சீனா கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருவதாகக் கூறினாலும் , அந்நாட்டின் கூற்று உண்மைக்குப் புறம்பானதாக இருக்கலாம் என்கின்றனர் வல்லுநர்கள்.
கொரோனா எனும் அரக்கனின் பிடியிலிருந்து மீண்டு வருவதாகக் கூறுகிறது சீனா. ஆனால் மேற்கத்திய நாடுகளோ சீனா பாதிப்புகளின் விவரங்களை முழுமையாக வெளியிடவே இல்லை என்று சந்தேகிக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தொடர்பாக சீனா வெளிப்படையான தரவுகளை வெளியிடவில்லை எனக் குற்றம்சாட்டுகின்றன.
வைரஸ் பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை சீனா குறைத்துக் காட்டியதாக கூறப்படுவதால் அங்கு உண்மையிலேயே வைரஸ் அபாயம் தற்போது நீங்கிவிட்டதா என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது. வைரஸ் பரவல் குறித்த தகவலை முதலிலேயே வெளிப்படையாகத் தெரிவிக்காதது, கொரோனா பற்றி எச்சரித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுத்தது, உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி சீனா உண்மையை மறைக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
“தமிழகத்தில் 90 ஆயிரம் பேர் கண்காணிப்பில் உள்ளனர்” – பீலா ராஜேஷ்
ஆனால் ஆரம்பம் முதலே வெளிப்படையாகத் தான் இருக்கிறோம் எனக் கூறி குற்றச்சாட்டுகளை மறுக்கிறது சீனா. தேவையில்லாமல் சீனா மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இத்தகைய கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்த்து குடிமக்களைப் பாதுகாப்பதில் அமெரிக்கா கவனம் செலுத்தலாம் எனச் சீனா அறிவுரை கூறியுள்ளது. சீனாவைச் சேர்ந்த பிரபல இதழான CAIXIN, வுஹானில் வைரஸால் உயிரிழந்ததாக அரசு கூறும் எண்ணிக்கையை விடப் பல மடங்கு அதிகமாக உயிரிழந்தவரின் அஸ்தியை வைக்கும் குடுவை விற்கப்பட்டுள்ளதாகக் கூறி சந்தேகத்தை வலுப்படுத்தி இருக்கிறது.
பல இடங்களில் கொரோனா பரிசோதனைக்காகவே மக்கள் நான்கைந்து நாட்கள் காத்திருந்ததாகவும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதை அறியாமலே அவர்கள் இறந்ததாகவும் சொல்லப்படுகிறது. முழுமையான பரிசோதனை செய்யாமல் , நிமோனியாவால் இறந்தவர்கள் பட்டியலில் பலரது பெயர்கள் சேர்க்கப்பட்டதால் அது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கிறது.
இவ்வாறு பல சந்தேகங்கள் எழுந்த நிலையில் தான், அறிகுறிகள் ஏதும் வெளிப்படையாகத் தெரியாமல் நோய்த் தொற்றுக்குச் சிகிச்சை பெறுவோரின் asymptomatic cases விவரங்களை சீனா வெளியிடத் தொடங்கியது. வுஹான் உள்பட சீனாவின் பல்வேறு நகரங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் வழக்கம் போல நடமாடத் தொடங்கியுள்ளனர். இறைச்சி சந்தைகள் கூட வழக்கம் போலச் செயல்படத் தொடங்கியுள்ளன.
ஆனால் இது மீண்டும் அதாவது இரண்டாவது முறையாக இங்கு வைரஸ் பரவுவதற்குக் காரணமாக அமைந்திடுமோ என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது. கட்டுப்பாடுகளை மேலும் சில காலம் நீட்டிக்கலாம் என்றும் சீனாவுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM