கொரோனா பாதிப்பிலிருந்து மீள வல்லரசு நாடுகள் கடுமையாகப் போராடி வருகின்றன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், சீனா இவை அனைத்துமே வல்லரசு நாடுகள். ஆனால், இன்று கண்ணுக்குத் தெரியாத வைரஸால் பாதிக்கப்பட்டு தங்கள் நாட்டு மக்கள் கொத்து கொத்தாக மடிந்ததையும் மடிவதையும் பார்த்துக்கொண்டிருக்க மட்டுமே முடிகிறது. கொரோனா வைரஸால் உலகம் முழுக்க 9.5 லட்சம் மக்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் கொரோனாவின் பிடியிலிருந்து தப்பித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அத்தனை நாடுகளுமே பாதுகாப்புத்துறைக்கு பல லட்சம் கோடிகளை ஒதுக்குபவை.

சூசான்னே

பாதுகாப்புத்துறைக்கு அதிகப்படியான நிதியை ஒதுக்கும் அமெரிக்காவில், இன்று போதுமான வென்டிலேட்டர்கள் இல்லை. அமெரிக்காவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நியூயார்க் நகரில் மட்டும் 30,000 வென்டிலேட்டர்கள் தேவைப்படுகின்றன. அமெரிக்கா மட்டுமல்ல வல்லரசு நாடுகள் ஒவ்வொன்றுமே வென்டிலேட்டர்கள் தட்டுப்பாட்டால் அல்லாடிக் கொண்டிருக்கின்றன.

கொரோனா நுரையீரலைப் பாதிக்கும் நோய் என்பதால் ஆக்ஸிஜன் கொடுப்பதற்காக வென்டிலேட்டர்கள் அவசியத் தேவை. மருத்துவத்துறையில் வளர்ந்துவிட்ட நாடாகக் கருதப்படும் பெல்ஜியத்தில் 90 வயது நிறைந்த சூசான்னே என்ற மூதாட்டியைக் கொரோனா தாக்கியது. மூதாட்டியை மருத்துவமனையில் அனுமதித்தபோது, வென்டிலேட்டர் தட்டுப்பாடு இருப்பதை அவர் புரிந்துகொண்டார். இதனால், `எனக்கு வென்டிலேட்டர் வேண்டாம். இள வயது நோயாளிக்குப் பொருத்துங்கள்’ என்று கூறி விட்டு அமைதியாக மரணமடைந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இறக்கும் தருவாயில், `நான் அழகான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன். மன நிறைவோடு மரணத்தைத் தழுவுகிறேன்’ என்று சூசான்னே சொன்னபோது சுற்றியிருந்த மருத்துவர்கள், நர்ஸ்களின் கண்களில் நீர் திரண்டுள்ளது.

கொரோனா நுரையீரலைத் தாக்கும் நோய். அதனால், இப்போது வென்டிலேட்டர் அதிகமாகத் தேவைப்படுகிறது. நாளை இன்னொரு வைரஸ் வேறு ஒரு உறுப்பை பாதிக்கும் வகையில் உருவானால் அப்போது அதற்கான தேவைக்காக உலகம் அலையுமா? அமெரிக்காவில் இன்ஷூரன்ஸ் இல்லாததால் கொரோனா பாதித்த இளைஞர் ஒருவருக்கு சிகிச்சையளிக்க மறுத்த சம்பவமும் நடந்துள்ளது. பல நாடுகள் போலவே இந்தியாவிலும் மருத்துவத்துறைக்கு மிகக் குறைவான அளவே பட்ஜெட் ஒதுக்கப்படுகிறது. நடப்பாண்டில் மருத்துவத்துறைக்கு ரூ. 69,000 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், பாதுகாப்புத்துறைக்கு ரூ. 4,71,378 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த நாட்டையும் எங்களால் வீழ்த்த முடியுமென்று கொக்கரிக்கும் அமெரிக்கா கூட, கொரோனா வைரஸ் நோயால் திணறிக் கொண்டிருக்கிறது. இனிமேலாவது உலக நாடுகள் பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்குவதில் பாதியாவது மருத்துவத்துறைக்கு ஒதுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.

டாக்டர் டென்னிஸ் கோயில்பிள்ளை

மருத்துவத்துறைக்கு மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் டென்னிஸ் கோயில் பிள்ளையிடத்தில் பேசியபோது, “இந்திய மருத்துவ கவுன்சில் காலம்காலமாக மத்திய அரசிடத்தில் இந்தக் கோரிக்கையை விடுத்து வருகிறது. மொத்த ஜி.டி.பி-யில் 2.5 சதவிகிதம்தான் ஒதுக்குகிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் 7 முதல் 9 சதவிகிதம் வரை ஒதுக்குகிறார்கள். இந்தக் கொரேனா பிரச்னை எதிர்பார்க்காமல் வந்தது. அதனால், அந்த நாடுகள் வென்டிலேட்டருக்கு அலையும் நிலை உருவாகியுள்ளது. மற்றபடி ஐரோப்பிய நாடுகளில் ஹெல்த் கேர் நன்றாகவே இருக்கும். இனிமேலாவது, ஹெல்த் கேர் பிரிவுக்கு மத்திய அரசு கூடுதலாக நிதி கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.

கொரோனா இந்தியாவுக்கு நுழைந்து 30 நாள்களாகிறது. இப்போதுதான் N 95 மாஸ்க் ஆர்டர் செய்துள்ளனர். PPE எனப்படும் Personal Protection Equipments கூட சரியாகக் கிடையாது. இதனால், டாக்டர்கள், நர்ஸ்கள் கூட பணிக்குச் செல்ல பயப்படுகின்றனர். இப்படியிருந்தால், கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் மருத்துவர்கள் எப்படிப் பணிபுரிய முடியும்? போலீஸார், தூய்மைப் பணியாளர்களைப் பாதுகாக்கவும் நல்ல மாஸ்க், கையுறை போன்றவை அளிக்கப்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் 21 நாள்கள் லாக்டவுன் செய்தது நல்ல விஷயம்தான். அதனால்தான் கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது என்று கருதுகிறேன். கொரோனாவை போலலே டாஸ்மாக்கும் கொடியது. மது குடிப்பதால், ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் இறக்கின்றனர். இந்த லாக் டவுனைப் பயன்படுத்தி மதுக்கடைகளுக்கு அரசு முடிவுகட்ட வேண்டும்” என்றார்.

அதே வேளையில், இந்தியாவில் கொரோனாவை இந்தியா சிறப்பாகவே கட்டுப்படுத்தி வருவதாக மருத்துவத்துறை நிபுணர் தேவதாசன் கூறுகிறார். தேவதாசன் ஆய்வுப்படி, “மார்ச் 31-ம் தேதி வரை இந்தியாவில் 1,251 பேர்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே காலகட்டத்தில் இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, நாடுகளில் பல மடங்கு கொரோனா பரவியுள்ளது. அமெரிக்காவில்அதிகபட்சமாக 1,43,025 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட்-19 பரவிய 195 நாடுகளில் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா 41-வது இடத்தில்தான் உள்ளது. ஸ்பெயினில் 10 லட்சம் பேரில் 1,686. 4 சதவிகிதம் பேரையும், இத்தாலியில் 1,616. 5 சதவிகிதம் பேரை கொரோனா தாக்கியுள்ளது. இந்தியாவில் 10 லட்சம் பேரில் 0.8 சதவிகிதத்தினரை மட்டுமே கொரோனா தாக்கியுள்ளது. இந்தியாவின் மக்கள் தொகைக்கு இவ்வளவு குறைந்த அளவு நபர்கள்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது நல்ல அறிகுறியே!

செவிலியர்

இந்தியாவில் டெஸ்டிங் குறைவான மக்களிடத்தில் செய்யப்படுவதால், எண்ணிக்கை குறைவாக இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், கோவிட் அறிகுறி உள்ளவர்களுக்கும் தாக்கியவர்களுக்கும் ஒரே வித சிகிச்சைதான் அளிக்கப்படுகிறது. ஒவ்வோரிடத்திலும் டெஸ்டிங் செய்துகொண்டிருப்பது ஊழியர்களின் நேரத்தை விரையம் செய்யும் விஷயம் . கொரோனா பாதிப்பால் இந்தியாவில் லட்சக்கணக்கானோர் இறந்து போவார்கள் என்பது தவறான கணிப்பு. ஹூபே மாகாணத்தில் 5.65 கோடி மக்கள் வசிக்கிறார்கள். அதில், 3,295 பேர் கோவிட்டால் பலியானார்கள். அதாவது ஒரு லட்சம் பேரில் 5 பேர் இறந்திருக்கிறார்கள். இந்தியாவில் தமிழகம் போன்ற 6 கோடி மக்கள் கொண்ட மாநிலத்தில் கோவிட்டால் 1 லட்சத்துக்கு 1 சதவிகித மக்களே பாதிக்கப்பட வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவத்துறைக்கு மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டுமா என்று பொருளாதார நிபுணர் ஷியாம் சேகரிடத்தில் பேசியபோது, “பாதுகாப்புத்துறையில் லட்சக்கணக்கான ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டியது உள்ளது. ஆயுதக் கொள்முதல் இதுவெல்லாம் இருக்கிறது. மத்திய அரசு மட்டும்தான் பாதுகாப்புத்துறைக்கு நிதி ஒதுக்கும். மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இரண்டுமே ஹெல்த் கேர் துறைக்கு நிதி ஒதுக்குகின்றன. இந்தியாவில் தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இன்ஷூரன்ஸ் வழங்கப்படுகிறது. இப்போது, ஒவ்வொரு மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, மெடிக்கல் கல்லூரியும் அமைக்கப்பட வேண்டும் என்ற லட்சியத்தை நோக்கி இந்தியா போய்க்கொண்டிருக்கிறது” என்றார்.

Also Read: `முதலில் போவது நீயா.. நானா?’- அமெரிக்க நிலவரத்தை வேதனையுடன் விவரிக்கும் தமிழர் #MyVikatan

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.