கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.

சோழர்களின் குலதெய்வம் நிசும்பசூதனி… இல்லம் தேடிவரும் இறை தரிசனம் #worshipathome

– வீடியோ (கிருத்திகா, சக்தி விகடன் வாசகர் )

– சி.வெற்றிவேல்.

Posted by Sakthi Vikatan on Thursday, April 2, 2020

அவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, சோழர்களின் குல தெய்வமான நிசும்பசூதனி திருக்கோயில்.

பிற்காலச் சோழப் பேரரசை நிறுவிய விஜயாலயன் தன் குலம் தழைக்கத் தஞ்சாவூரில் நிசும்பசூதனி எனும் தேவியை பிரதிஷ்டை செய்தான். தற்போது, நிசும்பசூதனி தேவி, தஞ்சாவூர் கீழ வாசல் பகுதியில் வடபத்ரகாளி கோயில் என்னும் சிற்றாலயத்தில் அமர்ந்து, தன்னை நாடி வருபவர்களுக்கு அருள்பாலிக்கிறாள். சோழ சாம்ராஜ்யப் பெருமைகளின் திருவடிவமாக அன்னை பராசக்தி கருவறையில் வடக்கு நோக்கிக் கம்பீரமான திருக்கோலத்தில் வீற்றிருக்கிறாள்.

நிசும்பசூதனி

அன்னை பராசக்தி துர்கையாக, திரிபுரசுந்தரியாக, காளிதேவியாகப் பல்வேறு வடிவங்கள் கொண்டு தீமையின் உருவாகத் திகழ்ந்த அரக்கர் பலரை வதம் செய்தாள்.

தேவியானவள் துர்கா பரமேஸ்வரியாக, ரத்தபீஜன் எனும் அரக்கனை அழித்தபோது முதலில் நிசும்பனும் பின்னர் அவன் தம்பி சும்பனும் தேவியுடன் போர் தொடுத்தனர். தேவி, இறுமாப்புடைய அரக்கர் இருவரையும் அழித்தாள். அப்போது அவள் கொண்ட வடிவே நிம்பசூதனி.

சுமார் 7 அடி உயரமுள்ள நிசும்பசூதனியின் திருமேனி எட்டுக் கரங்களோடு காணப்படுகிறது. அன்னை, பீடத்தின் மீது ஒரு காலை மடித்து, மறு காலை தரையில் கிடக்கும் அசுரனின் தலைமீது பதித்தவாறு அமர்ந்துள்ளாள். சோழர்களுக்கு வெற்றியை அருளிய நிசும்பசூதனியை வழிபட்டு பேறு பெறுவோம்…

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.