவலில் பரிசோதனைக்கூடங்களின் வசதி இருக்கவேண்டும். அப்போதுதான், அந்தப் பரிசோதனைக்கூடங்களில் பணியாற்றும் வைராலஜி துறை சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர்களுக்குப் பாதுகாப்புகள் இருக்கும். ஆனால், தமிழகத்தில் தற்போது பரபரப்பாகச் செயல்படும் எந்தப் பரிசோதனைக்கூடங்களிலும் பி.எஸ்.எல். 3 வசதி இல்லை. பி.எஸ்.எல். 2 என்கிற லெவலில்தான் இருக்கின்றன. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பி.எஸ்.எல். 3 வசதி உள்ள பரிசோதனைக்கூடங்கள் இருக்கின்றன. அவை போல, தமிழகத்திலும் கொண்டுவரவேண்டும் என்று பலமுறை மருத்துவ நிபுணர்கள் தமிழக அரசிடம் சொல்லியும், அவர்கள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அது இப்போது மருத்துவ நிபுணர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் உள்ள அனைத்து லேப்களுக்கும் தலைமை லேப் என்றால் அது சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிட்யூட். அங்கே இரவு பகலாகப் பணியில் இருக்கும் தற்காலிகப் பணியாளர்கள் சாம்பிள்களில் வைரஸ் தாக்கம் உள்ளதை உறுதிப்படுத்துகிறார்கள். பிப்ரவரி மாதத்தில் ஆரம்பித்து மார்ச் 31வரை சுமார் 2500 சாம்பிள்கள் இதுவரை டெஸ்டிங் செய்திருக்கிறார்கள். தொடர்ந்தும் செய்துகொண்டிருக்கிறார்கள். அங்கு மார்ச் 15 வரை 6 நிபுணர்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர். தற்போது அதில் ஓரிருவர் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருந்தாலும், தினப்படி வருகிற சாம்பிள்களை டெஸ்டிங் செய்ய இன்னும் நூற்றுக்கணக்கான டெக்னிஷியன்கள் தேவையாம். அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து போர்க்கால அடிப்படையில் பணிபுரிய வைக்கவேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். கிங்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் பணியாற்றும் பணியாளர்களின் குடும்பத்தினர் மிகவும் கவலையுடன் இருக்கிறார்களாம்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை டெஸ்டிங் செய்யும் பரிசோதனைக்கூடங்களுக்கு மத்திய அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகள் டெல்லியிலிருந்து தினமும் தொடர்புகொண்டு விசாரித்து வருகிறார்கள். தினமும் வீடியோ கான்ஃப்ரன்ஸில் இங்குள்ள நோய்த் தொற்றியல் சிகிச்சை மருத்துவர்களிடம் விசாரிக்கிறார்கள். பாசிட்டிவ் கேஸ்கள் விவரங்களை உடனுக்குடன் ஆன்லைனில் பதிவு ஏற்றும்படி சொல்கிறார்கள். இந்த விவரமும் மாநில அரசு அறிவிக்கும் விவரமும் ஒன்றாக இருக்கவேண்டும். வித்தியாசங்கள் வரக்கூடாது என்று கறாராக உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்கள். பரிசோதனைக்கூடங்கள் தரும் ரிசல்ட்டுகள் சரியாக இருந்தால்தான், இந்திய அளவில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிப்பது.. மக்களை தனிமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைளை எடுக்கமுடியும். அதற்கான மருத்துவ உதவி, நிவாரண உதவிகளை தர ஆலோசனை கூற முடியும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் தமிழகத்தில் பரிசோதனைக்கூடங்கள் நிலவரம் உள்ளதா என்று சம்பந்தப்பட்ட வைராலஜிதுறை சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர்கள் சிலரிடம் விசாரித்தோம்.

மூடப்பட்ட கோயில்கள்

அவர்கள் சொன்ன விஷயங்கள் இவைதான்..

‘தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் எனத் தெரிகிறது. தற்போது நூற்றுக்கணக்கானவர்கள் அரசின் தீவிரக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். பாக்டீரியாவால் பரவும் தொற்றுகளை விட கடந்த நாற்பது ஆண்டுகளில் வைரஸ் தொற்றுகளால் ஏற்படும் மனித இழப்புகள் அதிகம். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் உலக அளவில் அதிகமாகப் பரவக்கூடிய வைரஸ் தொற்று நோய்கள் மனிதக் குலத்துக்குப் பெரும் சவாலாக இருந்துவருகின்றன. உதாரணத்துக்கு, பத்து ஆண்டுகளுக்கு முன்பு பன்றிக்காய்ச்சல் தொற்று பரவியது. 225 நாடுகளில் 2 லட்சம் பேர் இறந்தனர். அதன்பிறகு, தற்போது கொரோனா தொற்று பரவிவருகிறது. 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவால் இதுநாள் வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இந்தியாவைப்பொறுத்தவரையில் மத்திய அரசு அறிவித்துள்ள விவரங்களின் படி இதுவரை சுமார் 2000 பேருக்கு மேல் வைரஸ் தொற்று உள்ளதாகவும், அதில் சுமார் 73 பேர் வரை இறந்திருப்பதாகவும் தெரிவிக்கிறது.”

நோய்த் தொற்றியல் சிகிச்சை மருத்துவர் ஒருவர் கூறுகிறார். ”வைரஸ்களால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற சூழ்நிலையில், சாம்பிள்களை டெஸ்டிங் செய்யும் பரிசோதனை மையங்கள் பெரிய அளவில் தேவைப்படுகின்றன. ஆங்காங்கே புதிய மருத்துவக் கல்லூரிகளை அரசுகள் ஆரம்பித்து என்ன புண்ணியம்? முழுக் கட்டமைப்பு கொண்ட பரிசோதனை மையங்கள் அமைப்பது, வைரஸ் தொற்றுகளை டெஸ்டிங் செய்யும் பயிற்சி பெற்ற டெக்னீஷியன்களையும் பணியில் அமர்த்துவது ஆகியவற்றிலும் கவனம் செலுத்தவேண்டாமா?. பி.எஸ்.எல். 3 தரம் கொண்ட பரிசோதனை மையங்களை ஏன் இதுவரை ஆரம்பிக்கவில்லை? மத்திய அரசின் சுகாதாரத்துறையினர் மாநில அளவில் வைராலஜி டெஸ்டிங்கிற்காக நிறைய உதவுகிறார்கள். ஆலோசனை சொல்லுகிறார்கள். பயிற்சி தருகிறார்கள். அதையெல்லாம் மாநிலங்கள் முழுமையாக பயன்படுத்துவதில்லை. அதற்கு தமிழகம் ஒரு உதாரணம்” என்கிறார்.

அதி வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸால் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுவருகிறார்கள். இவர்களுக்கு வைரஸ் தொற்று உள்ளதா என்று எப்படி கண்டறிகிறார்கள்? சென்னையில் உள்ள இன்னொரு நோய்த் தொற்றியல் சிகிச்சை மருத்துவர் நம்மிடம் கூறியதாவது:

”ஒருவரின் தொண்டையில் உள்ள ஈரப்பதத்தை ஒரு பஞ்சில் தடவி அதில் உள்ள வைரஸ் கிருமிகளை டெஸ்ட்டுக்காக லேப்புக்கு அனுப்புகிறார்கள். வைரஸ் தொற்றைக் கண்டறியும் கருவியின் பெயர் ரியல் டைம் பி.சி.ஆர். இந்தக் கருவி, சென்னை கிங்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் பரபரப்பாகச் செயல்படுகிறது. இதே கருவி தமிழகத்தின் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைகள், தனியார் மருத்துவனைகளிடமும் உள்ளன. முதலில் சாம்பிள்களை ஸ்கீரினிங் டெஸ்ட் செய்கிறார்கள். இதற்கு 7 மணி நேரம் பிடிக்கும். இரண்டாவது கட்டமாக நடக்கும் கன்ஃபர்மேஷன் டெஸ்ட் செய்ய ஐந்து மணி நேரம் பிடிக்கும். கிங்ஸ் இன்ஸ்டிட்யூட், தேனி மற்றும் திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் உள்ள பரிசோதனை மையங்களில் இதற்கான டெஸ்டிங் நடக்கின்றன. ஸ்கிரீனிங் டெஸ்ட் முடித்து, இறுதியாக உறுதிப்படுத்தும் டெஸ்டிற்காக இந்த மூன்று லேப்புகளுக்குதான் சாம்பிள்களை தற்போது அனுப்பி வருகிறார்கள்.

இந்தியாவில் சாம்பிள்களை டெஸ்ட்டிங் செய்யும் சுமார் 100 லேப்களை மேற்பார்வையிடும் லேப் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ளது. அங்குதான் தேசிய வைராலஜி நிறுவனம் செயல்படுகிறது. அங்கிருந்துதான் மாநிலங்களில் செயல்படும் லேப்களின் டெஸ்டிங் விவரங்களைக் கேட்டறிந்து பிரதமர் மோடிக்குத் தகவல் கொடுக்கிறார்கள். தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் மீடியாக்களிடம் பேசும்போது, தமிழகத்தில் 17 இடங்களில் லேப் வசதி உள்ளது என்கிறார். ஆனால், இதுபோதுமா என்றால், போதாது. இப்போதைய சூழ்நிலை நீடித்தால், தமிழகத்துக்குத் தேவை நூற்றுக்கணக்கான லேப்கள். குறிப்பாக, ஈரோடு, சேலம், பெருந்துறை ஆகிய இடங்களில் இருந்துதான் அதிக சாம்பிள்கள் வருகின்றன. உடனுக்குடன் டெஸ்ட்டிங் நடத்த அங்கெல்லாம் உறுதிப்படுத்தும் லேப் வசதி மிகவும் குறைவு. தேவையான டெக்னிக்கல் ஆலோசனைகளைத் தருகிறோம்” என்கிறார்.

corona

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கொரோனா போன்ற வைரஸ் தொற்றுக்கான, கன்ஃபர்மெஷேன் ஆய்வு நடத்தும் லேப் வசதியை விரிவுப்படுத்தும்படி, ஏற்கெனவே மத்திய அரசு தரப்பிலிருந்து தமிழக அரசை வற்புறுத்தி வந்தது.

முதலில் சீரியஸாக எடுத்துக்கொள்ளாத தமிழக அரசு தற்போதுதான் கவனிக்கவே ஆரம்பித்துள்ளதாம். தற்போதுள்ள மருத்துவர்களில் வைராலஜி துறையில் நல்ல அனுபவம் உள்ள மருத்துவர்களும் இருக்கிறார்களாம். இவர்களை அடையாளம் கண்டு ஆர்வம் உள்ளவர்களுக்கு ஸ்பெஷல் பயிற்சி தரவேண்டும் என்று வைராலஜிதுறை நிபுணர்கள் அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறார்கள்.

Also Read: 119 பேர் கண்காணிப்பு… ஈஷாவில் நடந்தது என்ன..?

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.